மதுரை அரசியின் மணவிழா!

மதுரையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமாகும்.
மதுரை அரசியின் மணவிழா!
Updated on
3 min read

மதுரையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமாகும். இவ்வைபவத்தின் போது வீதியெங்கும் கோலமிட்டு, விளக்கேற்றி மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு மிகவும் கோலாகலமாக காட்சியளிக்கும். அம்பாள்-சுவாமி திருமணக் கோலத்தைக் காணக் கண் கோடி வேண்டும். மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருமணத்தைக் கண்டுகளிக்கும் மக்கள், தங்கள் வீட்டில் திருமணம் நடந்ததைப்போலக் கொண்டாடி மகிழ்வர். அச்சமயத்தில் பலர் தங்கள் தாலிச் சரடையும் மாற்றிக் கொள்வர்.  

ஸ்ரீ சோமசுந்தரரை பூஜித்து மதுரையை ஆண்டு வந்த குலசேகரப் பாண்டியனுக்கு அவர் அருளால் மலயத்வஜன் என்ற மகன் பிறந்தான். நற்குணங்கள் நிரம்ப பெற்ற மலயத்வஜன் சோழ மன்னனான சூரசேனனின் மகளான காஞ்சனமாலையை மணந்து சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். நீண்ட நாள்களாக குழந்தையில்லாமல் இருந்ததால் பெரியோர்களின் ஆலோசனைப்படி புத்திரகாமேஷ்டியாகம் செய்ய, அந்த ஹோம குண்டத்திலிருந்து முத்துமாலையால் சுற்றப்பட்ட கொண்டையுடனும், நவரத்தினம் பதித்த அணிகலன்கள் அணிந்து, தளிர்நடை நடந்து யாகத்திலிருந்து எழுந்து வந்தாள் அம்பிகை குழந்தை வடிவுடன். இதற்கும் ஒரு பின்னணி உண்டு.

ஆயிரம் கோடி சூர்யப் பிரகாசத்துடன் தங்கச் சிலையாகத் தங்களுக்குக் கிடைத்த குழந்தைக்கு கல்வி, கேள்வி, போர்ப்பயிற்சி என அனைத்தையும் கற்றுக் கொடுத்தான் மலயத்வஜன். தடாதகை பன்னிரண்டு வயதை எட்டியபொழுது அவளுக்கு மணி மகுடம் சூட்டி மதுரையின் அரசியாக்கிய சில மாதங்களில் நோய்வாய்பட்டு இறையடி சேர்ந்தான். ராஜ்ய பரிபாலனத்தில் தனக்குப் பெரிதும் துணையாக இருந்த தன் தந்தையை இழந்த வேதனையில் இருந்த அவளுக்கு, மன்னனின் பிரதம மந்திரியாக விளங்கிய சுமதி, அரிய யோசனைகள் சொல்லி நல்லாட்சி நடத்த உதவினாள். தடாதகையை மக்கள் போற்றி மதித்தார்கள்.

இந் நிலையில் ஒரு நாள், மீனாட்சியைப் பல நாடுகளுக்கும் திக்விஜயம் செய்ய ஏற்பாடு செய்தாள் சுமதி. அதற்குக் காரணமிருந்தது. தகுந்த மணவாளனைக் காணும் போது அவளுடைய மூன்றாவது ஸ்தனம் மறையும் என்ற அசரீரியை அறிந்திருந்த அவள் இதன்மூலம் அவளுக்குத் திருமணம் கைகூடும் என்ற நல்லெண்ணத்தில் அனுப்பி வைத்தாள். ஆனால் பூவுலகம் முழுமைக்கும் மீனாட்சி சக்கரவர்த்தியாக ஆனாளே தவிர, அவளுக்குரியவன்தான் யாரும் கண்ணில் படவேயில்லை.

அப்பொழுதுதான் சுமதிக்கு ஓர் உண்மை புரிந்தது. மீனாட்சி அக்னி குண்டலத்திலிருந்து எழுந்து வந்த தெய்வக் குழந்தையல்லவா! இவளுக்குக் கணவனாக வேண்டியவன் தேவலோகத்தில்தான் இருப்பான் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், உலக அரசர்கள் அனைவரையும் வெற்றி கண்ட களிப்பில் நிறைவுடன் மீனாட்சி, சுமதியிடம், “இனி நாம் நாடு திரும்பலாமா?” எனக் கேட்டாள்.  ஆனால் சுமதியோ, “அரசியாரே! மண்ணுலகம் முழுவதும் உங்கள் கொடிதான் பறக்கின்றது. அதேபோல விண்ணுலகிலும் நீங்கள் கோலோச்ச வேண்டும். அப்பொழுது தான் தங்கள் திக்விஜயம் முழுமைபெறும்”என்றாள். 

