தேவியின் திருத்தலங்கள்: திருவையாறு தர்மசம்வர்த்தனி அம்மன் - 34

"அமீ ஹ்ருல்லேகாபிஸ் - திஸ்ருபி - ரவஸாநேஷு கடிதாபஜந்தே வாணாஸ்தே தவ ஜநநி நாமா வயவதாம்'
தேவியின் திருத்தலங்கள்: திருவையாறு தர்மசம்வர்த்தனி அம்மன் - 34

"அமீ ஹ்ருல்லேகாபிஸ் - திஸ்ருபி - ரவஸாநேஷு கடிதா
பஜந்தே வாணாஸ்தே தவ ஜநநி நாமா வயவதாம்'

-செளந்தர்ய லஹரி

"உன்னைக் காக்கவே நான் எப்போதும் இருக்கிறேன். உனக்காகவே நான் வெவ்வேறு வடிவெடுத்து வருகிறேன்!' - என்கிறாள் தேவி பாகவதத்தில். அவளின் தோற்றத்தில் ஒன்றுதான் தர்ம சம்வர்த்தனி என்கிற அறம் வளர்த்த நாயகியாக அன்னை காட்சி அளிக்கும் திருவையாறு.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பதினைந்தாவது தலம். காசிக்குச் சமமான ஆறாவது தலம். காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது என்பது ஐதீகம். "பஞ்சநதி' என்பதே "திருவையாறு' என அழைக்கப்படுகிறது.

இக்கோயில் ஐந்து வீதிகள் உள்பட பதினைந்து ஏக்கரில் அமைந்துள்ளது. முதல் பிரகாரத்தில் இறைவன் சந்நிதி உள்ளது. ஈசான்யத்தில் அம்பிகையின் சந்நிதி உள்ளது. இதற்கு இரண்டு சுற்றுகள் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு தனி
ராஜகோபுரம்.

இங்குள்ள முக்தி மண்டபத்தில் நந்தி தேவர், விஷ்ணு, அகத்திய முனி ஆகியோர் உபதேசம் பெற்றனர். இங்கு அமர்ந்து பஞ்சாட்சரம் ஜபித்தால் அது லட்சம் மடங்கு பலன் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஈசன் "ஐயாறப்பன்', "பஞ்ச நதீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இது பூலோக கைலாயம் என்றழைக்கப்படுகிறது. இறைவன் அப்பர் பெருமானுக்கு கைலாயக் காட்சியளித்து முக்தி அளித்த தலம்.

இறைவனின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பறந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். எனவே பிரகாரத்தைச் சுற்றி வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்மனின் சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடமாகும். இங்கு அன்னை கொலுவிருந்து அனைத்து அறங்களையும் பூமியில் செழித்து வளர வைக்கிறாள். அய்யன் பிருத்வி லிங்கம் (மண்) என்பதால், ஆவுடையார் மேல் மட்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

இங்கு சோழர்கால கல்வெட்டுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. மிகப் பழைமையான சிற்பங்கள் நிறைந்துள்ளன. தென்மேற்கு மூலையில், வடக்கு நோக்கி நின்று "ஐயாரப்பா' என்று அழைத்தால் அது ஏழுமுறை எதிரொலிக்கும்.
விழாக்காலங்களில் தெற்கு கோபுர வாயில் வழியாக இறைவனும், இறைவியும் உலா வருவார்கள். சித்திரை மாதப் பெளர்ணமியும் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது இறைவனும், இறைவியும், மக்களுடன் ஏழூர்களுக்கு ஊர்வலம் வருவர். இதைத் திருநந்தி தேவரின் திருமண ஊர்வலம் என்பார்கள்.

இங்கு அம்பிகை விஷ்ணுவின் அம்சமாகக் காட்சி அளிப்பதால், இதன் எல்லைக்குட்பட்ட இடங்களில் பெருமாளுக்குக் கோயில் கிடையாது. சுவாமி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி விசேஷ மகிமை வாய்ந்தவர். பெருமாளால் வழிபடப்பட்டவர். பெருமாள் வழிபட்ட குரு பகவான் தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார்.

இது சூரியனுக்கான தலம். இத்தலத்தில் பெண்கள் தர்மம் செய்தால் அது இரட்டிப்பு பலன் தரும் என்பது நம்பிக்கை.

ஒரு குடும்பத்தில் பெண்கள் செய்யும், தர்மமும், அறச்செயல்களுமே அக்குடும்பத்தைப் பல விதங்களில் கவசமாக நின்று காக்கிறது. எனவே அதன் அவசியத்தை பெண்களுக்கு உணர்த்தவே அம்பிகை இங்கு தர்ம சம்வர்த்தினியாகக் காட்சி அளிக்கிறாள்.

அஷ்டமி திதி அன்று இரவு நேரத்தில் அன்னையின் திருக் கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் எல்லா நாளும் நல்ல நாளே என்று உணர்த்துகிறாள் அம்பிகை.

பரிகாரத் தலம்

திருமணத் தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள இறைவியை, ஈசனை வழிபாடு செய்கிறார்கள். மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை நாள்களில் "அப்பர் கயிலை காட்சி விழா' நடைபெறுகிறது.

எம பயம் நீங்கவும், வாழ்வில் முக்தி பெறவும் இங்கு வந்து வழிபடுவது நல்லது. சுசரிதன் என்னும் ஒரு ஏழை அந்தணச் சிறுவனை ஈசன் எமனிடம் இருந்து காப்பாற்றியதால் இது எம பயம் போக்கும் தலமாகவும் கருதப்படுகிறது. ஆட்கொண்டார் என்ற பெயருடன், தெற்கு கோபுர வாயிலில் எழுந்தருளியிருக்கிறார் அய்யன்.

எண்ணியதை நடத்திக் கொடுப்பவளாய், தர்மத்தின் தலைவியாய் இங்கு நிற்கிறாள் அம்பிகை. அவளை நினைத்தாலே அற்புதமான வாழ்வுஅமையும்.

"தாயே, நான் பேசுவதெல்லாம் உன் ஜபம், என் கைகளால் செய்யும் எந்தக் காரியமும் உனக்கான பூஜைகள், தனியாக உன் கோயிலுக்கு வந்து பிரதட்சிணம் என்றில்லாமல் நான் நடக்கும் செயலெல்லாம் உனக்கான பிரதட்சிணம்' என்கிறார் ஆச்சார்யார்.

பூரண சரணாகதியே அவளுக்கு நாம் செய்ய வேண்டிய நிவேதனம். "ஒரு தாயார் குழந்தை எதுவும் கேட்காமலேயே அதற்குத் தேவையான அனைத்தையும் செய்கிறாள். தாயே! நான் உன்னைச் சரணடையா விட்டாலும் நீ என்னை பரிபாலிக்க வேண்டியவள்' என்கிறது ஸ்ரீபாத சப்ததீ ஸ்லோகம்.

அன்னை நமக்காகவே வடிவெடுக்கிறாள். நம் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படை சக்தியாக இருப்பவள் அம்பிகை.

உயிர்கள் இயங்குவது அவள் சக்தியால்தான். "உன்னை எப்படி நான் வணங்குவது?'- பக்தன் கேட்கிறான்.

"தர்மத்தை விட்டு விலகாதே..!'- என்கிறாள் அம்பிகை.

அந்த தர்மத்தின் வடிவாக, அறம் வளர்த்த நாயகியாக, தர்ம சம்வர்த்தனி அம்மன் இங்கு காட்சி அளிக்கிறாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com