சிவனே விஷ்ணுவாக... புவனேசுவரம் லிங்கராஜா!

சிவனாகவும், விஷ்ணுவாகவும் வழிபடப்படும் சிறப்புடன் திகழ்கிறது புவனேசுவரம் லிங்கராஜா திருக்கோயில்.
சிவனே விஷ்ணுவாக... புவனேசுவரம் லிங்கராஜா!

சிவனாகவும், விஷ்ணுவாகவும் வழிபடப்படும் சிறப்புடன் திகழ்கிறது புவனேசுவரம் லிங்கராஜா திருக்கோயில்.

நம் நாட்டிலுள்ள பழைமையான கோயில்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள பழைமையான கோயில்கள் நமது பாரம்பரியம், கலாசாரம், சிற்பக் கலைகளுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.

அந்த வகையில் இந்தியாவின் கிழக்குக் கடலோரத்தில் உள்ள ஒடிஸா மாநிலமும் புகழ் வாய்ந்த கோயில்களுக்குப் பெயர் பெற்றதாகும். 

பூரி ஜெகந்நாதர் கோயில், கொனார்க் சூரியன் கோயில், புவனேசுவரம் லிங்கராஜா கோயில், சக்தி பீடங்களில் ஒன்றான மாரா தரிணி கோயில், பிரம்மேஸ்வரா கோயில், முக்தேஸ்வரா கோயில், பரசுமேஸ்வரா கோயில், ராஜாராணி கோயில், ராம் மந்திர், ஆனந்த வாசுதேவர் கோயில், கட்டாக் சண்டி கோயில் உள்ளிட்ட திருக்கோயில்கள் பிரசித்தி பெற்றவை.

தல வரலாறு:

புராணங்களின்படி புவனேசுவரம் தனக்குப் பிடித்தமான இடமாக உள்ளது என பார்வதி தேவியிடம் ஒருமுறை சிவபெருமான் கூறினார். இதையடுத்து, மாடு மேய்க்கும் பெண் வேடமிட்டு, நகரைப் பார்வையிட பார்வதி வந்தார். 

அப்போது அங்கிருந்த கீர்த்தி, வாசா என்ற இரண்டு அரக்கர்களை வழியில் சந்தித்தார் பார்வதி. இருவரும் அவரை மணம்புரிய ஆசைப்பட்டனர். தன்னை அவர்களது தோள்களில் வைத்து ஏந்திச் செல்லும்படி பார்வதி கூறினார். அவ்வாறு அவரைத் தூக்க முயன்றபோது, பளு தாங்காமல் இருவரும் மாண்டனர். இதையடுத்து, பார்வதி தேவியின் தாகத்தைத் தீர்ப்பதற்காக இத் திருத்தலத்தில் "பிந்துசாகர் குளத்தை உருவாக்கினார் சிவபெருமான்.

8-ஆம் நூற்றாண்டு கோயில்: இங்குள்ள ஜெகந்நாதர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. சூரியன் கோயில் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதிலுள்ள சிவபெருமான், பார்வதி ஆகியோர் முதன்மையான வழிபாட்டுத் தெய்வங்கள் ஆவர். மேலும் சாமுண்டி, துர்க்கா, பைரவர், விநாயகர், சாவித்திரி, எமதர்மன் ஆகியோருக்கு இங்கு தனியாக சந்நிதிகள் உள்ளன. 1,000 லிங்கங்களால் உருவான சகஸ்ர லிங்கமும் இங்குள்ளது,.  

180 அடி உயர கோபுரம்: 25,000 சதுர அடி பரப்பளவில் உள்ள இக்கோயிலில், கருவறை, வேள்வி மண்டபம், கோக மண்டபம், நாட்டிய சாலை உள்ளிட்டவை இருக்கின்றன. கோயில் பிரதான விமானம் 55 மீ. உயரமுடையது.

சுயம்பு லிங்கம்: இத்தலத்தின் மூலவர் சுயம்பு லிங்கமாவார்.  மாமரத்தின் கீழே எழுந்தருளியுள்ளார். "ஏகமரா' என்றால் "மாமரம்' ஆகும். சத்ய, திரேதா யுகங்களில் லிங்கம் வெளிப்படவில்லை. துவாபர, கலியுகத்தில் தான் லிங்கமாகத் தென்பட்டார். 

அப்பொழுது, பூரி ஜெகந்நாதர் கோயிலும் புகழ் பெறத் தொடங்கியது; லிங்கராஜா கோயிலிலும் விஷ்ணு வழிபாடு தொடங்கியது. "ஹரிஹரா' எனவும் லிங்கராஜா அழைக்கப்படுகிறார். சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது இத்திருத்தலம்.

உற்சவங்கள்: கோயில் அருகிலேயே பிந்துசாகர் எனப்படும் பெரிய குளம் உள்ளது. லிங்கராஜா கோயிலின் கீழே அடித்தளத்தில் மறைவாக ஓடும் ஆற்று நீரில் இருந்து இக்குளம் உருவானது என்பது ஐதீகம்.

இத்தலத்தின் முக்கிய உற்சவம் சிவராத்திரி ஆகும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். 

வில்வ, துளசி இலைகள்: லிங்கத்துக்கு அடிக்கடி அபிஷேகம் செய்யப்படுகிறது. மலர் அலங்காரம், சந்தனக்காப்பு செய்யப்படுகிறது. வில்வ, துளசி இலைகள் நாள்தோறும் பூஜையில் பயன்படுகின்றன.

தரிசன நேரம்: இக்கோயில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 

அமைவிடம்: புவனேசுவரம் ரயில் நிலையத்தில் இருந்து 4.5 கி.மீ. தொலைவில் லிங்கராஜா திருக்கோயில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு: 0674-2340105.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com