ஆந்திர பிரதேசத்தில் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான சிம்மாசலம் வராக லட்சுமி நரசிம்மர் மலைக்கோயில், விசாகப்பட்டினம் அருகே 16 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த லட்சுமி நரசிம்மர், லிங்க வடிவத்திலும் காட்சி தருவது மிகச் சிறப்பானதாகும்.
புராணக் கதை: துவாரபாலகர்கள் என பெயரிடப்பட்ட இருவரும் மகா விஷ்ணு வசிக்கும் வைகுண்டத்தைக் காவல் காத்து வந்தனர். இவர்கள், விஷ்ணுவை தரிசிக்க வந்த முனிவர்களைத் துன்புறுத்தினார்களாம். இதனால் கோபமுற்ற விஷ்ணு அவர்களுக்கு சாபம் தந்தார். அதன்படி முதல் துவாரபாலகன் இரண்ய கசிபுவாகவும், இரண்டாவது துவாரபாலகன் அவனது தம்பி இரணியாட்சனாகவும் பிறந்தனர்.
தன் தவ வலிமையால் பல வரங்களைப் பெற்ற இரண்ய கசிபு, தேவர்களை வென்று தன்னையே கடவுளாக வழிபட உத்தரவிட்டான். அவனது மகனாகப் பிறந்தவன்தான் பிரகலாதன். நாரதரால் வளர்க்கப்பட்ட பிரகலாதன், மகா விஷ்ணுவின் மீது மிகுந்த பக்தி கொண்டவன். தந்தையின் நாமத்தை உச்சரிக்க மறுத்து, "நாராயணா... நாராயணா...' என்று விஷ்ணுவின் நாமத்தையே உச்சரித்தான்.
இதனால் கோபமடைந்த இரண்ய கசிபு தனது மகனையே கொல்ல உத்தரவிட்டான். மலையில் இருந்து தள்ளிவிட்டு பிரகலாதனைக் கொல்ல முயன்ற போது, மகா விஷ்ணுவே அவனைக் காப்பாற்றினார். அந்த மலைதான் சிம்மாசலம் ஆகும். இங்கு மகா விஷ்ணு, லட்சுமி நரசிம்மராக எழுந்தருளியுள்ளார்.
ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு: பிரகலாதன் கட்டிய இக்கோயில், அவன் காலத்திற்குப் பின் சிதிலமடைந்திருந்தது. அப்பொழுது, சந்திர வம்சத்தைச் சேர்ந்த அரசர் புரூரவன் என்பவர் மண் மூடிய நிலையில் இருந்த சிலையைக் கண்டெடுத்து, கோயிலைப் புனரமைத்தார்.
அப்போது எழுந்த அசரிரீயானது, "சுவாமியை சந்தனத்தால் மூடி வைக்க வேண்டும் என்றும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் சுவாமியை முழுமையாகத் தரிசிக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டது.
அதன்படியே இக்கோயிலில் மூலவருக்கு - அட்சய திருதியை நாளைத் தவிர - ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இதனால் காண்பதற்கு சிவலிங்கம் போல் காட்சியளிக்கிறார் இந்த நரசிம்மர். ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 32 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. அவற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது இக்கோயில். 5 நுழைவு வாயில்கள், 3 பிரகாரங்களுடன் ஒரு கோட்டை போல் காட்சி தரும் இக்கோயிலில், சாளுக்கிய சோழர்களின் ஆட்சிக் காலத்தில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் செய்யப்பட்டுள்ளது. கோயில் அருகே "சுவாமி புஷ்கரணி' மற்றும் மலையின் கீழே "கங்காதாரை' என 2 திருக்குளங்கள் உள்ளன.
ராமாநுஜர் வழிபட்ட கோயில்: மகான் ராமாநுஜர் வழிபட்ட இக்கோயிலில், அவர் நிர்ணயித்தபடி வழிபாடுகள், சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இக்கோயிலின் தல புராணம் 32 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, நரசிம்மரின் சிறப்புகளை வெளிப்படுத்துகின்றன.
கோயிலில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தெலுங்கு, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஒரிய மொழியிலும் சில கல்வெட்டுகள் உள்ளன. பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் தெய்வமாகத் திகழ்கிறார் லட்சுமி நரசிம்மர். நரசிம்மர் ஜயந்தி, திருக்கல்யாண உற்சவம், சந்தன உற்சவம், அட்சய திருதியை உற்சவம் ஆகியவை பிரசித்தி பெற்ற விழாக்கள்.
நேரம்: காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். சிம்மாசலம் வராக லட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் செல்ல விசாகப்பட்டினத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது. தொடர்புக்கு - 0891 - 2979666.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.