குருவைப் போற்றும் குரு பூர்ணிமா!

இப்பூவுலகில், கடவுள் அவதாரங்களாகவும், சத்குருமார்களாகவும், மகான்களாகவும் அவதரித்தவர்கள் ஆன்மிகத்தை வெவ்வேறு சுவைகளாகவும், நறுமணங்களாகவும் வழங்கியுள்ளார்கள்.
குருவைப் போற்றும் குரு பூர்ணிமா!
Published on
Updated on
2 min read

இப்பூவுலகில், கடவுள் அவதாரங்களாகவும், சத்குருமார்களாகவும், மகான்களாகவும் அவதரித்தவர்கள் ஆன்மிகத்தை வெவ்வேறு சுவைகளாகவும், நறுமணங்களாகவும் வழங்கியுள்ளார்கள். இவ்வளவு மகிமை வாய்ந்த ஆன்மிகத்தில் ஆணிவேராகத் திகழும் குருவைப் போற்றும் திருநாளே குரு பூர்ணிமா!
 தனியாக ஒரு மனிதன் சிந்தித்து, பரம்பொருளை உணர்ந்து, ஞானம் அடைவது கடினம். அதற்கு குருவின் துணை இன்றியமையாதது.
 குரு என்பவர்யார்?. "கு' என்றால் "இருள்'. "ரு' என்றால் "போக்குபவர்'. அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஞானமாகிய ஒளியைத் தருபவரே குரு ஆவார். தன் சீடர்களுக்கு ஆன்மிக முன்னேற்றம் ஏற்பட, யார் அவர்களுக்கு சாதனையைக் கற்றுத் தந்து, ஆன்மிக அனுபவங்களை அருள்கின்றாரோ அவரே குரு எனப்படுகிறார்.
 குரு குல வாசத்தின்போது, சிஷ்யர்களாகச் சேர்ந்தவர்கள் குருவுக்குத் தேவையான எல்லா பணிகளையும் செய்து அவரின் அன்பைப் பெறுவர்.
 ஸ்ருதி, ஸ்மிருதி: குருவானவர், ஸ்ருதி எனப்படும் வேத மந்திரங்கள், வேதாந்தம், ஸ்மிருதி எனப்படும் பிரம்ம சூத்திரம், யோகா, சமயச்சடங்குகள், கர்மயோகம், தாந்திரீகம், பக்தி, ஞானயோகம், இலக்கணம், மீமாம்சை, நியாயம், இதிகாசம் மற்றும் புராணங்கள் போன்ற ஆன்மிக கல்வியுடன், அரசியல் நுட்பம், ராஜதந்திரம், ராஜதர்மம், ஜோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம், சமூகச் சட்டங்கள் போன்ற வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களையும் சீடர்களுக்கு வாய்மொழியாகவே போதிப்பார். இதில் பல சீடர்கள் நன்றாகப் பயிற்சி பெறுவர். ஆனால் சிலரால் அவ்வாறு முடியாது. அவர்களையும் தன் தபோ வலிமையால் தீட்சை அளித்து, அவர்களுக்கும் எல்லா வித்தைகளும் வந்தடையச் செய்வார்.
 தன்னை நம்பி வருகின்றவர்கள் நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று எந்தவொரு குருவும் நினைப்பார். அவர்களிடமிருந்து எவ்விதப் பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் நல்வழிப்படுத்தி இறையின்பத்தை அனுபவிக்கச் செய்கின்ற பெருந்தன்மையை குருவைத் தவிர வேறு யாரிடமும் காணமுடியாது.
 எல்லா உயிர்கள் மீதும், எல்லோரிடமும் பாரபட்சமின்றி அன்பு காட்டுகின்ற கருணைக் கடல்தான் குரு.