மீனாட்சி உடனடியாக, அதற்கென்ன, விண்ணுலகத்தையும் தற்பொழுதே நம் குடையின் கீழ் வரச்செய்வோம் என்று சொல்லி, போர் புரிய விண்ணுலகம் சென்றாள். ஆனால் அவளை எதிர்க்க யாரும் வரவில்லை என்பது அவளுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவள் யார் என்பதை உணர்ந்து கொண்ட தேவர்கள், அவளுக்கு வணங்கி வழிவிட்டனர். இறுதியில் கைலாயத்தில் காலடி எடுத்து வைத்த பொழுது எப்போதும் அனுபவித்திராத சிலிர்ப்பு, தன் உடலை நடுங்கச் செய்வதை உணர்ந்தாள் மீனாட்சி. மிகுந்த பரவச நிலைக்கு ஆட்பட்டாள். எனினும் தன்னை எதிர்த்த பூத கணங்களை ஓட ஓட விரட்டினாள். அப்போது அங்கு ஈசன் தோன்றினார். 

அவரைக் கண்டதும் போர் புரிவதற்காக உயர்த்திய வாள் தானாக நழுவிக் கீழே விழுந்தது. அவளது உள்ளம் உவகை கொண்டது. மனதிலும், முகத்திலும் நாணம் பரவ,  அதே சமயம், அவளது மூன்றாவது ஸ்தனமும் மறைந்தது. அவளுக்கு புரிந்து விட்டது. இவர்தாம் தன் கணவர் என்று. “அமைச்சர் சுமதிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவள் மனதில் ஒருவழியாக எனக்கிட்ட பொறுப்பு நிறைவேறியது. அரசருக்கு நான் கொடுத்த வாக்கினைக் காப்பாற்றி விட்டேன். இப்பொழுது தான் நிம்மதி”என்று எண்ணி, இறைவனிடம், "சர்வேஸ்வரா! எங்கள் அரசியாரை மணந்து கொண்டு அனைத்துலகும் இன்பமுற தாங்கள் அருள வேண்டும்' என்று கூறிப் பணிந்தாள். "பூவுலகில் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல், யாமே, உரிய காலத்தில் வந்து மீனாட்சியை மணமுடிப்போம்', என்று உவகை பொங்க கூறினார். காஞ்சனமாலையிடம் நடந்த விவரம் அனைத்தும் எடுத்துரைக்க, காஞ்சனமாலையின் உவகைக்கு எல்லையே இல்லை.  

அந்த நாளும் வந்தது. விண்ணவர்கள் அனைவரும் மண்ணுலகில் கூடினர். தேவி காஞ்சனமாலை தன் மகள் மீனாட்சியை இறைவன் மணந்து கொண்டு பாண்டிய ராஜ்ஜியத்தையும் அரசாள வேண்டுமென வேண்டிக் கேட்டுக் கொண்டாள். நான்முகன் திருமணத்தை நடத்தி வைக்க திருமால் தன் சகோதரியான தேவியின் திருக்கரங்களை சிவபெருமானுடைய வலது கரத்தில் வைத்து பொற்கலசத்திலுள்ள நீரால் தாராதத்தம் செய்தார். தேவி ஸ்ரீ மீனாட்சி இறைவனின் இடப்புறம் அமர்ந்து அருளாசி பொழிந்தாள். மதுரையம்பதியிலேயே திருக்கோயில் கொண்டார் சுந்தரேஸ்வரர் மீனாட்சியுடன். 

பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் பொன்னம்பலத்தில் இறைவனுடைய திருநடனக் காட்சியைக் கண்டு களித்த பின்னரே அன்றாடம் உணவருந்துவது வழக்கம். மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தைப் பார்த்துப் பரவசமடைந்த முனிவர்கள் சோமசுந்தரக் கடவுளின் ஆலயத்தில் வந்து நின்றார்கள். பரமன் உடனே வெள்ளியம்பலத்தை உருவாக்கி திருப்பாதத்தை மாற்றி ஆனந்தக் கூத்தாடினார். இவரது திருநடனத்தைக் கண்டுகளித்த முனிவர்கள் எம்பெருமானை துதி பாடினர்.

இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை மாதம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்வருடம் வரும் மே மாதம் 4 -ஆம் தேதி மதுரையில் இத்திருக்கல்யாண வைபவம் நடக்க இருக்கிறது. தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையினால் அனைத்து பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில்,  திருக் கோயிலுக்குள் சிவாச்சாரியார்கள் முன்னிலையில், இந்த விழா நடைபெறும் என்றும் அன்றைய தினம் காலை 9.05 மணி முதல் காலை 9.25 மணிவரை திருக்கல்யாணம் நடைபெறும் நேரத்தில், பக்தர்கள் www.maduraimeenakshi.org இணையதளத்தில் திருக்கல்யாண நிகழ்வை நேரடியாகக் கண்டு களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com