பொருநை போற்றுதும்! - 113

இந்த வெற்றிவேல் பாண்டியன், கொற்கையில் கண்ணகிக்குச் சிலை எடுப்பித்திருக்கிறார். கண்ணகியை தெய்வமாக வழிபட்டிருக்கிறார்.
பொருநை போற்றுதும்! - 113


இந்த வெற்றிவேல் பாண்டியன், கொற்கையில் கண்ணகிக்குச் சிலை எடுப்பித்திருக்கிறார். கண்ணகியை தெய்வமாக வழிபட்டிருக்கிறார். வெற்றிவேல் பாண்டியன் எடுப்பித்த பிரதிமம் என்பதால் "வெற்றிவேல் அம்மன்' என்றும், செழியன் (பாண்டியர்களுக்கான பெயர்) வழிபட்ட தெய்வம் என்பதால் "செழிய நங்கை' என்றும் அம்மனுக்குப் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். செழிய நங்கை என்னும் திருநாமமே "செழுகை நங்கை' ஆனது போலும்! சற்றே தலையைச் சாய்த்தாற்போல்  அம்மன் காட்சி தருவதற்கு என்ன காரணம்? 

ஓராயிரம் பொற்கொல்லர்களை அழைத்து வந்து வெற்றிவேல் செழியன் சாந்தி செய்தாராம். "பொற்கொல்லன் சொன்ன பொய்யால் கோவலன் இறந்துபட்டான்' என்பதுதான் சிலப்பதிகாரக் கதை. பொற்கொல்லர்களைக் கொண்டே சாந்தி செய்ய, தாங்க மாட்டாத கண்ணகி "போதும்' என்று தலையை ஆட்டினாளாம். ஆகவே, தலை சாய்ந்திருக்கிறது என்கிறார்கள். பழைய காலத்துக் கண்ணகி சிலை இப்போது இல்லை, இடைக்காலத்தில் துர்க்கையின் வடிவில் சிலையை மாற்றி விட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். 
1940 மற்றும் 1950-களில் இந்தக் கோயில் இருக்கும் இடத்தைச் சுற்றி உறை கிணறுகளும், மட்பாண்டச் சிதைவுகளும் கிட்டியுள்ளன. எனவே, இப்பகுதியானது, பண்டைய காலத்தில் கொற்கை நகரின் பகுதியாக இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில், இதுவே பள்ளமாகி, நீர் நிரம்பி, மிகப் பெரிய குளமாக ஆகியிருக்கவும் வேண்டும்.

அஃக சாலையும் ஆயிரம் பொற்கொல்லரும்: 

வெற்றிவேல் அம்மன் கோயிலுக்கு எதிரில் சிவன் கோயில் இடம். அக்கசாலை ஈச்வரமுடையார் கோயில் என்பது மக்கள் சொல்வழக்கு. ஈச்வரமுடையார் என்பதால் சிவன் கோயில் என்றுணரலாம். ஆனால், இப்போது விநாயகர் மட்டுமே இருக்கிறார். அக்கசாலை என்பது, இப்போது பரந்து விரிந்துகிடக்கும் ஏரி போன்ற பகுதிக்கு அப்பால் உள்ள இடம். ஏரியில்தான் வெற்றிவேல் அம்மன் கோயில். ஆக, அந்தக் காலத்து அஃக சாலை என்பது சிவன் கோயில் இடம், அகன்ற ஏரிப் பகுதி ஆகிய யாவற்றையும் உள்ளிட்டதாக இருந்திருக்கவேண்டும். 

இத்தனை பெரிய அக்கசாலை எனில், அதில் எத்தனை நாணயங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்? எத்தனை பொற்கொல்லர்கள் அதில் பணி செய்திருப்பார்கள்? எனவேதான், மதுரையில் ஒரு பொற்கொல்லன் செய்த தவறுக்காகக் கொற்கையில் ஆயிரம் பொற்கொல்லர்களைக் கொண்டு சாந்தி செய்வித்து, அஃக சாலைப்பகுதியிலேயே கண்ணகிக்கு விழாவும் எடுப்பித்தார் வெற்றிவேல் செழியன். அக்கசாலைப் பகுதியில் நிலத்தைத் தோண்டினால், இப்போதும்கூட  நாணயங்கள் கிட்டுவதாகச் சொல்கிறார்கள். 

கொற்கையைப் பற்றிய தகவல்கள் பலவற்றில், மா. ராசமாணிக்கனார் பதிவு செய்யும் சில, இங்கே நம்முடைய கவனத்திற்கு உரியன. இதன் சுற்றுப்புறங்களில், நிலத்தைத்தோண்டும்போது, ஒன்றேகால் அடிச் சதுரச் செங்கற்கள் கிடைக்கின்றன. தவிரவும், பத்துப் பதினைந்தடி ஆழத்தில், ஒருவகையான சேறு காணப்படுகிறது. இந்தச் சேறானது, உப்பங்கழி இப்பகுதியில் இருந்ததற்கும், கடல் அருகில் இருந்தது என்பதற்குமான அடையாளங்கள். 

செப்பேட்டு நகல் ஒன்றைக் குறித்தும் மா.ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இவ்வேட்டில்,  பழங்காசு ஆயிரத்து நானூறு.......அரண்மனைக்கு மரக்கலராயர் ஆயிரம் பொன்னும், உப்பு லாபத்தில் நூறு பொன்னுக்கு இருபத்தைந்து பொன்னும் செலுத்தக்கடவர்.....

ஆணிமுத்தும், வலம்புரிச்சங்கும் அகப்பட்டால் அவைகளை மரக்கலராயர் அரண்மனைக்குச் செலுத்திவிடவும்.....

என்பன போன்ற வாசகங்கள் காணப்படுகின்றனவாம். இவற்றின் அடிப்படையில், "பழங்காசு', "பொன்' ஆகியன புழக்கத்திலிருந்த நாணயங்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. "மரக்கலராயர்' என்னும் பதிவை ஆய்ந்து, மேலும் விளக்குகிறார் மா.ராசமாணிக்கனார். கடல் வாணிகத்துக்காகப் பல மரக்கலங்களை வைத்திருந்தவர் "மரக்கலராயர்' எனப் பெயர் பெற்றார்; மரக்கலராயர் என்பதன் திரிபே "மரைக்காயர்' என்பது. ராயர் என்னும் சொல், அரையர் அல்லது அரசர் என்னும் சொல்லின் திரிபு. மரக்கலங்களை வைத்திருந்தவர் மரக்கலராயர் என்பது எத்தனை பொருத்தம்; எவ்வளவு அழகு! 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com