குரு பெயர்ச்சி: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளுக்கான பலன்கள்

2021ஆம் ஆண்டு நடைபெறும் குரு பெயர்ச்சி தொடர்பான பொதுப் பலன்களை ஜோதிடர்  கே.சி.எஸ். ஐயர்  கணித்து வழங்கியுள்ளார்.
குரு பெயர்ச்சி: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளுக்கான பலன்கள்
குரு பெயர்ச்சி: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளுக்கான பலன்கள்
Published on
Updated on
5 min read

2021ஆம் ஆண்டு நடைபெறும் குரு பெயர்ச்சி தொடர்பான பொதுப் பலன்களை ஜோதிடர்  கே.சி.எஸ். ஐயர்  கணித்து வழங்கியுள்ளார்.

இந்த பிலவ வருஷம் தட்சிணாயனம் சரத் ருது கார்த்திகை மாதம் 4-ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவிதியை திதி, கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி 44 நாழிகை அளவில் இரவு 11.28 மணிக்கு சூரிய பகவானின் ஹோரையில், அவிட்டம் நட்சத்திரம் 2-ஆம் பாதத்திலிருந்து அவிட்டம் நட்சத்திரம் 3-ஆம் பாதத்திற்கு அதாவது "பிரகஸ்பதி' என்கிற தேவர்களுக்கு ஆசானாகிய குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிகளுக்கான குரு பெயர்ச்சிப் பலன்களைப் பார்க்கலாம்.

சிம்மம்

(மகம், பூரம்,உத்திரம்  முதல் பாதம் முடிய)

20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். சிந்தித்து பேசுவீர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு கெüரவம் உயரும். சமூகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவீர்கள்.

போட்டி பொறாமைகளும் எதிர்ப்புகளும் கட்டுக்குள் இருக்கும். பொது காரியங்களில் சுயநலமில்லாமல் ஈடுபடுவீர்கள். 
புத்திர காரகர் ராசியைப் பார்ப்பதனால் குரு பகவானின் காரகத்துவங்களான பொருளாதாரம் மேம்படும், குழந்தைகள் பிறக்கும், இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 

அடிக்கடி உள்நாட்டு பயணங்களை மேற்கொள்ள பாக்கியங்கள் உண்டாகும். குடும்பத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். குறைந்த விலைக்கு வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். நண்பர்களுடன் சேர்ந்து இணக்கமாக பணியாற்றுவீர்கள். அதோடு சில ரகசிய செயல்பாடுகள் மூலம் முக்கிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்கள் செயல்களில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். 

நீண்டகாலமாக இழுபறியாக இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். தன்னம்பிக்கை உயரும். முகத்தில் மலர்ச்சியுடன் நடையில் மிடுக்குடன் காணப்படுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதேநேரம் உடல் ஆரோக்கியம் சுமாராகவே காணப்படும். இதனால் யோகா, தியானம், பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். குழந்தைகளை வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். கவர்ச்சியாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். 
அதேநேரம் எவரும் கேட்காமல் அறிவுரை கூற வேண்டாம். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கித் தருவதோ, வாக்கு கொடுப்பதோ கூடாது. உடன்பிறந்தோரிடமும் முக்கிய ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். குடும்பத்துடன் புனித ஸ்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். இதனால் உங்கள் ஆன்மிக பலம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். அலுவலகத்தில் வேலைப் பளு கூடினாலும் சாமர்த்தியமாக செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். 

வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத் திறமையால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். வியாபாரம் அமோகமாக நடக்கும். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் சிறிது காலதாமதமானாலும் வெற்றி பெறும். 
விவசாயிகளுக்கு வங்கிகளிடமிருந்து கடனுதவி வருவதற்கு சிறிது தாமதமாகும். புதிய முதலீடுகளைத் தவிர்த்திடுங்கள். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து லாபம் பெறலாம். 
அரசியல்வாதிகளுக்கு கட்சியின் மேல்மட்டத்திலும் எதிர்க்கட்சியிலும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் செயல்பாடுகளில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். எவரிடமும் மனம் திறந்து பேசுவதைத் தவிர்க்கவும். 
கலைத்துறையினர் தேக்க நிலை மாறி புதிய மாற்றங்களைச் சந்திப்பீர்கள். சில அவதூறு சம்பந்தப்பட்ட வழக்குகளையும் சந்திக்க வேண்டி வரும். கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். 
பெண்மணிகள் குடும்ப நிர்வாகத்தை நடத்திச் செல்வதில் திறமையுடன் செயல்படுவார்கள். பூஜை புனஸ்காரங்களில் மிகுந்த ஈடுபாடு ஏற்படும். கணவருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உறவினர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். 
மாணவமணிகள் விளையாட்டுகளில் முத்திரை பதிக்க கடுமையாக போராடுவீர்கள். சக மாணவர்களுடன் சுமூக உறவு ஏற்படும். தீவிர முயற்சியால் அதிக மதிப்பெண்
களைப் பெறுவீர்கள். 
பரிகாரம்: ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயரை வழிபட்டு 
வரவும்.

***

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறினாலும், வருமானத்தில் பெரிய லாபத்தைப் பார்க்க முடியாது. புகழை எதிர்பார்க்காமல் கடினமாக உழைப்பீர்கள். மற்றபடி உடலாரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தியானம், பிராணாயாமம், யோகா போன்றவற்றைக் கற்பீர்கள். ஆகார விஷயங்களிலும் கடுமையான கட்டுப்பாட்டுடன் இருப்பீர்கள். பிறரிடம் பேச்சிலும் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். மனநிறைவுடன் பணியாற்றுவீர்கள். 

செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். குழப்பமான விஷயங்களிலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புரியாத புதிர்களுக்கு விடை கிடைக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாகும். குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். நேர்மறை சிந்தனைகளைக் கூட்டிக்கொண்டு, உங்கள் செயல்களை நேர்மையுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்து முடிப்பீர்கள். 
உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு தேவையான உதவிகளை கருணையுடன் செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அசையும் அசையாச் சொத்துக்களை வாங்க முயற்சிப்பீர்கள். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். நீண்ட நாள்களாக தாமதித்த காரியங்கள் துரிதமாக நடைபெறும். விலகி இருந்த நண்பர்கள் திரும்பவும் வந்து சேர்வார்கள். 
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

முக்கியமான முடிவுகள் எடுக்கும் தருணங்களில் உங்களின் சூட்சும அறிவு பயன்படும். சமுதாயத்தில் நல்ல பெயரெடுப்பீர்கள். ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த வம்பு வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். புதியவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மேலும் வாக்குறுதிகள் கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பெற்றோர்களுக்கும் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். சுப காரியங்கள் தொடர்பான சுப விரயங்கள் ஏற்படும். மற்றபடி இந்த காலகட்டம் முழுவதும் உங்களின் தன்னம்பிக்கை உயர்ந்தே காணப்படும்.
உத்தியோகஸ்தர்கள் பலவித பிரச்னைகளுக்கு நடுவிலும் அமைதி காண்பீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட சில வழக்குகளால் துவண்டு போவீர்கள்.  
வியாபாரிகள் த
ங்கள் வியாபாரத்தை கடன் வாங்கி 
விரிவுபடுத்த வேண்டாம். உங்கள் கூட்டாளிகளின் சுயரூபத்தைத் தெரிந்து கொள்வீர்கள்.  

விவசாயிகளுக்கு அனைத்து செயல்களிலும் சிறிய தடைகள் காணப்படும். முன்யோசனையுடன் செயல்பட்டால் நஷ்டத்திலிருந்து தப்பிக்கலாம். கால்நடைகளால் சிறிது லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் வந்தாலும் எதிரியின் கை ஓங்கும். குறுக்கு வழிகளில் செயல்படாதீர்கள்; இதனால் மனவருத்தங்கள் உண்டாக வழி ஏற்படும். எடுத்த காரியங்கள் சற்று இழுபறிக்குப் பின் நிறைவேறும். 
கலைத்துறையினரைப் பொருத்தவரை செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ப சில புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். 

