துலாக்கோல் நேர் நிற்க..!

அமர்நீதி நாயனார் சோழநாட்டில் பழையாறை என்னும் சிறப்புமிகு தலத்தில் தோன்றினார். இவர் தாம் மேற்கொண்ட வணிகத்தால் பெரும் செல்வந்தராக விளங்கினார்.
துலாக்கோல் நேர் நிற்க..!

அமர்நீதி நாயனார் சோழநாட்டில் பழையாறை என்னும் சிறப்புமிகு தலத்தில் தோன்றினார். இவர் தாம் மேற்கொண்ட வணிகத்தால் பெரும் செல்வந்தராக விளங்கினார்.

சிவனடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் ஆகியவற்றை அளித்து திருத்தொண்டு செய்து வந்தார். சிவனடியார்களுக்கு திருவமுது அளிப்பதற்காக அருகில் உள்ள திருநல்லூரில் ஒரு மடம் கட்டி, சிவத்தொண்டு செய்து வந்தார்.

இந்நிலையில் சிவபெருமான் இவருக்கு அருள் புரிவதற்காக கையில் இருக்கும் கோவணம் முடிந்த ஒரு தண்டுடன் சிவனடியாராக அமர்நீதியார் மடத்தை அடைந்தார். 

அமர்நீதியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவரை வரவேற்று உபசரித்தார். சிவனடியார் நீராடச் செல்லும் முன் தாம் கொண்டுவந்த தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் அளித்து பாதுகாப்பாக வைக்கும்படி கூறிச் சென்றார். திரும்பும் பொழுது மழையில் நனைந்தபடி சிவனடியார் மடத்திற்கு வந்தார். தாம் அளித்த கோவணத்தைக் கேட்டார் அவர். அமர்நீதி நாயனார் அதனைத் தேடிய பொழுது அது கிடைக்கவில்லை.

சிவனடியார் சீற்றம் அடைந்தார். அமர்நீதியார், "வேறு நல்ல கோவணம் தருகிறேன்' என்று கூறியதையும் கேட்கவில்லை. சிவனடியார் "தாம் கொண்டு வந்த தண்டில் கட்டி இருந்த கோவணத்துக்கு ஈடாக தரமுடியுமா?' என்று வினவ துலாக்கோல் ஒன்றில் புதிய கோவணங்களை வைத்தும் தராசு சமநிலை அடையவில்லை. 

தமது செல்வங்களையும் வைத்தார். அப்பொழுதும் தராசு சம நிலையை அடையவில்லை. இறுதியாக தனது மனைவி, புதல்வன் ஆகியோரையும் அமர்த்தினார். அப்போதும் தராசு சமநிலை அடையவில்லை. இறுதியாக, "இறைவன் மீது கொண்ட அன்பு இறை திருநீற்று மெய் அடிமை பிழை செய்யவில்லை என்றால் துலாக்கோல் நேர் நிற்க,' எனக்கூறி பஞ்சாட்சரத்தை ஓதி தட்டிலே அமர்ந்தார். துலாக்கோல் தட்டு இரண்டும் சமமாக நின்றன.

சிவனடியாராக வந்த இறைவன் உமையம்மையுடன் காட்சி தந்து அமர் நீதியாருக்கு இறை அருள் புரிந்தார். 

சிவபெருமானின் திருவருளால் இந்நிகழ்வில் பங்குகொண்ட துலாக்கோல் விமானம் ஆகி, அமர்நீதிநாயனார், மனைவி, மகன் மூவரும் வானம் எய்தி, சிவபெருமானின் கருணையைப் பெற்றார்கள். "அன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த ஆதி மூர்த்தியாருடன் சிவபுரியினை அணைந்தார்' என்று பெரிய புராணம் புகழ்ந்து பேசுகிறது. 

அமர்நீதிநாயனார் இறை அருள் பெற்ற தலம் திருநல்லூர் ஆகும். கும்பகோணம் அருகில் இத்தலம் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் பெருமானுக்கு திருவடி சூட்டியதும் இத்தலத்திலேயேதான். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலில் அமர்நீதி நாயனார், அவர் மனைவி, குழந்தை ஆகியோரின் திருவுருவ சிற்பங்கள் அமைந்துள்ளன. 

அமர்நீதிநாயனாரின் திருநட்சத்திரம் ஆனி மாதம் பூரம் நட்சத்திரம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com