

கட்டபொம்மனின் தாய் மாமனான கெடுவெட்டூரார் போன்றவர்கள் சமாதானம் பேசும்படித் தூண்ட, கம்பெனி உயரதிகாரிகளைச் சந்திக்கலாம் என்று தானாபதிப் பிள்ளை போன்றவர்கள் ஆலோசனை இயம்ப, தாயும் மனைவியும் செய்வதறியாது புலம்ப, 1799 செப்டம்பர் 6}ஆம் தேதியும், 7}ஆம் தேதியும் பாளைய நண்பர்கள் யாரையும் உள்ளே வர விடாதபடிக்கு உப தளபதி லெஃப்டினண்ட் டல்லாஸ் தடுத்து நிற்க, இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சண்டைகள் நடக்க... மறுகி மனம் துவண்ட கட்டபொம்மன், கோட்டைக்கு வெளியில் சென்று வேறெங்காவது தங்கி ஆதரவு திரட்டலாம் என்று எண்ணினார்.
இந்த நிலையில்தான், செப்டம்பர் 7-ஆம் நாள் இரவு, தம்பியரோடும் முக்கியமான படைவீரர்களோடும் பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டையை விட்டு அகன்றார். அனைவரும் இரவு முழுவதும் நடந்து, முதலில் நாகலாபுரம் சென்று, பின்னர் அங்கிருந்து கோலார்பட்டி சென்றனர்.
சுந்தரலிங்கத்தின் திட்டம்: "கட்டபொம்மன் உள்ளே இல்லை' என்னும் செய்தி காலையில் தெரிந்தபோது, கம்பெனிப் படைகளில் ஏக அமளி. கட்டபொம்மனைப் பிடிப்பதற்காகப் பலவகையான திட்டங்களை பானர்மன் தீட்டிக்கொண்டிருக்க... பீரங்கிகளும் வெடி மருந்துகளுமே கம்பெனியாரின் பலத்திற்குக் காரணம் என்பது படைத் தளபதியான சுந்தரலிங்கத்தின் உள்ளத்தை உறுத்திக் கொண்டேயிருந்தது.
"கோட்டையை சுந்தரலிங்கத்திடம் கட்டபொம்மன் ஒப்படைத்துச் சென்றாரா? அல்லது கட்டபொம்மன் புறப்படுவதற்கு முன்னரே தன்னுடைய திட்டத்தைச் சுந்தரலிங்கம் வெளியிட்டாரா?' என்னும் குறிப்புகள் கிட்டவில்லை. எப்படியாயினும், கம்பெனிப் படைகளுக்குப் பாடம் புகட்டத் தீர்மானித்து விட்டார் சுந்தரலிங்கம். ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை அழிப்பதுதான் சிறந்த வழி என்று திட்டமிட்டார்.
7-ஆம் தேதி இரவோ அல்லது 8-ஆம் தேதி இரவோ சரியாகத் தெரியவில்லை. சுந்தரலிங்கத்தின் முறைப்பெண் வடிவு என்பவள், ஆடுகளை ஓட்டிக் கொண்டு போவதுபோல், கம்பெனியார் வெடிமருந்துகளைக் குவித்து வைத்திருந்த இடத்திற்கு அருகில் போனாள். ஆடுகளோடு ஆடாகக் கறுப்புக் கம்பளியைப் போர்த்துக் கொண்டு சுந்தரலிங்கமும் போனார்.
ஆயுதக் குவிப்புப் பகுதியில் தீ வைத்து விடுவதுதான் இவர்களின் திட்டமாக இருந்திருக்க வேண்டும். போர்வையிலிருந்து எழுந்தபோது சுந்தரலிங்கத்தைப் பார்த்துவிட்ட கம்பெனி வீரன் ஒருவன் சத்தம் எழுப்ப, வடிவு வைத்திருந்த தீப்பந்தத்தை வாங்கி ஆயுதங்களின் மீது வீசிய சுந்தரலிங்கம், தன்னுடலில் வைத்துக் கட்டியிருந்த தீப்பந்தத்தையும் ஏற்றிக்கொண்டு, தானும் ஆயுதங்களுக்கிடையில் குதித்தார்.
சடுதியில் நிலைமையைப் புரிந்துகொண்ட வடிவு, "வாழ்க்கையில் இணைய நினைத்தது இனி நடக்காது' என்பதை உணர்ந்து, மறுமையிலாவது இணைவோம் என்று கருதினாள் போலும், தானும் அந்நெருப்புச் சுழலுக்குள் பாய்ந்தாள்.
பாளையப்பட்டுப் போர் வரலாற்றின் திசையை பீரங்கிகளும் வெடிமருந்துகளும் மாற்றின என்பதில் இரண்டாவது கருத்து இருக்க
முடியாது. மாறிய பாதையை மீட்கக் கருதிய சுந்தரலிங்கத்திற்கும் வடிவுக்கும் இந்திய தேசிய வரலாற்றிலும் சரி, பொருநையாளின் புகழ்ச் சரிதத்திலும் சரி, தனிப் பேரிடம் கண்டிப்பாக உண்டு.
"சக்கம்மாள் வாக்கு பலித்ததடா,
சந்ததிபோல் வந்த சுந்தரலிங்கம் என,
பாஞ்சாலி வாக்கு பலித்ததடா,
கட்ட கருப்பண்ணன் சுந்தரலிங்கம்,
மட்டிலா பேரும் கொடுத்தானடா...' என்னும் நாட்டுப் பாடல், இந்தப் பெருமையை இடையறாமல் இசைத்துக் கொண்டிருக்கிறது.
இப்போதைய பெல்லாரி நகரையொட்டிய பகுதிகள், அந்நாள்களில் "வாடிக்கோட்டை' என்னும் பிரதேசமாக அறியப்பட்டன. வாடிக்கோட்டையில் முப்பதுக்கும் மேற்பட்ட ஊர்களும் இருந்தன. இந்த ஊர்களின் ஆளுகை, வாடிக்கோட்டைச் சிற்றரசரான பால்ராஜாவிடம் இருந்தது. பால்ராஜாவுக்கும் அவருடைய திருவாட்டி வீரலக்கம்மாளுக்கும் பிறந்த மகனை "பொம்மு' என்றழைத்தனர். சில பல அரசியல் காரணங்களாலும், மழை பொய்த்ததாலும், பால்ராஜா தம்முடைய உறவுமுறையாரையும் மக்கள் சுற்றத்தையும் அழைத்துக் கொண்டு தென்னாட்டிற்குப் புலம் பெயர வேண்டியதாயிற்று.
ஆறேழு மாதங்கள் இவ்வாறு நடைபயணமாகவே நகர்ந்து, மணியாச்சிக்கு அருகில் சாலிகுளம் என்னும் இடத்தில் பெரும் பறம்பு ஒன்று இருப்பதைக் கண்டு, சுற்றத்தையும் கன்று காலிகளையும் அங்கேயே தங்கச் செய்து, வாழ்க்கைக்கு வழிசெய்தார். அண்டைப் பகுதிகளில் இருந்த மக்களோடு ஒத்து வாழ்ந்திருந்த நிலையில், கொள்ளைக்காரர்கள் வர, அவர்களோடு பொம்மு சண்டையிட்டு விரட்டிய பாங்கு, அந்த வட்டார முழுமைக்கும் பாடுபொருளானது. "கெட்டி பொம்மு' என்று அனைவரும் சிலாகிக்க, அதுவே "கட்டபொம்மு' என்றும் ஆனது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.