"மயிலையே கயிலை' என்பார்கள். முன்பு சென்னை கடற்கரையை ஒட்டியிருந்தது மயிலாப்பூர். 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் குடியேற்றத்தின்போது, மயிலை நகரை கடற்கரையிலிருந்து இன்றைய இடத்துக்கு மாற்றினார்களென வரலாறு குறிக்கிறது.
இங்கு கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், விருப்பாட்சீஸ்வரர், மல்லீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய 7 புராதன சிவத்தலங்கள் அருகருகே அமைந்துள்ளன. இந்த சப்த சிவாலயங்களை சப்த ரிஷிகளான விசுவாமித்திரர், காஸ்யபர், வசிஷ்டர், கெüதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில்:
ஈசனின் வாக்குப்படி உமையவள் மயிலாய் உருவெடுத்து ஈசனை பூஜித்த தலமாதலால் மயிலாப்பூராயிற்று. தவமிருந்த உமையவளுக்கு காட்சி தந்த இறைவனிடம் உமை வேண்டினாள் ""கருணையே வடிவான கற்பக ஐயனே! தொண்டர்தம் பெருமையை உலகறியச் செய்ய தாங்கள் இத்தலத்திலேயே நிலைத்திருந்து அருள வேண்டும்.'' என்றாள்.
அப்படியே வரமளித்த சிவன், ""வேண்டுவோர்க்கு வேண்டுவன எல்லாம் தரும் கற்பகமாக நீயும் இங்கு நிலைத்திருக்க வேண்டும்'' என்றருளினார். அம்மையும் அப்பனுமாய் மயிலையில் எழுந்தருளிய இறைவன் கபாலீஸ்வரர் எனவும், அன்னை கற்பகாம்பாள் எனவும் வணங்கப்படுகின்றனர்.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் மயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசர் மகள் பூம்பாவை (திருஞானசம்பந்தருக்கு மணம் முடிப்பதற்காக வளர்க்கப்பட்ட சிறுமி) தன் ஏழாம் வயதில் பாம்பு தீண்டி இறந்தாள். இதையறிந்த திருஞானசம்பந்தர் "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை' எனத் தொடங்கும் பாடலைப் பாடி பூம்பாவையை உயிர்ப்பித்தார் என்பது வரலாறு.
இத்தகு புகழ்மிக்க கபாலீஸ்வரர் திருக்கோயிலில் மகா சிவராத்திரி வழிபாட்டைத் துவங்கியபின், அருகிலுள்ள மற்ற 6 சிவன் கோயில்களுக்கும் அடுத்தடுத்து சென்று வழிபட்டு வரலாம்.
இரண்டாவது, வெள்ளீஸ்வரர் திருக்கோயில்:
காமாட்சி தேவி உடனுறை வெள்ளீஸ்வரர் கோயில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. விநாயகர் , சரபேஸ்வரர், சனி பகவானும் எழுந்தருளியுள்ளனர் . வாமனனுக்கு மகாபலி தானம் கொடுக்க முயன்றபோது வெள்ளியான அசுர குரு சுக்ராசாரியார் வண்டாக மாறி நீர்ப்பாதையை அடைக்க, திருமால் தர்பைப் புல்லினால் குத்த சுக்கிரனுக்கு ஒரு கண் பறிபோனது. கண்ணைத் திரும்பப் பெற மயிலை வந்து இறைவனை வழிபட்டு கண் பார்வை பெற்றார். வெள்ளியாகிய சுக்கிரன் பூஜை செய்ததால் வெள்ளீஸ்வரராக வணங்கப்படுகிறார்.
மூன்றாவது, மல்லீஸ்வரர் திருக்கோயில்:
அருள்மிகு மரகதாம்பிகையுடன் மல்லீஸ்வரர் கோயில் மயிலை பஜார் சாலை இறுதியில் அமைந்துள்ளது. அக்காலத்தில் மல்லிகை வனமாக இருந்த தோட்டத்தின் உள்ளாக மல்லிகைச் செடிகளுக்கு நடுவே சுயம்புவாய் அமைந்து மல்லிகை மணத்துடன் காட்சி அளித்ததால் மல்லீஸ்வரரெனப்பட்டார்.
