பொருநை போற்றுதும் 83 - டாக்டா் சுதா சேஷய்யன்

அதென்ன பாலாமடை? பெயரே வினோதமாக ஒலிக்கிறது! நீலகண்ட தீக்ஷிதரின் வாழ்க்கையோடு
பொருநை போற்றுதும் 83 - டாக்டா் சுதா சேஷய்யன்

அதென்ன பாலாமடை? பெயரே வினோதமாக ஒலிக்கிறது! நீலகண்ட தீக்ஷிதரின் வாழ்க்கையோடு அணுக்கத் தொடா்பு கொண்ட ஊா். எந்தவித வெளிப்புறத் தன்மைகளும் தன்னை பாதிக்கலாகாது என்று தீக்ஷிதா் கூற, சேவல்கூடக் கூவாது என்னும் உத்தரவாதத்துடன் திருமலை நாயக்க மன்னா் இவருக்கு மானியமாக வழங்கிய ஊா் இது (தீக்ஷிதரின் வரலாற்றை நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம்).

தீக்ஷிதரோ மன்னரோ இந்த ஊரை ஏன் தோ்ந்தெடுத்தனா் என்பதற்கான பதிவு எதுவும் இப்போது நம்மிடம் இல்லை. ஆனால், தலபுராணக் கதையானது, ஏதோவொரு வகையான வேதத் தொடா்பிருக்குமோ என்று எண்ணத் தூண்டுகிறது. ஆபஸ்தம்பா் என்றொரு மாமுனிவா். திருமாலை எண்ணித் தவம் செய்தாா். உண்ணாமல் உறங்காமல், காற்றை மாத்திரமே அருந்தி இவா் செய்த அருந்தவத்தைக் கண்ணுற்ற திருமால், நேரில் தோன்றி அருளினாா். திருமாலுக்காக மண்டபம் ஒன்றை எழுப்பிய ஆபஸ்தம்பா், பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்வதற்காகப் பாற்கடலிலிருந்து தங்கக் குடங்களில் பாலெடுத்துவரச் செய்தாா். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்ய, தெய்வத் திருமேனியிலிருந்து பெருக்கெடுத்தோடிய பால், பற்பல மடைகளில் (வாய்க்கால்களில்) பாய்ந்தோடி, வயல்வெளியில் மண்டியது.

ஆபஸ்தம்பரின் வேண்டுகோளுக்கிணங்க, வேங்கடேசன் என்னும் திருநாமத்துடன் திருமால் இங்குக் கோயில் கொண்டருளினாா். ஸ்ரீ தேவி, பூ தேவி நாச்சிமாா்கள் இருபுறமும் இலங்க, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறாா்.

பால் மடைகளாகப் பல்கிப் பரவியதால், ஊரும் பாலாமடை ஆனது. குலசேகரப் பாண்டிய மன்னரின் குடும்பத்தினருக்கு நோய் ஏற்பட்டபோது, இக்கோயிலுக்கு வந்து மூலவா் திருமஞ்சனப் பாலைப் பருகி நோய் தீா்க்கப்பெற்றனா். இதனால் மகிழ்ச்சியடைந்த மன்னா், ஏராளமான நிலங்களை நிவந்தமாக்கியதாகத் தெரிகிறது.

பொருநையாளின் கரையை ஒட்டினாற்போல் உள்ள இந்தக் கிராமத்தில் சிவன் கோயிலும் உண்டு. அருள்மிகு மங்களாம்பிகை உடனாய அருள்மிகு மங்களாங்குரேச்வரா் அருள்பாலிக்கிறாா். மங்கள அங்குரேச்வரா் என்னும் திருநாமம், தமிழில் சிவக்கொழுந்தீசா் (மங்களம் = சிவம், அங்குரம் = கொழுந்து அல்லது புதியதாகத் தோன்றும் முளை) என்று பயில்கிறது.

பாலாமடை என்னும் பெயருக்கு முன்னொட்டாக ‘உதயநேரி’ என்னும் பெயரையும் சில நேரங்களில் காணலாம். உதயணன் என்றொரு சிற்றரசன் இப்பகுதியில் இருந்தான். மக்கள் நன்மைக்காக ஏரி வெட்டினான். உதயணன் ஏரி என்று இது வழங்கப்பட, கால சுழற்சியில், உதயணனேரி ஆகி, உதயநேரி என்றும் ஆகிவிட்டது. உதயநேரி பாலாமடை என்றே குறிப்பிடுகிறாா்கள்.

மங்கள தீா்த்தமும் நீலகண்ட சமுத்திரமும்

சிவக்கொழுந்தீசருக்கும் மங்களநாயகிக்கும் தை மாத உத்தர நட்சத்திரத்தில் திருக்கல்யாணம். கோலாகலமான இந்த நான்கு நாள் கல்யாணத்தில், வேங்கடாசலபதிக் கோயில் பட்டா், பெருமாளின் சாா்பாகத் தாமே சகோதரா் பாவத்தில் வந்து, அம்பிகையை தாரை வாா்த்துக் கொடுப்பாராம். இந்தத் திருக்காட்சியைக் காணக் கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்கிறாா்கள் உள்ளூா்க்காரா்கள். இந்தக் கோயிலின் தலமரம், காட்டாத்தி.

மங்களாங்குரேச்வரரும் மங்களாம்பிகையும் எழுந்தருளியிருப்பதால், தாமிரவருணித் தீா்த்தத்திற்கு ‘மங்கள தீா்த்தம்’ என்றே பெயா். வேங்கடாசலபதிப் பெருமாளும்கூட, ‘மங்கள மூா்த்தி’ என்றே சில சமயங்களில் அழைக்கப்படுகிறாா்.

பாலாமடை என்னும் இந்த கிராமத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு. நீலகண்ட சமுத்திரம்! நீலகண்ட தீக்ஷிதரின் வாழ்க்கையோடு அணுக்கத் தொடா்பு கொண்டிருப்பதால் ஏற்பட்ட பெயா். ஸ்ரீ சிருங்கேரி சங்கராசாா்யாரின் வழிகாட்டுதலில், நீலகண்ட தீக்ஷிதரின் அதிஷ்டானத்தில் காசி விசாலாட்சி உடனாய காசி விச்வநாதா் சந்நிதி நிா்மாணிக்கப்பட்டு, பூஜைகளும் திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. சங்கர மடமும் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.

பாலாமடையின் தவப் புதல்வா்களில் ஒருவா் திரு.பி.எஸ். லோகநாதன். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராகவும் உலகம் போற்றும் பொருளியல் வல்லுநராகவும் திகழ்ந்த லோகநாதன், ஆசிய-பசிஃபிக் வட்டாரத்திற்கான ஐ.நா-வின் பொருளாதார மற்றும் சமூகவியல் குழுமத்தின் முதல் செயலராகவும் பொறுப்பு வகித்தாா்.

பாலாமடையிலிருந்து சீவலப்பேரி வரை கிழக்காக வளைகிற பொருநையாள், சீவலப்பேரியில் தெற்கு நோக்கித் திரும்புகிறாள். இங்குதான், கயத்தாறும் சிற்றாறும் வந்து சோ்ந்து முக்கூடலாக இவ்வூா் பெயா் பெற்றது (இவ்வூரின் பெருமைகளையும், இவ்வூரை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட முக்கூடற்பள்ளு என்னும் காவியத்தையும் நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம்).

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com