தேவியின் திருத்தலங்கள் 12: திருவாசி பாலாம்பிகை

தாயே உன் கருணை நிறைந்த கடைக்கண் பார்வை விழுந்தாலே போதும்; எப்படிப்பட்ட மனிதனும் வாழ்வில் சகல பேறுகளையும் அடைவான்.
தேவியின் திருத்தலங்கள் 12: திருவாசி பாலாம்பிகை

    
"நரம் வர்ஷீயாம்ஸம் நயன விரஸம் நர்மஸு ஜடம்

தவா பாங்காலோகே பதித - மனுதாவந்தி சதஸ:'

-செளந்தர்ய லஹரி

"தாயே உன் கருணை நிறைந்த கடைக்கண் பார்வை விழுந்தாலே போதும்; எப்படிப்பட்ட மனிதனும் வாழ்வில் சகல பேறுகளையும் அடைவான். நீ உன் குழந்தைகளின் நலனுக்காகவே சிவனிடம் வரம் கேட்கிறாய்!' என்கிறார் சங்கரர்.

ஒருமுறை ஈசனும், பார்வதி தேவியும் திருக்கயிலாய மலையில் ஏகாந்தமாக இருக்கும்போது, அம்பிகை தன் பதியிடம் கேட்கிறாள்.
"சுவாமி! நீங்கள் அருளிய இருபத்தி எட்டு சிவ ஆகமங்களில் உங்களுக்கு விருப்பமானது எது?'' என்று கேட்கிறாள்.

"தேவி! நான் மிகவும் விரும்புவது பூஜைகளையே. சோழ நாட்டில் காவிரியின் வடகரையில் முனிவர்கள் தவம் புரியும் "திருப்பாச்சிலாசிராமம்' என்னும் தலத்தில், என்னை உள்ளன்போடு பூஜித்து வழிபட்டால் அவர்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறும்''என்கிறார் ஈசன்.

அத்தலத்தில் தானும் தவம் செய்ய விரும்பிய அன்னை, தன் பணிப்பெண்களுடன் திருவாசி எனும் திருப்பாச்சிலாசிராமத்துக்கு வருகிறாள். 
கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை, அங்கு யாரும் அறியாத வண்ணம் அன்னப் பறவை வடிவம் தாங்கி, பொய்கையில் நீராடி, ஈசனை நினைத்து தவம் இருக்கிறாள். அதில் மகிழ்ந்த இறைவன்  சிவகணங்களுடன் அம்பிகைக்குக் காட்சி தருகிறார்.

"தேவி! நீ விரும்பும் வரம் கேள்''  என்று சிவபெருமான் கூறும்போது, அன்னை தனக்கென்று எதுவும் கேட்கவில்லை. 

"இறைவா! அன்னமாக இருந்து நான் நீராடிய பொய்கை "அன்னமாம் பொய்கை' என்ற பெயரில் விளங்க வேண்டும். இதில் நீராடி உம்மை வழிபடுபவர்களுக்குப் பிணிகள் யாவும் நீங்கி, அவர்கள் விரும்பியவை அனைத்தும் நிறைவேற வேண்டும்'' என்று வேண்டுகிறாள்.

ஈசன் வரம் அளிக்கிறார். அங்கு "பாலாம்பிகை' என்ற பெயரில் நின்று அருள் பாலிக்கிறாள் அன்னை.

திருச்சியில் இருந்து முசிறி செல்லும் வழியில் திருவாசி பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் பாலாம்பிகை கோயில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் "மாற்றுரைவரதீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். ஒருமுறை சுந்தரர் தன்னுடன் வரும் சிவனடியார்களுக்கு உணவு அளிப்பதற்காக இத்தலத்து ஈசனைப் பாடி பொன் வேண்டினார். ஆனால் சுந்தரர் பதிகம் பாடியும் ஈசன் பொன் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர்... "இகழ்ந்து வைத்தனன் தனக்கே தலையும், என் நாவும்' எனத்  தொடங்கும் பாடலைப் பாடியதும், சிவன் காட்சியளித்து, அவருக்குப் பொன் முடிப்பு தருகிறார். 

