கார்த்திகையில் கங்காதரனுக்கு சங்காபிஷேகம்!

தீப வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பூஜித்து வணங்குகின்ற மாதம் கார்த்திகை மாதம்.
கார்த்திகையில் கங்காதரனுக்கு சங்காபிஷேகம்!
கார்த்திகையில் கங்காதரனுக்கு சங்காபிஷேகம்!
Published on
Updated on
2 min read

தீப வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பூஜித்து வணங்குகின்ற மாதம் கார்த்திகை மாதம். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை மாதத்தில், சோமவாரம் எனப்படும் திங்கள்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான தினமாகும். 

திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். சந்திர பகவான் "மனோகாரகர்' ஆவார். மனதில் எழும் எண்ணங்களுக்கு இவரே காரண கர்த்தாவாக 
இருக்கிறார்.  

சந்திரனைப் பிறையெனச் சூடிக் கொண்டிருக்கும் ஈசனுக்கு பல சிவாலயங்களில், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம்  நடைபெறுகிறது. சந்திரனுக்கு "சோமன்' என்ற பெயரும் உண்டு. அதனால்தான் சிவனுக்கு சோமநாதன், சோமேஸ்வரர், சந்திர சூடேஸ்வரர், சந்திர சேகரர் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்துள்ளன. 
எட்டுவகை சங்குகள்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது வெளிவந்த பதினாறு வகையான தெய்வீகப் பொருள்களில் வலம்புரி சங்கும் ஒன்று என்கிறது புராணம். இந்த சங்கே தெய்வ ஆராதனைகளில் ஒலி எழுப்பப் பயன்படுத்தப்படுகிறது. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என எட்டுவகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகவும், ஒவ்வொரு தெய்வமும் அவைகளுக்குரிய சங்குகளைக் கொண்டிருப்பதாகவும் வைகானஸ ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.        

பெரும்பாலான சங்குகளில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்
படும். இதனை இடம்புரி சங்கு என்று கூறுவர். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக இருக்கும். அத்தகைய சங்குகளை வலம்புரி சங்கு என்பார்கள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி சங்கே பெருமை பெற்றது. அந்த சங்கினால் பூஜைகள் செய்வது அளவற்ற பலன்களைத் தரவல்லது. 
 மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் உள்ளது 
வலம்புரி சங்கு. 

பஞ்ச பாண்டவர்களில் தருமர் "அனந்த விஜயம்' எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ச்சுனன் "தேவதத்தம்' எனும் தேவசங்கையும், பீமன் "மகாசங்கம்' எனும் பெரிய சங்கையும், நகுலன் "சுகோஷம்' எனும் அதிர்ஷ்ட சங்கையும், சகாதேவன் "மணி புஷ்பகம்' எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
சங்கு, நுண் கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணம் கொண்டது. வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது. மேலும் தீய சக்திகளைத் தடுக்கும் குணம் உள்ளது. இதனால் தான் இன்றும் சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதற்கும் சங்கைப் பயன்படுத்தி வந்தனர். 

சங்கினை காதில் வைத்துக் கொண்டால் ஓம்கார ஒலியைக் கேட்கலாம். ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை  அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்
கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில்தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்
படுகிறது.  சங்காபிஷேகம் செய்வதில் பல நியமங்கள் இருக்கின்றன. 54, 60, 108 சங்குகள், 1,008 சங்குகள் என்ற எண்ணிக்கைகளில் அபிஷேகம் செய்வார்கள்! 
சங்குகளில் புனித நீரால் அபிஷேகம் செய்ய, சிவபெருமான் மனம் குளிர்ந்து நமக்கருள்வான் என்பது நம்பிக்கை. 

முக்கியமான சில கோயில்கள்: சங்காபிஷேகம் நடக்கும் முக்கியமான திருக்கோயில்களில் திருக்கடையூர், திருவெண்காடு, திருப்பனந்தாள், திருவையாறு, திருவானைக்காவல், திருக்கழுகுன்றம், பேரூர், போளூர், திருவேடகம், திருப்பாதிரிப்புலியூர், ராமேசுவரம், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆகிய கோயில்கள் 
முக்கியத்துவம் வாய்ந்தவை. 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை: திருக்கழுகுன்றத்தில் உள்ள சங்கு தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரி சங்கு தோன்றுவது குறிப்பிடத்தக்கது. 
கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்து சங்காபிஷேகம் செய்பவர்களுக்கு குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும். மனக் கவலைகள் அனைத்தும் தீரும். நோய்கள் நீங்கி ஆயுள் பெருகும். 

இதனையே புலிப்பாணி சித்தர், "சிவனார்க் கேத்த நாளதனிலே சங்காபிடேகம்...' என்ற பாடலில் போற்றுகிறார். 
நவ. 22, 29, டிச. 6, 13 ஆகிய கார்த்திகை சோமவார நாள்களில் சிவ ஸ்தலங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டு இறைவனின் திருவருளைப் பெறுவோம்!

    - அபிராமி மைந்தன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com