அஷ்டகந்த அம்பாளுக்கு உகந்த பங்குனி உத்திர மகாபிஷேகம்

பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வரும்போது சூரிய பகவானின் பார்வை முழுவதும் சந்திரன் மீது படுவதால் பிரகாசமாக ஜொலிக்கிறது.
அஷ்டகந்த அம்பாளுக்கு உகந்த பங்குனி உத்திர மகாபிஷேகம்
Updated on
2 min read

பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வரும்போது சூரிய பகவானின் பார்வை முழுவதும் சந்திரன் மீது படுவதால் பிரகாசமாக ஜொலிக்கிறது. அதோடு, உத்திர நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார். 

அதே நாளில் பௌர்ணமியும், உத்திர நட்சத்திரமும் ஒன்றாக இணைவதால், மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாத பௌர்ணமி கூடுதலாக பிரகாசிக்கிறது. இதனால் தான் தெய்வங்களுக்கு மிகவும் பிடித்தமான மாதமாக பங்குனி மாதமும், பிடித்த நட்சத்திரமாக உத்திரமும் கருதப்படுகிறது.

அவ்வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்த தேவார மூவர்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று திருக்கழுகுன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் மலைக்கோயில். வேதமே மலையாக அமைந்ததால் வேதகிரி, வேதாசலம், வாழைமரத்தைத் தல விருட்சமாகக் கொண்டதால் கதலிவனம், மலையில் கழுகு வந்து உணவுண்டு செல்வதால் திருக்கழுகுன்றம் என்ற பட்சி தீர்த்தமெனப் பலப் பெயர்கள் உண்டு.

மலையின் கீழுள்ள தாழக்கோயில் பக்தவத்சலேஸ்வரர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.  அதன் எதிரில் உள்ள சங்கு தீர்த்தக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெண்சங்கு இயற்கையாகப் பிறந்து இறைவனுக்குத் தொண்டு செய்யும் சிறப்பைப் பெறுகிறது.

இங்கு வேதகிரீஸ்வரரின் தேவியான உமையவள் திரிபுரசுந்தரி தனிக்கோயிலில் குடிகொண்டிருக்கிறாள். சிவபெருமான் திரிபுரத்தை தகனம் செய்தபோது உடனிருந்த அம்பாளுக்கு உடலில் சிறு வேனல் கட்டிகள் தோன்றினவாம். அம்பாள் வெப்பம் தணிய கதலி எனப்படும் குளிர்ச்சியுடைய வாழைமரங்களுக்கு நடுவில் வந்து நின்று அருளினாள்  எனவும் வரலாறு கூறப்படுகிறது. 

அம்பாளின் திருமேனியை அஷ்டகந்தம் எனப்படும் எட்டு விதமான வாசனைப்பொருள்கள் கொண்டு அலங்கரித்து சாந்தப்படுத்தினர் என்பதும் வரலாறு.  

நவபாஷாணம் எனப்படும் நவமூலிகையால் உருவான பழனிமலை முருகனைப்போல், அன்னை திரிபுரசுந்தரி அம்பாளும் மருத்துவ குணம் உடைய அஷ்டகந்த வாசனைப் பொருள்களால் எழுந்தருளி அருள்கிறாள்.  

கோரோசனை, வெண் சந்தனம், பச்சைக்கற்பூரம், ஜவ்வாது , கருப்பு அகில், புணுகு, கஸ்தூரி, குங்குமப்பூ ஆகிய எட்டு வகையான வாசனைப் பொருள்களின் கலவையே "அஷ்டகந்தம்' எனப்படுகிறது. 

திரிபுரசுந்தரி அம்பாள் மார்பில் ஸ்ரீசக்ர பதக்கம் அணிந்து, அஷ்டகந்த குணங்களையும் கொண்டு அருளும் சுயம்பு அம்மனாகும். இவருக்கு ஆண்டுக்கு 3 முறை மட்டுமே மகாபிஷேகம் நடைபெறும். மற்ற நாள்களில் பாதத்திற்குக்கீழ் உள்ள பீடத்திற்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். ஆடி உத்திரம், விஜயதசமி, பங்குனி உத்திரம் ஆகிய 3 நாள்களில் மட்டும் மகாபிஷேகம்  நடைபெறும்.

இவ்வாண்டு மார்ச் 27}ஆம் தேதி பங்குனி உற்சவத்தையொட்டி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாளுக்கு மகாபிஷேகம் நடைபெறும். பின்னர் இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் முடிந்து,  இரவு சுமார் 11 மணிக்குமேல் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே அஷ்ட கந்த அம்பாளுக்கு மகாபிஷேகம் நடைபெறுவதையும், திருக்கல்யாண உற்சவத்தையும் தரிசிக்க இயலும். இதனைத் தரிசிப்பவர்களுக்கு தடைப்பட்ட திருமணம், புத்திர சந்தான பாக்கியமும், வேறு எவ்விதமான பிரார்த்தனைகள் செய்து கொண்டாலும் நிறைவேறும் என்பதால் அனைவரும் கலந்து கொண்டு அம்பாள் அருள்பெற வேண்டுகிறோம். மேலும் தகவலுக்கு: 9444710979.

-செங்கை பி.அமுதா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com