மாசி மாதத்தில் குறிப்பிட்ட நாள்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் கருவறையில் உள்ள, சிவபெருமானின் மீது நேரடியாக விழுந்து சூரியபூஜை செய்யும் அற்புதத்தலம். குடும்ப நலனுக்காகவும், உறவுகள் பிரியாமல் இருக்கவும், திருமணம் கைகூடவும் இறைவனை வழிபடும் தலமாகும்.
நான்காவது, விருப்பாட்சீஸ்வரர் கோயில்:
மல்லீஸ்வரர் கோயிலின் அருகிலேயே அருள்மிகு விசாலாட்சி உடனுறை விருப்பாட்சீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. பசுவும் கன்றும் சேர்ந்து சிவபூஜை செய்ததாகவும், அதனைக்கண்ட பக்தர்கள் இத்திருக்கோயிலை எழுப்பியதாகவும் வரலாறு உள்ளது . பக்தர்களின் விருப்பம் நிறைவடைவதால் விருப்பத்தை ஆட்சி செய்யும் விருப்பாட்சீஸ்வரர் என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார். இங்கு அம்பாள் சந்நிதி அருகே எழுந்தருளியுள்ள கால பைரவரை பக்தர்கள் தோஷ நிவர்த்திக்காக வழிபடுகின்றனர்.
ஐந்தாவது, காரணீஸ்வரர் திருக்கோயில்:
சென்னை வானொலி நிலையத்தின் அருகில் உள்ள சாலை வழியாகச் சென்றால் பஜார் சாலை இறுதியில் அமைந்துள்ள இக்கோயிலை அடையலாம்.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டியவற்றை வாரி வழங்குவதாலும், உலக இயக்கத்திற்குக் காரணமாகவும் அமைந்துள்ளதால் பொற்கொடி அம்பாள் உடனுறை காரணீஸ்வரர் என வணங்கப்படுகிறார்.
உலகில் நடக்கும் ஒவ்வோர் செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணத்திற்கும் இறைவனே மூலமாய் அமைவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து விளக்கு ஏற்றி இறைவனை வழிபட்டால் குறைகள் தீர்ந்து நலம் பெறலாம் என்பது ஐதீகம். இது சகல தோஷ பரிகாரத்தலமாகப் போற்றப்படுகிறது.
ஆறாவது, வாலீஸ்வரர் கோயில்:
மேற்கூறிய 3 கோயில்களின் வெகு அருகில், கோலவிழியம்மன் கோயிலின் அருகே, பெரிய நாயகி அம்பாள் உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. ராமாயண வாலி இத்திருக்கோயிலில் பூஜை செய்து இறையருள் பெற்றதால் வாலீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில், காசிக்கு நிகரான பஞ்ச லிங்கங்கள் அமைந்துள்ளன. மகா சிவராத்திரி நாளில் இந்த பஞ்ச லிங்கங்களைத் தரிசிப்பது சிறப்புடையது.
ஏழாவது, தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயில்:
டாக்டர் நடேசன் சாலையிலுள்ள இத்திருக்கோயிலைச் சுற்றிலும் அறுபத்து நான்கு தீர்த்த குளங்கள் இருந்ததாகவும், கோயிலுக்குச் சற்று தொலைவில் கடல் இருப்பதாலும், தீர்த்தங்களைப் பரிபாலனம் செய்யும் ஈஸ்வரர் தீர்த்தபாலீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். அகத்திய முனிவரின் நோய் நீங்கிட இறைவன் தீர்த்தத்தைக் கொடுத்து நோயை நீக்கியதால் தீர்த்தபாலீஸ்வரர் எனப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரே நாளில் இவர்களைத் தரிசிக்க நமது காரியங்களுக்கு முட்டுக்கட்டையாக நிற்கும் இடைஞ்சல்கள் விலகி நற்பலன்கள் கிடைக்கும். நவகிரக தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் போன்றவை நீங்கி சுப பலன் கிடைக்கும் என்பர். இவ்வாண்டு மகா சிவராத்திரி விழா வரும் வியாழக்கிழமையன்று (மார்ச் 11-ஆம் தேதி) வருகிறது.
-ஆர். அனுராதா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.