காசி யாத்திரை பலனை முழுமையாகப் பெற...

சிவாலயங்களுக்குச் செல்பவர்கள் வெளிப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்யாமல் இருக்க முடியாது.
காசி யாத்திரை பலனை முழுமையாகப் பெற...

சிவாலயங்களுக்குச் செல்பவர்கள் வெளிப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்யாமல் இருக்க முடியாது.
எப்பொழுதும் சிவ தியானத்திலேயே இருக்கும் இந்த தியான மூர்த்தியை, பலர் தரிசிக்கும் பொழுது, கையைத் தட்டி அவரின் நிஷ்டையைக் கலைக்கிறார்கள் அல்லது தன் ஆடையில் இருந்து ஒரு நூலைப் பிய்த்துப் போட்டு அபச்சாரம் செய்கிறார்கள்.
இவ்வாறு செய்யக்கூடாது என்பதை ஆன்மிக ஆன்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவர், சிவனின் சொத்துகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். எனவே, சண்டிகேஸ்வரரை வணங்கும் பொழுது, மெதுவாக சத்தம் வராமல் கைகளை துடைத்துக் காண்பித்து, "கோயில் சொத்து எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை, எனக்கு சிவனின் அருள் மட்டும் வேண்டும்' என வேண்டிக்கொள்ள வேண்டும்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் பிரதானமானவர். எந்த நாயன்மாரும் பெறாத ஈஸ்வர பட்டத்தையும் பெற்றவர் இவர். இவருக்கு மட்டும் ஈஸ்வர பட்டம் கிடைத்தது எப்படி? அதற்குப் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது:
சோழ நாட்டில் திருசேய்ஞலூர் (காலப்போக்கில் மருவி "சேங்கனூர்' என்றானது) என்ற ஊரில் எச்சதத்தன், பவித்திரை தம்பதியருக்குப் பிறந்த ஆண் மகனை விசாரசருமன் என்று அழைத்து வந்தார்கள். இளம் வயதிலேயே, குரு இல்லாமலேயே பகவத் ஞானத்தைப் பெறக் கூடிய பாக்கியம் அவனுக்கு கிடைத்தது. அந்த ஞானத்தின் மூலம் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதை உணர்ந்து கொண்டான்.
அந்தணர்கள் அதிகமாக இருந்த அவ்வூரில், அவர்களின் பசுக்களை ஒரு மாட்டிடையன் ஓட்டிச் செல்லும் பொழுது அப்பசுக்களை கம்பால் அடிப்பதைக் கண்டான். அவன் மனம் மிகவும் வேதனையுற்றது.
"பசுக்கள் எல்லாம் காமதேனுவிற்குச் சமம். அவைகளை அடித்தல் ஆகாது. இனிமேல் நானே பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று வருகிறேன்' என்று கூறிவிட்டு, அன்று முதல் பசுக்களை மேய்க்கும் தொழிலை தானே மேற்கொண்டான். சரியான முறையில் அவற்றை அன்புடன் பராமரித்தான்.
அதனால் அப்பசுக்கள் முன்பை விட அதிகளவில் பால் கொடுத்தன. சிவபக்தியின் காரணமாக, அங்குள்ள மண்ணியாற்றங்கரையில், அத்தி மரத்தின் கீழ், மண்ணினால் லிங்கம் அமைத்து, பூஜை செய்து வழிபட்டு வந்தான். பசுக்கள் அந்த லிங்கத்தின் மேல் தானாகவே பொழிந்த பாலால், பாலாபிஷேகம் செய்வித்தான்.
இதனைக் கண்டோர் விசாரசருமனின் தந்தை எச்சதத்தனிடம், பால் வீணாக மண்ணுக்குப் போவதாக முறையிட்டனர்.
மறுநாள், அதிகாலையில் பசுக்களுடன் விசாரசருமன் புறப்பட்ட பின், எச்சதத்தன் பின் தொடர்ந்து சென்று, ஒரு மரத்தின் பின் மறைந்து கொண்டு கவனிக்கலானான். வழக்கப்படி லிங்கத்திற்கு பூஜை, பாலாபிஷேகம் நடந்தது.
அதைக் கண்ட எச்சதத்தன் மிகவும் கோபம் கொண்டான். மரக் கிளையை உடைத்து, அந்தக் குச்சியால் விசாரசருமனின் முதுகில் ஓங்கி அடித்தான். விசாரசருமன் வழிபட்டுக் கொண்டிருந்த மண் லிங்கத்தை எட்டி உதைத்தான்.
சிவ நிந்தனை செய்ததை விசாரசருமனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே கையில் கிடைத்த மாடு மேய்க்கும் குச்சியை எடுத்து தந்தையின் கால்களை நோக்கி வீசினான். சிவனருளால் அது கோடரியாக மாறி, எச்சதத்தனின் கால்களை வெட்டியது.
எச்சதத்தன் கால்கள் துண்டாகி உயிரை இழந்தான். விசாரசருமன், மீண்டும் சிவ வழிபாட்டில் ஈடுபடலானான். அவனது பக்தியை மெச்சிய இறைவன், உமாதேவியுடன் ரிஷபத்தின் மேல் எழுந்தருளி, "இனி நானே உனக்கு தாயும் தந்தையும் ஆவேன்' என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இறைவன் தன் திருமுடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்து, விசாரசருமனுக்குச் சூட்டி, "இனி நாம் சூடுவனவும், உடுப்பனவும், உண்ணும் பிரசாதமும் உனக்கே உரிமையாகும்படிச் செய்தோம். உனக்கு "சண்டீச பதம்' வழங்கினோம்' என்றும் அருளினார்.