பெண்மணிகள் சில நேரங்களில் விரக்தியுடன் காணப்
படுவார்கள். எதிலும் ஆர்வம் இல்லாத நிலை ஏற்படும். அதனால் ஆன்மிகத்தில் கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். சுற்றுலா செல்வதைத் தவிர்த்திடுங்கள். 

மாணவமணிகளுக்கு கல்வியில் நாட்டம் குறையும். விளையாட்டில் ஈடுபடும் பொழுது சிறு பாதிப்புகள் உண்டாகும்; கவனமாக செயல்படவும். பெற்றோர், ஆசிரியர் சொல் கேட்டு நடக்கவும். 

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.


***

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். செய்தொழிலில் தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பூத்துக்குலுங்கும். உற்றார் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். போட்டி பொறாமைகள் மறையும்.  

நண்பர்கள் உங்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள். செய்தொழிலை விரிவுபடுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றிபெறும். 

சிலர் வெளியூருக்குச் சென்று வசிப்பார்கள். அடிக்கடி வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். அனைத்து செயல்களில் இருந்த தடைகளும் தடங்கல்களும் குறையும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவிகளைச் செய்யும்பொழுது சூழ்
நிலைகளை அறிந்து செயல்படவும். அசையும் அசையாச் சொத்துக்களை வாங்கும் நிலைமை உண்டாகும். அதேநேரம் பத்திரங்களில் கையெழுத்திடும் பொழுது அனைத்து சாராம்சங்களையும் முழுமையாக படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்திடவும். 

சமூகத்தில் உயர்ந்தோர் நட்பு கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்று செயல்படுத்துவீர்கள். தர்ம காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நெடுநாளாக செயல்படுத்த முடியாமல் ஒதுக்கி வைத்திருந்த காரியங்களைச் செயல்படுத்தி அதில் வெற்றியும் பெறுவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றும்; அவைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் நாசூக்காக விலகி இருப்பீர்கள். 
இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய செலவுகளை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கும் காலமிது. வேலையில் சிறிது அலைச்சல் திரிச்சல் ஏற்பட்டாலும் உங்கள் கடமைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

மற்றவர்களின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்கள் செயல்முறைகளை மாற்றிக் கொள்வீர்கள். வருமானத்தை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளைத் தேடுவீர்கள். வரவேண்டிய பழைய பாக்கிகளை முழுமையாக வசூலிப்பீர்கள். குழந்தைகளுக்கு நல்ல பல்கலைக்கழகங்களில் படிக்க அனுமதி கிடைக்கும். பலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் இந்த காலகட்டத்தில் சுயமதிப்பை விட்டுக் கொடுக்காமல், அனைத்து விஷயங்களிலும் வெற்றி காண்பீர்கள். மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.  
வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகளும் வசூலாகும். புதிய முதலீடுகள் செய்து கடையை நவீனப் படுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் செயல்படவும்.  
விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். புழு பூச்சிகளால் சேதம் ஏற்படாமல் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுங்கள். நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். 
அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். மேலிடத்தின் ஆதரவு பெருகும். கட்சியில் உங்கள் மதிப்பு உயரும். புதிய பதவி, பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். 

கலைத்துறையினருக்கு உற்சாகமான சூழ்நிலை அமையும். போட்டி பொறாமைகள் குறைந்து புதிய வாய்ப்புகளைத் தேடிப் பெறுவீர்கள். நல்ல தகவல்கள் வந்துசேரும் காலகட்டமாக இது அமையும். 
பெண்மணிகள் உற்றார் உறவினர்களுடன் சுமுகமான உறவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவரின் ஒத்துழைப்பினால் மனமகிழ்ச்சி ஏற்படும். மழலைகள் வரவால் நல்லதொரு சூழல் உண்டாகும். 

மாணவமணிகள் நீண்டகால திட்டங்களைத் தீட்ட இது உகந்த காலமாகும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். போதிய பயிற்சிகளால் நிறைய மதிப்பெண்களை அள்ளுவீர்கள். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து வரவும். 

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும்.