 குரு பூர்ணிமா என்கிற குரு பௌர்ணமி: குருவே தெய்வம். குருவே பிரம்மா. குருவே விஷ்ணு. குருவே மகேஸ்வரன். குருவே தேவர்கள். குருவே சாட்சாத் பரப் பிரம்மம். இத்தகைய பெருமை வாய்ந்த குருவைப் போற்றும் திருநாளான "குரு பூர்ணிமா' இவ்வருடம் ஜூலை 24-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
 மழைக்காலமாக இருக்கும் இச்சமயத்தில் சந்நியாசிகள் தங்கள் சீடர்களுடன் பயணங்கள் மேற்கொள்வதால் வழியில் சிறு உயிரினங்கள் துன்புறும் என்பதால், அன்றிலிருந்து நான்கு மாதங்கள் எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் தங்கி விரதம் அனுஷ்டிப்பர். இதை "சாதுர்மாஸ்ய விரதம்' என்பர்.
 அச்சமயத்தில் தங்கள் நித்ய பூஜைகளுடன் வேத சதஸ், சதுர்வேத பாராயணம், உபன்யாசங்கள் செய்து, தங்களை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். நாம சங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரிகள் போன்ற வைபவங்களும் இடம் பெறுவதுண்டு. தற்காலத்தில் நான்கு மாதங்கள் என்பது நான்கு பட்சம் - அதாவது இரண்டு மாதங்களாக - அனுஷ்டிக்கப்படுகிறது.
 விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதத்தை இவ்வருடம் காஞ்சி அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஓரிக்கை திருத்தலத்தில், காஞ்சி மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆஷாட பெளர்ணமியன்று வியாச பூஜையுடன் தொடங்கி, செப்டம்பர் 20-ஆம் நாள் பாத்ரபத பெளர்ணமி வரை அனுஷ்டிக்கிறார்.
 சாதுர்மாஸ்யத்தின் இடையே ஸ்ரீமடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக விளங்கிய ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 87-ஆவது ஜயந்தி தினம் வருவது குறிப்பிடத்தக்கது.
 வியாச பெளர்ணமி: வேதத்தைத் தொகுத்து நான்காகப் பிரித்து நமக்கெல்லாம் எளிமையாக வழங்கி, சனாதனதர்மத்தை வேரூன்றச் செய்த வேத வியாசர் நமக்கெல்லாம் ஆதி குருவாக விளங்குகிறார்.
 அவர் வடக்கில் "நைமி சாரண்யம்' என்ற இடத்தில் அமர்ந்து வேதங்களைத் தொகுத்து புராணங்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது. அவரைப் போற்றும் வகையில் ஆடி மாதத்தில் வரும் இந்த பெளர்ணமி "வியாச பெளர்ணமி' என்றும் அழைக்கப்படுகிறது.
 தென்னகத்தில், சென்னை மாகாணத்தில் மகரிஷி வியாசரும், அவரது சீடர்களும் வாழ்ந்த ஒரு பகுதி "வியாசர் பாடி' என்றழைக்கப்படுகிறது.
 இவ்வூரில் அமைந்துள்ள ஸ்ரீமரகதாம்பாள் சமேத ரவீஸ்வரர் திருக்கோயிலில் சிவன் சந்நிதிக்குப் பின்புறம் வியாசருக்குத் தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு, வியாசர் புலித்தோல் மீது பத்மாசனத்தில் அமர்ந்து அருள் புரிகிறார். கல்வி, கேள்விகளில் தங்கள் குழந்தைகள் சிறந்து விளங்க இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
 வியாச பெளர்ணமியன்று நாமும் வியாசரைத் துதித்து அவர் அருள் பெறுவதோடு நமக்கு குருவாய் அமைந்த அனைவரையும், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை மனதில் தியானித்து வேண்டிக்கொண்டால் அவர்கள் அருளால் நம் வாழ்வு சிறக்கும். சாதுர்மாஸ்ய விரத சமயத்தில் நாம் குருவைத் தேடிச் சென்று வணங்கினால் நமக்கு இரட்டிப்புப் பலன் கிடைக்கும் அல்லவா!
 -அபிராமி மைந்தன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com