ஓணத் திருநாள்: மக்களின் மகிழ்ச்சியே மகாபலியின் மகிழ்ச்சி!

சாதி, மத வேறுபாடின்றி உலகம் முழுவதுமுள்ள அனைத்து மலையாள மக்களாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை
ஓணத் திருநாள்: மக்களின் மகிழ்ச்சியே மகாபலியின் மகிழ்ச்சி!
ஓணத் திருநாள்: மக்களின் மகிழ்ச்சியே மகாபலியின் மகிழ்ச்சி!

சாதி, மத வேறுபாடின்றி உலகம் முழுவதுமுள்ள அனைத்து மலையாள மக்களாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் "அறுவடைத் திருநாள்' எனவும் அழைக்கிறார்கள். இவ்வாண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஓணம் கொண்டாடப்படுகிறது.

27 நட்சத்திரங்களில் மிகவும் சிறப்புப் பெற்றவை, பெருமாளுக்குகந்த திருவோணமும், சிவபெருமானுக்குகந்த திருவாதிரையும்தான். இவற்றை மட்டும்தான் "திரு' என்ற அடைமொழியோடு அழைக்கிறோம். 

அத்தகைய பெருமைமிகு திருவோணத்தன்று கொண்டாடப்படுவதுதான் ஓணம் பண்டிகை.

இத்திருவிழாவிற்குப் பின்னணியில் ஓர் அழகான வரலாறு உள்ளது.

சிவராத்திரியன்று ஓர் எலி, ஈஸ்வரனின் கருவறையில் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தபோது, தனக்குத் தெரியாமலேயே அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியை தன் வாலால் தூண்டிவிட, அது பிரகாசமாக எரிந்தது. 

அந்த புண்ணிய பலனால் அடுத்த பிறவியில் பிரகலாதனின் பேரனாகப் பிறந்தது அந்த எலி. அவன்தான் மகாபலி சக்கரவர்த்தி. மிகவும் தர்ம சிந்தனை உள்ளவனாக நீதி வழுவா நெறிமுறையில் ஆட்சி செய்து வந்தான். வள்ளல் தன்மை கொண்ட அவன், தன் நாட்டு மக்களை மிகவும் நேசித்தான். ஆனாலும் அவனுக்குள்ளும் ஒரு பேராசை இருந்தது. அதுதான் இந்திரலோகப் பதவி. 

அப்பதவியைப் பெறும் பொருட்டு ஒரு மாபெரும் யாகம் செய்யத் தலைப்பட்டான். பல பிறவிகளில் தவமிருந்து பெறவேண்டிய சிறப்பு மிக்க இந்திர பதவியை, ஒரே யாகத்தில் மகாபலி பெறுவதை விரும்பாத இந்திரனும் தேவர்களும்,  ஸ்ரீமன் நாராயணனை சரணடைந்தனர். 

தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற நாராயணன், வாமன முனிவராக அவதாரம் செய்து, மகாபலியிடம் சென்று, தான் செய்யும் யாகத்திற்கு தன் கால் அளவில் மூன்றடி நிலம் தானம் கேட்டார். 

ஆனால் மகாபலியோ, பொன்னும் பொருளோடு, அதிகமாகவே நிலம் தருகிறேன் என்று கூறியும், வாமனன் பிடிவாதமாக தன் காலால் மூன்றடி நிலம் மட்டுமே வேண்டும் என்றார். 

மகாபலியும் அதற்கிசைந்து மூன்றடி நிலத்தைத் தாரை வார்த்துக் கொடுக்க, அந்த நேரத்தில் வாமனனாக வந்த மகாவிஷ்ணு, விஸ்வரூபம் எடுத்து ஓர் அடியால் பூமியையும், மற்றுமோர் அடியால் விண்ணையும் அளந்துவிட்டு, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்க, வந்தது பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனே என அறிந்த மகாபலி,  தன் சிரசில் பகவானின் மூன்றாவது அடியை வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். நாராயணரும் அவ்வாறே அவன் தலையில் மூன்றாவது அடியை வைத்து அழுத்தி, அவனை பாதாள உலகத்திற்கு அனுப்பினார். 

அச்சமயத்தில் மகாபலி இறைவனிடம், வருடத்தில் ஒருமுறை தான் ஆண்ட பூமிக்கு வந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்த்துச்  செல்லவேண்டுமென்று வரம் கேட்க, அவன் கேட்ட வரத்தை அவனுக்கு அருளினார். பாதாள உலகின் சக்கரவர்த்தியாக இன்றும் மகாபலி விளங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. 

அவன் வாங்கிய வரத்தின்படி, ஒவ்வொரு ஓணத் திருநாள் அன்றும் பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வந்து செல்வதாக ஐதீகம். மகாபலியை வரவேற்கும் வகையில் ஓணம் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் "அத்தப்பூக்கோலம்' போட்டு, புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். இந்த நாளில் பாரம்பரிய படகுப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் பங்குபெறுவோர் "வஞ்சிப்பாட்டு' எனும் பாடலைப் பாடிக்கொண்டே உற்சாகத்துடன் படகை விரைவாக செலுத்துவது வழக்கம். 

இத்திருநாளின் போது, "ஓண சாத்யா' என்ற பாரம்பரிய உணவுவகை தயாரிக்கப்படுகிறது. "கானம் விற்றாவது ஓணம் உண்' என்பது பழமொழி. 

ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா' தயாரிக்கப்பட்டு, தலைவாழை இலைபோட்டு உணவருந்துவார்கள். பெண்கள் கும்மி கொட்டுவர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். புதுமணத் தம்பதிகள் இந்த நாளை தலை தீபாவளி போன்று "தலை ஓணம்' என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். 

மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அறிந்த மகாபலி மன்னனும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கிவிட்டு, மீண்டும் பாதாள லோகம் செல்கிறான் என்பது மக்களின் நம்பிக்கை..!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com