பொருநை போற்றுதும்!

1799 செப்டம்பர் 5-ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் பானர் மென் படைகளுக்கும் கட்டபொம்மன்
பொருநை போற்றுதும்!
Updated on
2 min read

1799 செப்டம்பர் 5-ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் பானர் மென் படைகளுக்கும் கட்டபொம்மன் படைகளுக்கும் இடையில் போர் தொடங்கியது. செப்டம்பர் 7-ஆம் தேதி இரவு, கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறியுள்ளார். இடைப்பட்ட காலத்தில், இரண்டு பக்கங்களுக்கும் சேதம் அதிகம். 

பின்னர் வந்த நாள்களில், ஒட்டப்பிடாரத்திற்கு அருகே, இறந்துபட்ட ஐரோப்பிய தளபதிகளுக்கும் வீரர்களுக்கும் கல்லறை ஏற்படுத்தி இருந்திருக்கின்றனர். அக்கல்லறைக் கற்களில் ஒன்று, தளபதிகள் டக்ளஸ், டார்மீக்ஸ், காலின்ஸ், ப்ளேக், கன்னர்ஃபின்னி ஆகியோர் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் இறந்துபட்டனர் என்று அஞ்சலி செலுத்துகிறது. 

7}ஆம் தேதி இரவு பாஞ்சாலங்குறிச்சியை விட்டுப் புறப்பட்ட கட்டபொம்மன், நாகலாபுரம் அடைந்து, அவ்வூர் ஜமீன் இரவப்ப நாயக்கரைச் சந்தித்தார். பின்னர், பயண திசையை மாற்றிக் கொண்டு கோலார்பட்டியை அடைந்தார்; அவ்வூர் ஜமீன் ராஜகோபால நாயக்கருடன் தங்கினார். கோலார்பட்டியையும் கம்பெனிப் படை சூழ்ந்து கொண்ட நிலையில்தான், அழைத்து வரப்பட்டிருந்த தம்முடைய குதிரைகளின் மீதேறி, கட்டபொம்மனும் பிறரும் வெளியேறினர். வாயுவினும் வேகமாகப் பயணப்பட்டனர். 

யஜமானரின் உள்ளத் துடிப்பைக் குதிரை அறிந்திருந்தாலும், காட்டிலும் மேட்டிலும் பாய்ந்து சீறிய அந்த ஜீவன் எவ்வளவுதான் தாங்கும்! கட்டபொம்மனுடைய பட்டத்துக் குதிரையின் பெயர் முத்து. உடல் வேதனையோடு உள்ள வேதனையும் முத்துவுக்கு இருந்திருக்க வேண்டும்! தாளமுடியாமல், பாதி வழியிலேயே துடித்து விழுந்து முத்து இறந்துபோனது. 

ஏழு பேர் ஆறு குதிரைகளில் பயணப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், முத்துவோடு இன்னும் இரண்டு குதிரைகளும் வீழ்ந்துவிட, மூன்றையும் புதைத்துக் கண்ணீர் சிந்தி, மீதமிருந்த மூன்று குதிரைகளை அங்கேயே காட்டிற்குள் சுதந்திரமாகப் போகவிட்டு, கால்நடையாகவே தொடர்ந்தனர்; ஆனியூர்அடைந்தனர். 

ஆனியூரில் நேரடியாகத் தங்கினால் கம்பெனியாருக்குத் தெரிந்துவிடக்கூடும் என்பதால், அருகிலிருந்த மலைக்குகைகளில் ஒளிந்து கொண்டனர். ஆனியூர்த் தலைவர்களான பெரிய நம்பி மற்றும் காளிமுத்து ஆகியோர் அவ்வப்போது வந்து உணவும் பிறவும் கொடுத்தனர். திருச்சிக்கோ மதராஸýக்கோ சென்று கம்பெனி அதிகாரிகளிடம் பேசலாம் என்று கட்டபொம்மன் ஆலோசித்ததாகத் தெரிகிறது. 

ஏறத்தாழ ஒரு வார காலம் சென்ற நிலையில், காடல்குடி ஜமீன் வீரகஞ்சயநாயக்கர், எப்படியோ தேடிக் கண்டுபிடித்து ஆனியூர் வந்து சேர்ந்தார். இவர் வழியாகத்தான், தானாபதியாருக்கும் பிறருக்கும் நேர்ந்த அவலங்களைக் கட்டபொம்மன் அறிந்துகொண்டார். 

பாஞ்சைக்கே மீண்டும் திரும்பிப் போரிடலாமா, திருச்சிக்குச் சென்று கம்பெனியாரோடு உரையாடலாமா என்று ஆலோசனைகள் நடைபெற்றன. திருச்சி செல்வது உசிதம் என்று அனைவரும் அபிப்ராயப்பட்டனர். 

ஆனியூராரையும் வீர கஞ்சயரையும் அவரவர் வழியே போகச் சொல்லிவிட்டு, கட்டபொம்மன் சோளபுரம் அடைந்தார். இதற்கிடையில், பாளையத்தார் யாரும் கட்டபொம்மனுக்கு உதவக்கூடாது என்றொரு எச்சரிக்கைக் கடிதத்தை பானர்மென் விடுத்திருந்தார். 

