

கரூர் மாவட்டம், வெண்ணெய்மலையில் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில் ஆகும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்த கோயிலின் மூலவர் பாலசுப்பிரமணியர். யோகி பகவான் என்பவர் இந்த மலையில் தியானத்தில் இருக்கும் போது அவருக்கு முருகன், பாலசுப்பிரமணியர் அவதாரத்தில் காட்சி தந்து தமது அருள் வெண்ணெய்மலையில் உள்ளதாகவும், அதனை அனைவரும் அறியும்படி செய்யுமாறும் கட்டளையிட்டார். முருகனின் அருட்கோலம் தரிசித்த யோகிபகவான் இது குறித்து கருவூர் அரசனிடம் கூறினார்.
மன்னரும் மரத்தடியில் உயர்ந்த கோபுரம், மண்டபம் அமைத்து முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். சந்நிதிக்கு தென்புறத்தில் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் பிரதிஷ்டை செய்தார்.
தல புராணம்: தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள், பசிப்பிணி அற்று வாழ்வதற்காக வேண்டி, காமதேனு வஞ்சி வனத்திற்கு வடக்குத் திசையில் சிவபெருமானின் அருளினால் வெண்ணெய்யை அதிகமாக உண்டாக்கி வெள்ளிமலையெனக் குவித்ததுடன், அதன்கீழ் தன் பெயரால் தேனு தீர்த்தம் என்னும் பொய்கையும் உண்டாக்கி, தன்னால் படைக்கப்பட்ட உயிர்களின் பசியும் தாகமும் தீர்த்து வந்தது. இந்நிலையில் வஞ்சி வனத்தில் தவம் புரிந்து பிரம்மாவும், விஷ்ணுவும் ஈசனின் அருளால் படைக்கவும், காக்கவும் திறனைப் பெற்றனர். இதனால் காமதேனு ஈசனை எண்ணி தவம் செய்தது.
இதனைக் கண்ட சிவபெருமான் அதற்குக் காட்சி தந்து, வேண்டும் வரம் யாதெனக் கேட்டார். காமதேனு, "ஐயனே, நின் அருளால் நான் இங்குள்ள உயிர்களுக்கு வெண்ணெய்யை நல்ல உணவாக அளித்து வந்தேன். அதை எக்காலத்தும் யாவரும் அறியும் வண்ணம் இவ்விடத்தில் ஒரு வெண்ணெய்மலை உண்டாக்க வேண்டும். மேலும் அதைத் தரிசித்தவர்களின் பாவங்களெல்லாம் போக்க அருள்புரிய வேண்டும்'
என்றது.
அதன்படியே சிவபெருமான் அருள்புரிய, அங்கே வெண்ணெய்மலை தோன்றியது. வஞ்சிவனத்தில் அனைத்து தேவர்களாலும் வழிபடப்பெற்ற சிவபெருமானைத் தானும் வழிபட எண்ணிய முருகப்பெருமான் வஞ்சிவனத்தை அடைந்து, கருவூர்த்தலத்தின் கீழ்த்திசையில் அமராவதி நதிக்கரையில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி பக்தியுடன் பரமனைப் பூஜிக்க, முருகனுக்குத் திருக்காட்சி அருளிய ஈசன், "முருகா! நீ, காமதேனுவால் தோற்றுவிக்கப்பட்டதும், தரிசிப்பவர்களுக்குச் சகலபேறுகளையும் அளிக்க வல்லதுமான வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணியனாக வீற்றிருந்து, உன்னைத் தரிசிப்பவர்க்கெல்லாம் அவர்கள் கேட்கும் வரங்களை கேட்டபடி அருள்வாயாக!' என்றார்.
கருவூர் ஐயனின் அருளினால், வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியன் அருள்புரியும் அற்புதத்தலம் ஆயிற்று.
இத்திருத்தலத்திற்கு வந்து பாலசுப்பிரமணியரை பணிந்தால் வளமாக வாழ்க்கை அமைகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. நகரத்தார் மரபில் வந்த முத்துக்கருப்பன் செட்டியார் கருவூரில் வாணிபம் செய்ய வந்த பொழுது கார்த்திகை வழிபாடு செய்வதற்கு இங்கு வந்தார். சிறப்புகள் வாய்ந்த வெண்ணெய்மலை முருகன் கோயில் சீரழிந்துள்ளதே என்று வருந்தினார். அந்த சமயத்தில் செட்டியாருக்கு முருகன் கனவில் தோன்றி முழுமையும் கருங்கல் திருப்பணியாகச் செய்வீராக என அருள் செய்தார். அவ்வண்ணமே அவரும் திருப்பணி செய்து 1.7.1923-இல் திருகுடமுழுக்கும் செய்வித்தார்.
வழித்தடம்: கரூர்- சேலம் நெடுஞ்சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப்பேருந்து மற்றும் சிற்றுந்து வசதிகள் உண்டு.
-பொ.ஜெயச்சந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.