நோய்களைத் தீர்க்கும் தெய்வீக மருத்துவர்

மனித வாழ்வின் பற்றுக்கோலாக ஆன்மிகம் விளங்குகிறது.
நோய்களைத் தீர்க்கும் தெய்வீக மருத்துவர்
Published on
Updated on
2 min read

மனித வாழ்வின் பற்றுக்கோலாக ஆன்மிகம் விளங்குகிறது. ஏதோ ஒரு தருணத்தில் நம்பிக்கை இழக்கும் மனிதனின் சோர்வை நீக்கி வாழ்வின் போக்கை மாற்றியமைக்கும் அற்புதமான வரமாக, ஆன்மிக வழிபாடுகளும், கடவுள்களின் ஆராதனைகளும் உள்ளன. வாழ்வில் கோடி கோடியாய் பொருட் செல்வம் இருந்தாலும், உடல் ஆரோக்கியம் எனும் பெருஞ் செல்வம் இல்லையெனில் வாழ்வு இன்பமாக அமையாது. நம் உடல் நலன் காத்து நமக்கு ஆரோக்கிய வாழ்வு அருளும் தெய்வமாக தன்வந்திரி பகவான் திகழ்கிறார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்வந்திரி பகவானுக்கு, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகில் அனந்தலை என்ற கிராமத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு யக்ஞஸ்ரீ முரளிதர சுவாமிகளின் சீரிய முயற்சியால் அமைந்த ஆலயம்தான் ஸ்ரீ தன்வந்திரி பீடமாகும். 

இங்கு 80-க்கும் மேற்பட்ட தெய்வ சந்நிதிகள் அமைந்துள்ளன. 

நோய்களால் அவதிப்படும் தனது பிள்ளைகளைக் காக்க... ஆரோக்கியம் அருள...மருத்துவத்துக்கென ஒரு அவதாரத்தை ஏற்படுத்தினான் அந்த இறைவன். அவர்தான்... உலகைக் காத்து ரட்சிக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவான்.  அவர் தெய்வீக மருத்துவராக வணங்கப்படுகிறார்..!

சைவம், வைணவம், சாக்தம், சவுரம், கவுமாரம், காணாபத்யம் என ஷண்மதக் கடவுள்களும் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

இங்குள்ள தெய்வங்களின் சிலை வடிவங்கள் ஒவ்வொன்றும் அற்புதமான முறையில் அமைந்துள்ளன. பீடத்தின் முகப்பு பகுதியில் ஒரே கல்லில் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரியும் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். 

விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அமுத கலசத்துடன், திருமண் தரித்து, சிரித்த முகத்துடன் அருள் புரிகிறார். இங்குள்ள காலச் சக்கரத்தில், நவகிரகங்களின் சுழற்சியால் ஏற்படும் பாதிப்புகளை அகற்ற, 27 ராசிக்கும் உகந்த விருட்சங்கள் அமைந்துள்ளன. 

மரண பயம் நீக்கி, மாங்கல்ய பாக்கியம் அருளும் மகிஷாசுரமர்த்தினி, பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளிடம் இருந்து காத்திடும் பிரத்தியங்கிரா தேவி, நல்வாழ்வு தரும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கஷ்டங்கள் நீக்கும் அஷ்ட நாக கருடன், இழந்த பொருளை மீட்டுத் தரும் கார்த்த வீர்யார்ச்சுனர், குழந்தை பாக்கியம் தரும் நவநீத கிருஷ்ணன், பதவி தரும் பட்டாபிஷேக ராமர், சுகம் தரும் சுதர்சன ஆழ்வார், சத்தியம் காக்கும் சத்தியநாராயணர், வாக்கு தரும் ஸ்ரீ வாணி சரஸ்வதி, குலம் தழைக்க வைக்கும் கூர்ம லட்சுமி நரசிம்மர், சங்கடம் தீர்க்கும் ராகு- கேது, சொர்ணம் அளிக்கும் சொர்ணாகர்ஷண பைரவர், நன்மைகள் தரும் நவ பைரவர், அன்னமளிக்கும் காசி அன்னபூர்ணேஸ்வரி போன்ற தெய்வங்களுடன் முருகப்பெருமான், காயத்ரி தேவி, தத்தாத்ரேயர், ரங்கநாதர், ஷீரடி சாய்பாபா, கஜலட்சுமி, தட்சிணாமூர்த்தி, லட்சுமி ஹயக்ரீவர், மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர், சரபேஸ்வரர், பாலா, பூர்ண புஷ்கலா சமேத தர்ம சாஸ்தா,  பாதாள ஸ்வர்ண சனீஸ்வரர், ஜெயமங்கள சனீஸ்வரர், ஸ்ரீ லஷ்மி வராகர், பஞ்சமுக வராகி, ஸ்ரீ லஷ்மி குபேரர், பிரம்மா போன்ற எண்ணற்ற தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

மூலவரான தன்வந்திரி பகவான் 8 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில், நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், அமிர்த கலசம், சீந்தல்கொடி ஏந்தியபடி பத்ம பீடத்தில் காட்சி தருகிறார். இவரது துணைவியாக வீற்றிருப்பவர், மகாலட்சுமியின் சொரூபமான ஆரோக்கிய லட்சுமி தாயார். இவரும் தன்வந்திரி பெருமாளைப் போலவே, அமிர்த கலசமும், சீந்தல்கொடியும் கைகளில் ஏந்தியிருக்கிறார். இந்த அன்னைக்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டால், ஆரோக்கிய தோஷங்கள் நீங்குவதுடன், ஆனந்தமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

அமைவிடம்: சென்னையில் இருந்து மேற்கே 100 கி.மீ. தொலைவிலும், வேலூரில் இருந்து கிழக்கே 30 கி.மீ. தூரத்திலும் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் அமைந்துள்ளது. ஆலயத்திற்குச் செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

ஒருமுறை நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவானைத் தரிசித்து  நம்மை அச்சுறுத்தும் கொடிய நோய்த் தொற்றில்  இருந்து குணம் பெறுவோம்..! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com