போதித்த தேவனுக்கு நேர்ந்த வேதனை!

போதித்த தேவனுக்கு நேர்ந்த வேதனை!

இறைமகன் இயேசு தீர்வை நாளில் என்ன நடக்கும் என்பதை விளக்கினார். 
Published on

இறைமகன் இயேசு தீர்வை நாளில் என்ன நடக்கும் என்பதை விளக்கினார். 
இறைவன் எல்லா மக்களினங்களையும் தன் முன் நிறுத்தி ஓர் ஆயர் தம் மந்தையை இரண்டாகப் பிரிப்பது போல அவரவர் செயலுக்கேற்ப அவர்களை இரண்டாகப் பிரிப்பார் என்றும், அவர்களில் தம் இரக்க மனத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு வலப்புறம் நிற்போரை அவர்களுக்கென்று ஏற்பாடாகியுள்ள ஆட்சியை உரிமையாக்கிக்கொள்ள அழைப்பார் என்றும், இரக்கமற்ற குணத்தால் சபிக்கப்பட்டு இடப்புறம் இருப்போரை தன்னைவிட்டு அகன்று அலகைக்கும் அதன் தூதருக்கும் உரிய அணையா நெருப்புக்குள் செல்லும்படி ஆணையிடுவார் என்றார்.
இறைவனின் இத்தீர்ப்புக்கான காரணத்தையும் இயேசு சொன்னார். இறைவன் உரைப்பாராம்  "நான் பசியாய் இருந்தேன் நீங்கள் எனக்கு உண்ணக் கொடுக்கவில்லை. தாகமாய் இருந்தேன் எனக்கு குடிக்கக் கொடுக்கவில்லை. அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்கவில்லை. ஆடையின்றி இருந்தேன், உடுத்த கொடுக்கவில்லை. நோயுற்றும், சிறையிலும் இருந்தேன் என்னைப்  பார்க்க வரவில்லை' (மத். 25: 42-43)
அப்போழுது அணையா நெருப்பிற்குள் இறங்க இருப்போர் இறைவனைக் கேட்பர் எப்போது இப்படியொரு தப்பினைச் செய்தோமென்று. அப்பொழுது இறைவன் மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என பதிலளிப்பார் என்றார்.
ஆம்! எளிய ஓர் ஏழைக்கு இரங்காதவருக்கு இது நேரிடும் என்று மொழிந்த இயேசுவுக்கே இந்த அவலம் நேர்ந்தது. சர்வ வல்லமையோடு சர்வேஸ்வரனின் மகனாய் வந்த அவர் இறைத்திட்டப்படி தனது இறையியல் பலத்தினை இழந்து ஏழையரில் ஏழையாய், கடையரிலும் கடையராய் சிலுவைச் சாவை நோக்கி நின்ற வேளையில்...
அவருக்கு உண்ண உணவு தரவில்லை என்பதல்ல, மாறாக பசித்திருப்பர் தம் மக்கள் என நினைத்து பல்லாயிரம் பேருக்கு இருமுறை உணவளித்த உத்தமனை அவரது இறுதி இரவுணவுப் பந்தியிலிருந்து எழுந்து சென்ற யூதாஸூதானே கட்டித் தழுவிக் காட்டிக் கொடுத்தான்.
தாகமாய் இருக்கிறது என்று கொடிய சிலுவை மரத்திலிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட யாசித்த தேவனுக்கே புளித்த திராட்சை ரசத்தை வாய்க்கு வார்த்தார்களே! தாகம் தீர்த்தார்களா? ஆடையின்றி அவர் இருந்ததில்லை. 
அப்படி இருந்திருந்தாலும் உடுத்தியிருக்க வேண்டாம். ஆனால் வாழ்நாள் நெடுகிலும் அவர் உடுத்தியிருந்த தன் தாய் அளித்த உடையை அல்லவா உருவிவிட்டு அவரை நிர்வாணமாக்கி அதன் மீது சீட்டுப் போட்டார்கள்.
இயேசு அந்நியனாய் இருந்தாரா? இல்லையே! ஆனால் சொந்த மைந்தனையே அன்னிய ஆளுநன் கைகளில் சிலுவையில் அறையக் கையளித்தனரே அவர் நேசித்த மக்கள்! நள்ளிரவில் சிறைப்பட்டு கைதியாய் இருந்தபோது யாரும் பார்க்கப் போகவில்லை என்பதல்ல; பக்கத்தில் ஒட்டியிருந்த சீடர்களே ஓடிப்போனார்களே! 
முதன்மைச் சீடர் சீமோன் அவரை அறியேன் என்று அச்சத்தால் மறுதலித்தாரே. ஆனால் தன் நிலையறிந்து அவர் சிந்நிய கண்ணீரல்லவா திருச்சபை என்னும் வரலாற்றுக் காவியமாயிற்று. 
தன் போதனைகளால் மானுடம் மீட்க வந்தவரின் மொழி திசைகள் எட்டிலும் பட்டு எதிரொலிக்கிறது..! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com