***

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல்  அனுஷம், கேட்டை முடிய)

20.11.2021 முதல் 13.04.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் அபிவிருத்தி காண்பீர்கள். திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்று, திருப்தியான சூழ்நிலையும் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். பொருளாதாரம் மேன்மை அடையும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பிரச்னைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். பேச்சில் நிதானமும், முகத்தில் பொலிவும் உண்டாகும். கொடுத்த வாக்குகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றி விடுவீர்கள். மற்றவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். சிலர் புதிய வீட்டுக்கு மாறுவார்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

செய்தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள், எதிர்ப்புகளைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கையை, நன்மதிப்பை மேம்படுத்தும் விதமாக நடந்துகொள்வீர்கள். தேவையற்ற வாக்குறுதிகளை யாருக்கும் கொடுக்க வேண்டாம். உங்கள் பெயரில் கடன் வாங்கித் தருவதோ, ஜாமீன் போடுவதோ கூடாது. புதிய முயற்சிகளில் சிந்தித்து இறங்கவும். அரசு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரித்தாலும் இறுதியில் உங்களுக்கு சாதகமாகவே முடியும். நண்பர்கள் உங்களுக்கு இணக்கமாகவும், சாதகமாகவும் இருப்பார்கள். ரகசிய செயல்பாடுகளின் மூலம் அடுத்தவர்களின் திட்டங்களை முன் கூட்டியே அறிந்து கொள்வீர்கள். 

உங்கள் கொள்கையை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் உங்களை வந்தடையும். வருமானம் சீராக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். 

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடலாரோக்கியத்தில் அபிவிருத்தியை காண்பீர்கள். வயிறு, தோல் சம்பந்தப்பட்ட உபாதைகளால் அவஸ்தைப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். புதிய பழக்கவழக்கங்களுக்கு மாறுவீர்கள். செய்தொழிலில் ரகசியங்களைக் காப்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தக்க அறிவுரைகளைக் கூறுவீர்கள். 

புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்வீர்கள். மனதளவில் புதிய பொலிவுடனும், தன்னம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். செய்தொழிலில் புதுமைகளைப் புகுத்துவீர்கள். எதிர்கால மேம்பாட்டிற்காக புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை புண்ணிய காரியங்களுக்கும் செலவு செய்து மகிழ்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சோம்பேறித் தனத்திற்கு இடம் தராமல் கடுமையாக உழைப்பீர்கள். திட்டமிட்ட பணிகளைச் சிரமப்பட்டு முடிப்பீர்கள். பிரயாணங்கள் நன்மை தரும். 

வியாபாரிகளுக்கு சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வரவேண்டிய பழைய பாக்கிகள் உங்களைத் தேடி வரும். மன உறுதியுடன் செயல்பட்டு வியாபாரத்தை மேலும் பெருக்குவீர்கள். திறம்பட யோசித்து புதிய முதலீடுகளைச் செய்யவும். 

விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் உங்களை நாடி வரும். தேவையற்ற வரப்பு பிரச்னைகளில் ஈடுபடவேண்டாம். மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளாலும் நல்ல பலன் உண்டாகும். 

அரசியல்வாதிகள் தங்கள் பிரச்னைகளை மனம் விட்டுப் பேசி மனஸ்தாபத்தைப் போக்கிக் கொள்வீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் எளிதில் வெற்றி அடையும். கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.  
கலைத்துறையினர் பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். படைப்புகளில் உங்கள் தனி முத்திரையைப் பதிப்பீர்கள். 

பெண்மணிகள் குழந்தைகளால் உற்சாகமடைவீர்கள். உடலாரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தாரிடம் உங்களுக்கு நன்மதிப்பு கிடைக்கும்.  
மாணவமணிகள் யோகா, தியானம், பிராணாயாமம் போன்ற மனதைக் கட்டுப்படுத்தும் கலைகளைக் கற்றுக் கொள்ளவும். பேச்சில் நிதானம் தேவை. நண்பர்களுடன் சிறு சிறு சண்டைகள் உண்டாகலாம். எதிலும் அவசரப்படாமல் காரியங்களில் கவனம் செலுத்தவும். 

பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.