செயல்படாத கால்கள் செயல்பட்டன!
By -முனைவர் தே. பால்பிரேம்குமார் | Published On : 02nd July 2021 06:03 PM | Last Updated : 02nd July 2021 06:03 PM | அ+அ அ- |

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்து பரலோகம் சென்ற பின்பு அவரின் சீடர்கள் தம் குருவைப் போலவே போதிப்பதிலும் அடையாளங்கள், அற்புதங்கள் செய்தனர். நோயாளிகளைக் குணமாக்கினர். பிசாசுகளைத் துரத்தினர். தம் குரு இயேசுவைப் போல் சகல அதிகாரங்களையும் பெற்றனர்.
ஒருமுறை சீடர்கள் பேதுருவும், யோவானும் மாலை மூன்று மணிக்கு ஜெப ஆலயத்துக்குப் போனார்கள். அப்போது ஆலயத்துக்கு முன்பாக கால்கள் செயலிழந்த பிச்சைக்காரனைப் பார்த்தார்கள்.
அந்தப் பிச்சைக்காரன் பிறக்கும் போதே இரு கால்களும் செயல்
படாத நிலையில் இருந்தன. எல்லா குழந்தைகளும் பிறந்து ஆறு மாதங்களுக்குப் பின் தவழ்ந்து, நகர்ந்து பெற்றோரை மகிழ்வித்ததைப் போன்ற அனுபவம் இப்பிள்ளையின் பெற்றோருக்கு வாய்க்கவில்லை.
இப்பிள்ளையின் பெற்றோர் மிகவும் வேதனை அடைந்தனர். மற்ற பிள்ளைகள் நடந்து, ஓடி ஆடித் திரிந்தன. ஆனால், இப்பிள்ளை எழுப்பி உட்கார வைத்த இடத்திலேயே இருந்தது.
வளர்ந்து பெரியவனான போது அவனைத் தூக்கிக் கொண்டு போய், ஜெப ஆலயத்தின் படிகளில் உட்கார வைத்தனர். ஆலயத்துக்கு வருவோரும் போவோரும் பிச்சையாக காசு போட்டனர். அவன் நிலை அறிந்து பலரும் பரிதாபப்பட்டனர்.
இப்படி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, அவன் அருகில் இயேசுவின் சீடர்களான பேதுருவும், யோவானும் வந்தனர்.
அப்பொழுது பிச்சைக்காரன் பேதுருவையும், யோவானையும் பார்த்து, பிச்சையாக நிறைய காசு கிடைக்கும் என்று ஆவலுடன் இருந்தான். பேதுரு அவனை உற்றுப் பார்த்து ""எங்களிடம் பொன், வெள்ளிக்காசு எதுவுமில்லை. நசரேனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் உனக்குச் சொல்கிறேன்; எழுந்து நட..!'' என்று கூறி அவன் கையைப் பிடித்து தூக்கி விட்டார்.
என்ன ஆச்சரியம்..? முழு வளர்ச்சி அடையாத அவனது இருகால்களும் பலம் பெற்று, மூட்டுக்கள் செயல்பட்டு எழுந்து நின்றான், நடந்தான், குதித்தான்..!
ஆம்! இயேசு அவனுக்கு அற்புதம் செய்து விட்டார். பிச்சைக்காரன் மிக மகிழ்ந்து போனான். அந்தக் கணமே தான் பிச்சை எடுப்பதை விட்டு விட்டு, பேதுருவுடனும், யோவானுடனும் கடவுளைத் துதித்துப் போற்றிக் கொண்டே தேவாலயத்துக்குள் சென்றான். இறைவனுக்கு சாட்சி சொன்னான். தான் குணமானதை எல்லோருக்கும் அறிவித்தான்.
"இவன் சப்பாணியல்லவா? எப்படி குணமானான்?' என்று அனைவரும் வியந்தார்கள். இறைவன் அவனை சீடர்கள் பேதுரு, யோவான் ஆகியோர் மூலம் குணமாக்கினார் என்றறிந்து, இயேசு ஆண்டவரைப் போற்றி அவர் பேரில் பக்தி கொண்டனர். ஆம்! இயேசு நமக்கு அற்புத அடையாளம் செய்வார் (அப்போஸ்தலர் 3: 1- 12). என்றும் இறையருள் நம்மோடு..!