இந்த நிலையில்தான், செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு மேல், திருச்சி செல்லும் ஆசையில், புதுக்கோட்டை எல்லைக்குள் நுழைந்துள்ளார். கட்டபொம்மன்.1799}ஆம் ஆண்டு அக்டோபர் 1}ஆம் நாள், பிற்பகல் 3 மணி சுமாருக்குப் புதுக்கோட்டைக்குள் நுழைந்த ஒ'ரீலி என்னும் கம்பெனித் தளபதி, அடுத்த சில நாழிகையில் கட்டபொம்மனைச் சிறைபிடித்ததாகத் தெரிகிறது. 
அரண்மனைக்குள் ஆபத்தில்லையென்று கருதி, எண்ணெய் மூழ்கி, நண்பகல் உணவருந்தி, உடைவாளையும் எட்டத்தில் வைத்துவிட்டு, ஆயாசமாக உறங்கிய நிலையில், ராணுவத்தார் காலடி மாடிப்படிகளில் ஒலித்த நிலையில், அரவத்தால் எழுந்த நிலையில் கட்டபொம்மன் பிடிக்கப்பட்டார். 

"வெறுங்கையோடு நிற்கிறோம்; என்ன செய்யவேண்டுமோ செய்துகொள்ளுங்கள்' என்று கூறிய கட்டபொம்மனையும், உடனிருந்த ஊமைத்துரை (இவர்தாம், கட்டபொம்மனின் இளைய சகோதரரான தளவாய்க் குமாரசுவாமி), துரைசிங்கம் (இவர் இன்னொரு சகோதரர்), முத்தையா (இவர் மைத்துனர்), குமாரசுவாமி, முத்துக்குமார சுவாமி, வீரண்ண மணியக்காரன் ஆகியோரையும் கைது செய்து, கயத்தாறு நோக்கி அழைத்துச் சென்றனர். கட்டபொம்மன் பிடிபட்டதற்கு யார் காரணம் என்று இப்போது வாதம் செய்வதைக் காட்டிலும், வகைதொகை தெரியாமல் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கிக்கொண்டோம் என்னும் படிப்பினையை உணர்வது நல்லது. இந்தச் சம்பவங்களில் எட்டையபுரத்திற்கும் புதுக்கோட்டைக்கும் ஏற்பட்ட கறைகளை மாற்றவும் முடியாது. 

"மங்கம்மாள் சாலை' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பிரதான தென்திசைச் சாலைக்கு அருகே இருந்ததால், நடமாட்டத்தின் வசதி கருதி, கம்பெனிப்படைகள் கயத்தாற்றில் தங்கவைக்கப்படும். 
நாகலாபுரத்திலிருந்த பானர்மென், தானாபதிப்பிள்ளையும் செüந்தரபாண்டியனும் தூக்கிலிடப்பட்ட பின்னர், புதுக்கோட்டைப் பகுதிகளில் கட்டபொம்மன் ஒளிந்திருக்கும் செய்தி கிட்டியவுடன், எப்படியாவது கட்டபொம்மனைப் பிடித்துவிடவேண்டும் என்று புதுக்கோட்டைக்குத் தகவல் அனுப்பி விட்டுக் கயத்தாறை அடைந்தார். 

சிறைபிடிக்கப்பட்டவர்கள், அக்டோபர் 5}ஆம் நாள் கயத்தாற்றை அடைந்தனர். திருச்சிக்கும் மதராஸýக்கும் கடிதம் எழுதிய பானர்மென், தென்பாண்டிப் பாளையத்தார் யாவரையும் கயத்தாறு வரும்படி ஆணை போக்கினார். தம்பியர் இருவரையும் அண்ணனிடமிருந்து தனிமைப்படுத்திப் பாளையங்கோட்டையில் சிறை வைக்க அனுப்பி வைத்தார். 

மதராஸ் ஆளுநரிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன்,1799 அக்டோபர் 16}ஆம் நாள், தாமே நீதிபதியாக அமர்ந்து விசாரணை நடத்தினார். ராபர்ட் ட்யூரிங், ஜார்ஜ் ஹ்யுஸ், மேஜர் பெர்கெட், கர்னல் ப்ரெüன் ஆகிய தளகர்த்தர்கள் இருபுறமும் அமர்ந்திருக்க, டல்லாஸ் மற்றும் டர்னர் ஆகிய தளபதிகள் குதிரைப்படையையும் காலாட்படையையும் இருமருங்கும் நிறுத்தி வைத்திருக்க, பாளையக்காரர்கள் அனைவரும் குழுமியிருக்க, சுற்றுப்பட்டுச் சனங்கள் எட்டி எட்டிப் பார்த்திருக்க, பல்வேறு குற்றங்களைச் சுமத்தி, நீண்டதொரு பத்திரிகை படித்தார். 

பானர்மென்னுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய ராமலிங்க முதலியார், ஹவில்தார் இப்ரஹீம்கான், கட்டபொம்மன் மாமனார் கெடுவட்டூர் நாயக்கர், கம்பெனி அதிகாரி சுவாமி ஆகியோர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். 

தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குத் தக்க விளக்கங்கள் கூறி, குடிசனங்களுக்கு நன்மை செய்ததையும் அண்டிவந்தவரை விட்டுக் கொடுக்கும் வழக்கம் தமக்கு இல்லாததையும் சுருக்கமாகச் சொன்ன கட்டபொம்மனிடத்தில், வேறேதேனும் கூற வேண்டுமா என்று தாம் வினவியபோது, ஏதுமில்லை என்று மெüனம் காத்ததை பானர்மென்னே பதிவு செய்துள்ளார்: 
(தொடரும்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com