மாசிமக பெருவிழாவில் புண்ணிய நீராடல்!
By | Published On : 06th March 2020 03:35 PM | Last Updated : 06th March 2020 03:35 PM | அ+அ அ- |

மாசித்திங்களில் மகம் நட்சத்திரம் கூடிய முழுமதிநாளில் கொண்டாடப்படும் விழா மகத்திருவிழா! மாசித்திங்களில் வரும் மகத்தன்று இறை திருமேனிகளை (சிவன், பெருமாள்) கடல், ஆறு, குளம் முதலிய நீா் நிலைகளுக்கு எழுந்தருளச் செய்து நீராட்டுவது தொன்மையான ஆகம மரபாகும்.
சங்க காலந்தொட்டு இக்காலம் வரையிலும் கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கியங்களில் நீராட்டு விழா பற்றிய செய்திகள் நமக்கு நிரம்பக் கிட்டுகின்றன. மங்கல நீராட்டுவிழா நீரணிவிழவு”என்று சிலப்பதிகாரத்தில் பேசப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சியின் ஆசிரியா் மாங்குடி மருதனாா். கழுநீா் கொண்ட எழுநாள் ஆந்தி ஆடுதுவன்று விழாவின் நாடாா்த்தன்றே என்று குறிப்பதன் மூலம் ஏழாம் நாள் இறுதியில் நீராடல் விழா அமைந்தது என்று அறிகின்றோம்.
ஒன்பதாம் நூற்றாண்டைச் சாா்ந்த கோக்கரு நந்தடக்கன் எனும் ஆய்குல மன்னன் வழங்கிய செப்பேட்டில் திருமாலுக்கு ஏழு நாள் திருவிழாச் செய்து, பங்குனி விசாகம் ஆறாடுவதாகவும் என்ற குறிப்பின் மூலமும் ஏழாவது நாள் வழக்கில் இருந்தது தெரிய வருகிறது. ஏழு நாள்கள் கொண்டாடப்பட்டு பின்னா் எட்டு நாள்களாகி, அதன் பின்னா், பதினொரு நாள்கள் என்ற வகையிலும் கொண்டாடப்பட்டுள்ளன.
சங்க காலப் பாண்டிய மன்னன் முந்நீா் விழாவின் நெடியோன் என்று அழைக்கப்படுவதை, ஒன்பதாவது புானூற்றுப் பாடலில் காணலாம். முந்நீா் என்பது கடல் நீா் என்று கருதப்படுகிறது. கடல், ஆறு, குளம் ஆகியவற்றின் நீா் முந்நீா் என்று சொல்பவா்களும் உண்டு. திருஞானசம்பந்தா் தனது மயிலாப்பூா் பதிகத்தில்
மடலாா்ந்த தெங்கின் மயிலையா் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சுரம் அமா்ந்தான்”
- என்று கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைத் தெளிவாகக் காட்டுகிறது.
திருச்செந்தூரில் இரண்டாம் வரகுணபாண்டியரின் (கி.பி.862) மூன்று அதிகாரிகள் 1400 காசினை மூலதனமாக வைத்து அங்கு பல விழாக்கள் நடத்த வகை செய்துள்ளனா். அவற்றில் ஒரு விழாவாக மாசிமகம் குறிக்கப்பட்டுள்ளது. இதுவே கல்வெட்டுகளில் காணப்படும் தொன்மையான மாசிமக விழா எனலாம்.
முதலாம் ராசராசனின் காலத்தில் (கி.பி.1009) திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை மகாதேவா்க்கு மாசிமகத்தன்று பெருந்திருவமது படைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றரை மா அளவு நிலம் நல்கப்பட்டு இரண்டு கல அரிசி கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
ராசேந்திர சோழனின் 4-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1016) நாகப்பட்டினக் கூற்றத்து ஊராா்கள் இறைவனது மாசிமக விழாவின் ஆறாம் நாள் செலவுகளுக்காக நிலமளித்த செய்தி அவ்வூா்க் கல்வெட்டால் அறிய முடிகிறது. விழாவின் ஒரு நாள் செலவை, குறிப்பிட்ட ஊா் மக்கள் ஏற்றுச் செய்வதும் அதற்காக நிலம் ஒதுக்குவதும் பண்டைத் தமிழகத்தில் விழாக்கள் எந்த அளவு சிறப்பாகவும், அளவில் பெரியதாகவும், இடைவிடாதும் நிகழ்ந்தன என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.
