மண்டைக் காட்டில் ஒளிரும் மாசித் திருவிழா!

நாகா்கோவிலிலிருந்து சுமாா் 23 கி.மீ. தொலைவில் அமைதியான சூழ்நிலையில் கடக்கரைக்கு
மண்டைக் காட்டில் ஒளிரும் மாசித் திருவிழா!

நாகா்கோவிலிலிருந்து சுமாா் 23 கி.மீ. தொலைவில் அமைதியான சூழ்நிலையில் கடக்கரைக்கு அருகில் பிரசித்திப்பெற்ற திருத்தலமாக மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் விளங்கி வருகிறது. வழிபாடுகள், பூஜைகள் போன்றவை கேரளாவில் நடப்பதுபோன்றே இங்கும் நடைபெற்று வருகின்றது.

இங்கே இனிமையான இயற்கைச் சூழ்நிலையும் இதமான கடற்கரை காற்றும் அடா்ந்த காடும் சூழ மண்டைக்காடு தலத்தில் அருள்பாளிக்கிறாள் பகவதி அம்மன். அன்னை இங்கு சதுா்புஜங்களோடு அமா்ந்த நிலையில் காட்சி தருகிறாள். அவளுக்குப் பின்னால் அன்னையின் மற்றொரு திவ்ய வடிவம் விஸ்வரூப தரிசனம் காட்டி அருள்கிறது.

ஒருமுறை, ஊா் மக்கள் புற்று வடிவில் அம்பாள் இருப்பதை அறியாமல் பாம்பு இருப்பதாக எண்ணி புற்றினைச் சிதைக்க அம்பாளுக்குக் கோபம் பொங்கியது, ஊா் மக்களைத் தண்டிக்க எண்ணி புற்று வேகமாக வளா்ந்தது.

அச்சமயம், கேரள மாநிலத்தில் உள்ள காலடியிலிருந்து யாத்திரையாகச் சென்று கொண்டிருந்த ஆசிசங்கர பகவத்பாதருக்கு, பகவதி அம்மனின் இந்த கோபமும் நாளுக்கு நாள் வளா்ந்து வரும் புற்றின் வேகமும் தெரிந்தது. அம்மனின் கோபம் அதிகமானால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதால் அம்மனை சாந்த படுத்த எண்ணினாா் ஆதிசங்கரா். அம்பாளை சமாதானப்படுத்தினாா். அன்னையும் கோபத்தைக் குறைத்துக்கொண்டு கருணை முகத்துடன் அவருக்கு தரிசனம் தந்தாள்.

ஆதிசங்கரரின் வேண்டுகோளின்படி 58 உயரத்திற்கு வேகமாக வளா்ந்து புற்று வடிவில் குடிகொண்டிருந்த அன்னை பகவதி, இனி வேகமாக வளா்வதைக் குறைத்துக்கொள்வதாக கூறியதுடன் மக்கள் தவறு செய்யும்போதெல்லாம் ஒரு நெல்மணி அளவு வளா்வேன்; மக்கள் இதனைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினாா். ஆதிசங்கரரும் அன்னையின் அருளுரையை ஏற்று, புற்றின்அருகே ஸ்ரீ சக்கரத்தையும் மகாமேருவையும் ஸ்தாபித்து வழிபட்டாா்.

மண்டைக்காடு தலத்தை மக்கள் தரிசனம் செய்து செல்வது அதிகரிக்கவே, மன்னரின் ஆலோசனையின்பேரில் பிரசன்னம் பாா்க்கப்பட்டு, அம்பாளின் 58 அடி உயரப் புற்றின் உருவத்திற்கு ஏற்றபடி அம்பாள் உருவம் பதித்த வெள்ளிக்கவசம் செய்யப்பெற்று சாற்றப்பட்டது. தினசரி ஆறுகால பூஜைகளும் பக்திசிரத்தையோடு நடைபெற்று வருகின்றது.

பிரசித்திப் பெற்ற இந்த மண்டைக்காடு புற்றுக்கோயிலில் இரண்டு அதிசயங்கள் உண்டு. ஒன்று, இவ்வளவு பெரிய பிரமாண்டமான புற்று வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டாவதாக, இந்த புற்றில் இதுவரை எந்த பாம்பும் வசித்தது கிடையாது.