ஆனால் அது "தரமானதுதானா?' என்ற சந்தேகம் வருகிறது சுந்தரருக்கு. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தைப் பரிசோதித்து "சுத்தமானதுதான்!' என்று கூறி மறைந்து விடுகிறார்கள். ஈசனே, விஷ்ணுவுடன் வந்திருந்தார் என்பது புரிகிறது. தங்கத்தை உரைத்துக் காட்டியதால் இறைவனுக்கு "மாற்றுரைவரதீஸ்வரர்' என்று பெயர். 

இவ்வாலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிராகாரங்களுடன் விளங்குகிறது. அம்பாள் சந்நிதி எதிரே செல்வவிநாயகர் சந்நிதி அருகில் அன்னமாம் பொய்கை தீர்த்தம் இருக்கிறது. இங்கு அர்த்தஜாமப் பூஜை முதலில் தேவிக்கே நடக்கிறது.

சந்நிதி முகப்பில் இரண்டு துவார பாலகியர்கள் இருக்கிறார்கள். திருமணம் ஆகாதவர்கள் நல்ல மண வாழ்க்கை அமையவும், தடை நீங்கவும், இவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு செய்கிறார்கள். குழந்தையில்லாத பெண்கள் இவர்கள் முன் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள். பக்தர்களின் வேண்டுதல்களை துவார பாலகியர்கள் அம்பாளிடம் கொண்டு செல்வதாக ஐதீகம்.

மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க அன்னைக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள். 

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களில் அறுபத்தி இரண்டாவது தலம் இது. வைகாசி விசாகத்தில் திருத்தேர் உலா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.  

இப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் கொல்லிமழவனின் மகள் "முயலகன்' என்ற தீராத வலிப்பு நோயால் துன்புற்ற போது, மன்னன் எத்தனையோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. 

இக்கோயிலுக்கு வந்து ஈசனிடம், "நீயே என் மகளைக் காக்க வேண்டும்'' என்று சந்நிதியில் கிடத்தி விட்டுப் போய் விட்டான்.

அப்போது அங்கு வந்த சம்பந்தர், அவளின் நோய் பற்றிக் கேள்விப்பட்டு ஈசனின் மேல் பதிகம் பாடினார்.   

"துணிவளர் திங்கள் துலங்கி விளங்கச் சுடர்ச் சடை  
                                                                                            சுற்றிமுடித்து 
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ வாரிடமும்   
                                                                                               பலி தேர்வர் 
அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாசிரமத்து 
                                                                                               உறைகின்ற 
மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல்
                                                            செய்வதோ இவர்  மாண்பே' 

என்று பாடியதும் ஈசன் தோன்றி முயலகனைக்காலால் மிதித்து, அப்பெண்ணின் நோயைத்தீர்க்கிறார். இங்கு வழிபாடு செய்வதால் நரம்புத் தளர்ச்சி, வாதம், வலிப்பு, மாதவிடாய் பிரச்னைகள் தீரும்.
ஆண்டுதோறும் வைகாசி பெüர்ணமி அன்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. வன்னி மரம் இங்கு விருட்சமாக இருக்கிறது. சஹஸ்ர மண்டபத்தில் திருஞான சம்பந்தர் வலக்கை சுட்டுவிரல் நீட்டியபடி இடக்கையில் கிண்ணம் ஏந்தி நிற்கிறார். சுந்தரர் இரண்டு கைகளிலும் தாளங்களைக் கொண்டு நிற்கிறார். 

சுமார் 1500 ஆண்டுகள் பழைமையான இக்கோயில் ஹொய்சாள மன்னர்களால் கட்டப்பட்டது. இங்கு சுவாமி கிழக்கு நோக்கி இருக்க, அம்பிகை அவரைப் பார்த்தபடி மேற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறாள். தாமரை மலரில் நின்றபடி காட்சி தரும் அம்பிகையின் அழகைக் காண கண் கோடி வேண்டும். தாமரை மலர்வதுபோல் அவளே இந்த புவனம் முழுவதும் மலர்ந்திருக்கிறாள். காக்கிறாள். அவளைப் பணிந்து இப்பிறவிப் பயனை அடைவோம்..!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com