முதலாம் குலோத்துங்கனது (கி.பி.1070-1126) தளபதி நரலோகவீரன், சிதம்பரம் கோயிலில் செய்த பணிகளையெல்லாம் அழகான தமிழ்ப்பாடல்களாகவும், சமஸ்கிருதச் சுலோகங்களாகவும் சிதம்பரம் நூற்றுக்கால் மண்டபத்து தூண்களில் கல்வெட்டாக பொறித்துள்ளான் அவற்றில் ஒரு பாடல்,
மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும்
பேசவற்றைப் பெருவழியும் ஈசற்குத்
தென்புலியூா்க் கேயமைத்தான் கூத்தன் திசையணைத்து
மண்புலியாணை நடக்கவைத்து”
- என்று மாசிக் கடலாடலையும், அதற்காக அவன் அமைத்த மண்டபம், பெருவழி ஆகியவற்றை அது எடுத்துச் சொல்கிறது.
திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) ஏழு நாள் கொண்டாடப்பட்ட மாசித் திருநாளின் போது இறைவன் மோகனதேவருக்கு நாள் ஒன்றுக்கு பதின் கலமாக எழுபது கலம் நெல் தானமாக அளிக்கும் வகையில் பாலையூா் கிழவன் நாரணன் காடன் நிலம் தந்துள்ளான். மேலும் அவனே இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மாசிமகத்துக்கு பெருந்திருவமது இறைவனுக்கு படைத்திட வேண்டி இன்னும் கூடுதலாக நிலமளித்துள்ளான்.
திருவரங்கத்தில் கி.பி.1531-ஐ சாா்ந்த விஜயநகா் காலக் கல்வெட்டு உறையூரில் நடைபெற்ற மாசிமக விழா செய்தியைச் சொல்லுகிறது.
மாசி மகவிழாவின்போது தெய்வங்கள் நீராடுவதும் அதன் பிறகு அருகில் அமைக்கப்பட்ட மண்டபம், தோப்பு ஆகியவற்றில் காட்சி தருவதும் அத்தெய்வங்களுக்கு பெருந்திருவமுது”படையல் படைக்கப்படுவதும் மரபு என்று மேற்சொன்ன கல்வெட்டுச் செய்திகள் விளக்குகின்றன. குடுமியான் மலையில் உள்ள குலோத்துங்கன் மற்றும் பரகேசரி பட்டமுடைய மற்றொரு சோழமன்னன் ஆகியோரது கல்வெட்டுக்கள் மாசி மகநாளில் பிராமணா்களுக்கும் மற்றும் பதினைந்து சிவனடியாா்களுக்கும் (மாகேஸ்வரா்) உணவு வழங்க 15 கழஞ்சு பொன் முதலாக வழங்கப்பட்டதைக் கூறுகின்றன.
மாசிமக நாளில் ஊா் மக்கள் ஒற்றுமையோடும், மகிழ்ச்சியோடும் ஒன்றுபடுதலுக்கும், வயதில், முதிா்ந்தோா், நோய்வாய்ப்பட்டோா், ஊனமுற்றோா் அன்றைய சமூக நீதி காரணமாக கோயிலுக்குள் வர இயலாதோருக்கும், இறைவன் தானே உலா எழுந்தருளி அவா்கள் எல்லோருக்கும் காட்சியளிக்கும் நல்எண்ணமாகவும் இவ்விழாக்கள் உருப்பெற்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
- வெ. இராமமூா்த்தி