ஏக நட்சத்திர திருமணப் பொருத்தம் - ஒரு விளக்கம் 

ரோகிணி, திருவாதிரை, மகம், உத்திரட்டாதி, விசாகம், திருவோணம், ரேவதி - இந்த நட்சத்திரங்களுக்கு உத்தம பலன். தசா சந்திப்பு தோஷம் உண்டாக்க முடியாது. 
ஏக நட்சத்திர திருமணப் பொருத்தம் - ஒரு விளக்கம் 
Published on
Updated on
2 min read

1. ரோகிணி, திருவாதிரை, மகம், உத்திரட்டாதி, விசாகம், திருவோணம், ரேவதி - இந்த நட்சத்திரங்களுக்கு உத்தம பலன். தசா சந்திப்பு தோஷம் உண்டாக்க முடியாது. 

2. அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் } இந்த நட்சத்திரங்களுக்கு மத்திம பலன். 

3. பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி } இந்த நட்சத்திரங்கள் கூடாது. 

திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது வரனுக்கும், வதுவுக்கும் ஏகதசை வரக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஏக தசை என்றால் ஒரே சமயத்தில் ஆண், பெண் இருவருக்கும் ஒரே தசை நடைபெறும். 

அதாவது ஆணுக்கு புத மஹாதசை என்றால் பெண்ணுக்கும் புத மஹாதசை நடக்கும். இவ்வாறு இருவருக்கும் ஒரே தசை நடைபெற்றால் அது ஆகாது என்று கூறுவார்கள். 

தினப் பொருத்தத்தில் 19 நட்சத்திரங்களை ஏக நட்சத்திரமாக வந்தால் சேர்க்கலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. அப்படி ஏக நட்சத்திரங்களை இணைத்தால் இருவருக்கும் ஒரே தசைதானே நடைபெறும்... அப்படியிருக்கும்போது ஏக தசை என்று ஜாதகங்களை நிராகரிப்பது சரியல்ல.

தசவிதப் பொருத்தங்களென பத்து பொருத்தங்களுக்கு 25 சதவீதம்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மற்றபடி ஜாதகப் பொருத்தத்திற்கு 75 சதவீதம் முக்கியத்துவம் கொடுத்து பொருத்தம் பார்க்க வேண்டும். 

ஒரு பெண் ஜாதகத்தில் அஷ்டமம் எனப்படுகிற மாங்கல்ய ஸ்தானத்திற்கு அதிபதியான கிரகம் விரய ஸ்தானமான பன்னிரண்டில் அமர்ந்து இருந்தாலோ, அஷ்டம ஸ்தானத்தில் அசுபக் கிரகங்கள் இணைந்து இருந்தாலோ, அந்தப் பெண்ணின் பூர்வபுண்ணியம் பலவீனப்பட்டு இருந்தாலோ, பாக்கியாதிபதி படுமோசமான நிலைக்கு ஆட்பட்டிருந்தாலோ, லக்னாதிபதி நலிந்து போயிருந்தாலோ நட்சத்திர பொருத்தம் எப்படி அப்பெண்ணின் வாழ்வினைக் காத்திட முடியும் } என்பதை நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

அதேபோல் ஆணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப் பட்டு, களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் அசுபக் கிரகங்கள் இணைந்து நிற்க, களத்திர காரகனான சுக்கிர பகவான் நீச்சம் அடைந்து (நீச்சபங்க ராஜயோகம் பெறாமல் இருந்து) அசுபக் கிரகங்களுடன் இணைந்திருக்க, லக்னாதிபதி எந்த ஒரு குறிப்பிடும்படியான சிறப்பான பலம் பெறாமல் இருக்க, பூர்வபுண்ணிய, பாக்கிய ஸ்தானங்களும் பலம் இழந்து அமைந்திருக்க - நட்சத்திர பொருத்தம் எதை சாதித்து விடமுடியும்.

உள்ளத்தில் ஒளி உண்டானால் வாக்கினிலே தெளிவு உண்டாகும் என்பது பாரதியார் வாக்கு. இதை ஜோதிட அடிப்படையில் பார்ப்போம். உள் ஒளி } இதை குரு பலம் என்றால், சந்திர பகவானை மனோ காரகர், தனு (உடல்) காரகர் என்கிறோம். 

ஒரு ஜாதகத்தில் சந்திர, குரு பகவான்கள் நேர் பார்வையாகப் பார்வை செய்தால் முழுமையான கஜகேசரி யோகமும், குரு பகவானுக்கு நான்கு, பத்தாம் வீடுகளில் சந்திர பகவான் இருந்தால் முக்கால் பங்கு கஜகேசரி யோகமாகும்.

இந்த கஜ கேசரி யோகத்தால் ஜாதகத்தில் வேறு தோஷங்கள் இருந்தாலும் அவைகள் பலவீனமடைகிறது. அதாவது தோஷத்தின் கெடுபலன்கள் உண்டாகாமல் காப்பாற்றப்படும் நிலை ஏற்படும். பெரிய அமைச்சர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், பெரிய தொழிலதிபராகவும் இருப்போருக்கு சந்திர பகவானுக்கு ஏழாம் வீட்டில் குருபகவான் அமர்ந்து கொடுக்கும் கஜகேசரியோகம் பலம் உள்ளதாகக் கருதப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com