பக்தியால் உலகை மறந்திருந்த விசாரசருமனும், பேரொளிப் பிழம்பாக காட்சியளித்த கயிலாயத் தம்பதியின் பாதங்களைப் பணிந்தான். "சண்டிகேஸ்வரர்' என்னும் ஈஸ்வரப் பட்டத்தினையும் பெற்றார்.
எச்சதத்தன் தான் செய்த அபசாரத்துக்குரிய தண்டனையைத் தன் மகன் கையாலேயே பெற்று, பின்னர் அவனாலேயே பாவம் நீங்கி, சிவலோகப் பிராப்தி அடைந்தான் என்பது வரலாறு.
ஈசன் அருளியபடியே இத்திருத்தலத்தில் இப்போதும் சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பிரசாதங்களே, பிறகு சண்டிகேஸ்வரருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகப் பொருளே சண்டிகேஸ்வரருக்கும் அபிஷேகப் பொருளாகிறது.
ஆலய சிறப்பம்சங்கள்: சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக் கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் இரண்டு பைரவர்கள் உண்டு. மகா மண்டபத்தில் உள்ள பைரவரின் பீடத்தைத் தட்டினால், வெண்கல சப்தம் வரும்.
சண்டிகேஸ்வரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கை ஆகியவை உள்ளன. இக்கோயிலில், எங்கும் இல்லாத விதமாக சண்டிகேஸ்வரர், அர்த்தநாரி ரூபத்தில் எழுந்தருளியுள்ளார். மாதந்தோறும் இவர் அவதரித்த உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு உண்டு.
முருகப் பெருமான் சுவாமிமலையில் தந்தையை சீடனாக அமர்த்தி, பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் உண்டான சிவ தோஷம் நீங்க, இங்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார். இக்காரணம் பற்றியே இந்த ஊருக்கு "திருச்சேய்ஞலூர்' (திரு+சேய்+நல்+ஊர்) என்னும் சிறப்புப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை அவதரித்தத் தலமும் இது தான்.
முழுமையான பலன்: முக்கியமாக காசி யாத்திரை செய்பவர்கள், ராமேசுவரத்தில் தொடங்கி, காசி சென்று, கடைசியாக ராமேசுவரத்திற்கு வந்து யாத்திரையை நிறைவு செய்தாலும், இந்த úக்ஷத்திரத்திற்கு வந்து, சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்தால்தான், யாத்திரை செய்ததின் பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தகைய பெருமைகளும், சிறப்புகளும் நிறைந்த சேங்கனூர் சிவத் தலம் சென்று, சண்டேஸ்வர நாயனாரின் கழலடி போற்றிப் பணிவோம் .
அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழித்தடத்தில், நெடுங்கொல்லை கிராமத்தையடுத்து, சேங்கனூர் சிவத் தலம் உள்ளது. ஆலயம் திறந்திருக்கும் நேரம்: காலை மணி 7 முதல் 9 வரை, மாலை மணி 5 முதல் 7 வரை. தொடர்புக்கு: ராமகிருஷ்ண குருக்கள் - 9345982373.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com