குருவும் சீடர்களும்!

இயேசு தனது திருமுழுக்கினைப் பெற்ற பிறகு, தூய ஆவியானவர் புறா வடிவில் அவர் மீது இறங்கியதை திருமுழுக்கு யோவான் கண்டார்.
குருவும் சீடர்களும்!


இயேசு தனது திருமுழுக்கினைப் பெற்ற பிறகு, தூய ஆவியானவர் புறா வடிவில் அவர் மீது இறங்கியதை திருமுழுக்கு யோவான் கண்டார். மறுநாள் யோர்தான் நதிக்கரைக்கு இயேசு சென்றபோது, யோவான் அவரோடிருந்த அவருடைய இரு சீடர்களிடம் ""இதோ! இறைவனின் செம்மறி!'' என்று இயேசுவை வெளிப்படுத்தினார். அதுமுதல் யோவானின் அவ்விரு சீடர்களும் இறைமகன் இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

தம்மைத் தொடர்ந்துவந்த அவர்களைப் பார்த்து இயேசு ""என்ன தேடுகிறீர்கள்?'' என்று கேட்டார். அவர்கள் ""நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?'' எனக் கேட்டார்கள். 

""என்னுடன் வந்து பாருங்கள்!'' என்று மறுமொழி பகர்ந்தார். அவர்கள் சென்று இயேசுவோடு தங்கினர். அவர்களில் ஒருவர் அந்திரேயா. 

பின்னர் அவர் சென்று தனது சகோதரரான சீமோன் பேதுருவிடம் ""மெசியாவைக் கண்டோம்!'' என்று கூறி, அவரே பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தாரென திருமுழுக்கு யோவான் உரைக்கிறார். 

ஆனால் மற்ற மூன்று நற்செய்திகளும், "இயேசுவே சீமோனையும் அந்திரேயாவையும் தேடித் தெரிந்தார்!' என்று பேசுகிறது. அந்நாட்களில் மெசியாவின் வருகையை எதிர்பார்த்து யூதர்கள் காத்திருந்ததால், அவரைப்பற்றிய தேடலின் தூண்டுதலாக திருமுழுக்கு யோவானே இருந்தார். அவரே இயேசுவின் முதல் வருகையை முன்னறிவிக்க வந்தவர் என்பது முன்னுரைக்கப்பட்ட மொழி.

அமெரிக்கப் பேராயர் புல்டன் ஜான் ஷீன் எழுதிய "கிறிஸ்துவின் வாழ்க்கை' என்ற ஆய்வு நூலின்படி, இயேசுவைச் சேர்ந்த சீடர்களில் ஐவர் திருமுழுக்கு யோவானின் சீடர்களே ஆவர். 

தம்மை விட்டு நீங்காத சீடர்களிடம், ""நீங்கள் காண்பதைக் காணும் கண்கள் பேறுபெற்றவை. ஏனெனில் நான் உங்களுக்கு சொல்கிறேன், இறைவாக்கினர், அரசர் பலர் நீங்கள் காண்பதைக் காண விரும்பியும் காணவில்லை. நீங்கள் கேட்பதைக் கேட்க விரும்பியும் கேட்கவில்லை!' என்றார் (லூக். 10:23-24). 
இதற்கப்பாலும் சீடர்களிடம் இயேசுவைப் பின்பற்றுவதால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்பும் இருந்தது. அதையும் அவரிடமே கேட்கத் துணிந்தனர். 
ஒருமுறை பேதுரு அவரிடம் ""நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே! எங்களுக்கு என்ன கிடைக்கும்?'' என்றார். அதற்கு இயேசு ""புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் நடுவர்களாய் பன்னிரு அரியணையில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்றார் (மத். 19:27-29).         
சீடரும் தலைவரும் ஒத்த மனமும் குணமும் உடையவராய் இருக்கவேண்டும் என இயேசு பன்முறை போதித்தார். வாழ்ந்தும் வழி காட்டினார். அவரது விண்ணேற்புக்குப் பின்னர், இன்னும் சிலர் சீடராகி, எல்லோரும் உலமெல்லாம் சென்று நற்செய்தியை அறிவித்து இயேசுவைப்போலவே துயரம் சுமந்து, தூய வாழ்வு வாழ்ந்து மரித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com