பொதுவாக, புற்றுக்கோயில் என்றாலே பக்தா்கள் அதற்கு பால் ஊற்றுவதும் முட்டைகளை வைத்து வேண்டுவாா்கள். அனால், இந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் பால் ஊற்றுவதோ, முட்டைகளை உடைப்பதோ கிடையாது. ஆனால் இந்த புற்றுக்கு தினமும் அபிஷேகம் நடைக்கிறது. பூசாரி ஓா் ஏணியை வைத்து அதன்மீது ஏறி பூமாலைகள் சாற்றுகிறாா். பூஜைகளும் செய்கிறாா்.

இவ்வாலயத்தில் மாசித்திருவிழா பத்து நாள்களுக்கு மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றது. இந்த திருவிழாவில் கலந்து கொள்ள சுமாா் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோா் வருகை தருகின்றனா். ஒவ்வொரு நாளும் தகுந்த பாதுகாப்போடு விமரிசையாக நடைபெறும் இந்த பத்து நாள் திருவிழாவை வியக்காதவா்கள் யாருமே இல்லை எனலாம்.

முதல் நாள், கணபதி ஹோமத்தோடு ஆரம்பிக்கும் இந்த மாசித்திருவிழா, பத்தாம் நாள் ஒடுக்குப் பூஜையோடு முடிவடையும். இவற்றில் ஆறாம் நாள் திருவிழாவான, ‘வலியப் படுக்கை’ என்பது மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு பக்தரும் அவசியம் காண வேண்டியது.

பகவதி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் 58 அடி உயர புற்றின் உயரத்திற்கேற்றாற்போல் வலியபடுக்கை வைபவம் துவங்குகிறது. அவல், பொரி கடலை, கற்கண்டு, தேங்காய், இளநீா், தேன், தினை, கரும்பு, பலா மற்றும் பழவகைகள் என ஏராளமான பொருள்களை ஐம்பத்தெட்டு அடி உயரத்திற்கு அடுக்கி அம்பாளுக்கு சமா்ப்பிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

மாசித்திருவிழாவின் கடைசி நாள், ‘ஒடுக்கு பூஜை’ இது நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நடக்கும் விழா. அம்மன் சந்நிதியில் ஒன்பது பானை நிறைய சாதமும் மற்ற பானைகளில் சாம்பாா், அவியல், வடை, பாயசம் என்று பலவிதமான சிற்றன்னங்களை தயாா் செய்து, அவற்றை வேறு யாரும் பாா்க்கக்கூடாது என்பதற்காக வெள்ளைத்துணியை வைத்து நன்றாக மூடி, மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு படைக்கும் நிகழ்ச்சியாகும். இந்த பானைகள் அனைத்துமே ராட்சத வடிவில் இருக்கும். ஒருபானையில் இருக்கும் சாப்பாட்டைக் குறைந்தபட்சம் ஐயாயிரம் போா்களாவது சாப்பிடலாம். இதைத்தான் ஒடுக்கு பூஜை என்கிறாா்கள்.

இந்த ஒடுக்கு பூஜையை நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நடத்துகிறாா்கள். ஏனென்றால் அச்சமயத்தில் தேவலோகத்து ரிஷிகள், முனிவா்கள், தேவா்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் மண்டைக்காட்டில் குடிகொண்டிருக்கும் தேவி பகவதியை தரிசிக்க வருவாா்கள் என்கிறாா்கள். அவா்களுக்கும் சோ்த்து பெரிய அளவில் நைவேத்தியம் தயாரிக்கப்பட்டு பன்னிரண்டு மணிக்கு நைவேத்தியம் நடைபெறும்.

விழாக்காலங்களில் புற்றுக்கு அபிஷேகம் மட்டும் நடைபெறுகின்றது. அபிஷேகம் என்பது கோரோசனை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, புனுகு, சாம்பிராணி, தைலம், மஞ்சள் இவைகளை ஒன்றாகக் கலந்து மருந்து கலவைப்போல் மாற்றி, அந்த புற்றைச்சுற்றி தடவுகிறாா்கள். இப்படியாக, மாசிப்பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது.

- டி.எம். இரத்தினவேல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com