ஆடிப்பெருக்கு வல்வில் ஓரி விழா!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல்லில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் கொல்லிமலையில் அமைந்துள்ளது அறப்பளீஸ்வரர் கோயில். 
ஆடிப்பெருக்கு வல்வில் ஓரி விழா!


நாமக்கல் மாவட்டம், நாமக்கல்லில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் கொல்லிமலையில் அமைந்துள்ளது அறப்பளீஸ்வரர் கோயில். 

சித்தர் பூமியான கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இத்திருக்கோயிலின் தல வரலாறு அதிசயங்கள் நிறைந்தது.

இங்கு தவம் செய்த சித்தர்கள் தங்களது வழிபாட்டிற்காக ஒரு லிங்கத்தை ஸ்தாபித்தனர். அறம் செய்வதைப் பின்பற்றிய சித்தர்களால் நிறுவப்பட்டதால் "அறப்பளீஸ்வரர்' எனப் பெயர் பெற்றார். பிற்காலத்தில் இந்த லிங்கம் இருந்த இடம் விளைநிலமாக மாறியிருந்தது. கந்தவேள் என்ற விவசாயி நிலத்தை உழுதபோது கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது. அதை வெளியே எடுத்தபோது லிங்கம் ஒன்று இருந்ததைக் கண்ட மக்கள், இலை, தழைகளைக் கொண்டு பச்சைப் பந்தல் அமைத்து சிவனை பூஜித்தனர். பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது. கோயிலுக்கு அருகில் பஞ்சநதி ஓடுகிறது. 

அசரீரி: ஒருசமயம் சிவனை தரிசிக்க வந்த பக்தர்கள் இந்த நதியில் உள்ள மீன்களைப் பிடித்து சமைத்தனர். சிவ தரிசனத்திற்குப் பிறகு அதை சாப்பிடலாம் என்று எண்ணியவர்கள், கோயிலுக்கு வந்து விட்டுத் திரும்பியபோது, சமைக்கப்பட்ட மீன்கள் மீண்டும் உயிர் பெற்று நதியில் குதித்தன. அவ்வேளையில் ஒலித்த அசரீரி "மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவனே வசிப்பதாக'க் கூறியது. 

இந்நிகழ்வின் அடிப்படையில் தினமும் காலையில் சுவாமிக்குப் படைத்த நைவேத்யத்தை நதியில் உள்ள மீன்களுக்கும் படைக்கிறார்கள். அதனால் சுவாமிக்கு "அறுத்த மீன் பொருந்தியிருக்கச் செய்த அறப்பளீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. 

கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,700 அடி உயரம் கொண்ட பசுமையான மலையின் உச்சியில் அற்புதமாக அமைந்த கோயில் இது. கோயிலின் நீளம் 300 அடி. அகலம் 200 அடி. ராஜகோபுரம் இல்லை, மதில் சுவர் இல்லை. கோயிலுக்கு ஒரே திருச்சுற்று உள்ளது. மூலவர் படிமம் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் நாமம் தாயம்மை. அறப்பளீஸ்வரர் "தரும கோசீஸ்வரர்' என்றும், தாயம்மை "தரும கோசீஸ்வரி' என்றும் அழைக்கப்படுகின்றனர். 

மலைப் பகுதியின் மத்தியில் "ஆகாயகங்கை' அருவி கொட்டுகிறது. இந்நீரில் பல மூலிகைகள் கலந்து விழுவதால் நோய்கள் நீங்கும் என மக்கள் நம்புகிறார்கள். அருவிக்குச் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. சற்று தூரத்தில் கோரக்கச் சித்தர், காலாங்கி நாதர் சித்தர் குகைகள் உள்ளன. அம்பிகை அறம் வளர்த்த நாயகி சந்நிதி எதிரே வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர் இருக்கிறார். தாய் பிள்ளையுடன் பாசம் அதிகரிக்க இங்கு வந்து வேண்டுகிறார்கள். இங்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. 

வல்வில் ஓரி விழா: சங்ககாலத்தில் கொல்லிமலைக் காவலனாகவும் வள்ளலாகவும் இருந்த வல்வில் ஓரி வாழ்ந்த பூமி இது. வல்வில் ஓரி காலத்தில் ஆடி பதினெட்டாம் பெருக்கு மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அவ்வழக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. ஆடிப்பெருக்கு திருவிழா "ஓரி விழா' என்று போற்றப்பட்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கொல்லி மலையைச் சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com