அஷ்டமாசித்தி அருளிய ஆசான்!

ஸ்ரீநந்தீஸ்வரர், பிருங்கி முனிவர் உள்ளிட்டோருக்கு சிவபெருமான் குருவாக இருந்து "அஷ்டமாசித்தி'களை உபதேசித்தார். 
அஷ்டமாசித்தி அருளிய ஆசான்!

ஸ்ரீநந்தீஸ்வரர், பிருங்கி முனிவர் உள்ளிட்டோருக்கு சிவபெருமான் குருவாக இருந்து "அஷ்டமாசித்தி'களை உபதேசித்தார். 

அச்சமயம், அங்கு வந்த நதர்த்தினி, அபரகேந்தி, டேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறு கார்த்திகை பெண்களும் தங்களுக்கும் "அஷ்டமாசித்தி'களை உபதேசிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர். சிவனுக்கோ, அது முறையாகப் படாததால் அவர்களுக்கு உபதேசிக்க விருப்பமில்லை.

அதனால், "கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்திகள் தேவையில்லை!' என்றும், இயற்கையாகவே அவர்கள் "அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அஷ்டமாசித்திகள் கைவரப்பெற்றவர்கள்' என்றும் ஈசன் விளக்கினார்.

ஆயினும், முனிவர்களுக்கு உபதேசித்த "அஷ்டமாசித்தி'களையும் தங்களுக்கு உபதேசிக்க வேண்டுமென்று கார்த்திகை பெண்கள் வற்புறுத்தினர். 

நெடுநாள்கள் கழித்து, அவர்களுக்கு உபதேசிக்க சிவன் ஒப்புக் கொண்டார். உபதேசம் துவங்கிய சிறிது நாழிகையில், பாடத்தின்மீது அவர்கள் கவனம் செல்லவில்லை என்பதுணர்ந்து ஈசன் அவர்களைக் கண்டித்தார்.

இருப்பினும், அவர்கள் தொடர்ந்து வேண்டவே, உமாதேவியாரின் பரிந்துரையின்படி, கயிலைமலையானும் அவர்களுக்கு, கிழக்குநோக்கி, தட்சிணாமூர்த்தி வடிவில் அமர்ந்து "அஷ்டமாசித்தி'களை உபதேசித்தார்.

ஆறு பெண்களும், தொடர்ந்து பாடத்தில் கவனமின்றி செயல்படவே, சினம் கொண்ட சிவன், "நீங்கள் அனைவரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு கற்பாறைகளாக ஆகக்கடவது!' எனச் சாபமிட்டார். 

வருந்திய ஆறு பெண்களும் சாப விமோசனம் கேட்க, "உங்களின் இருப்பிடம் தேடி "சுந்தரேஸ்வரர்' என்னும் பெயரில் நான் பூலோகம் வருவேன். அப்போது மீண்டும் சுயவடிவம் பெறுவீர்கள்!' என்றார்.

அதன்படி, ஆறு பெண்களும் கற்பாறைகளாக ஆயிரம் ஆண்டுகள் கிடந்தனர். மீனாட்சியை சுந்தரேஸ்வரராக திருமணம் செய்ய வந்த சிவன், பாறைகளாகக் கிடந்த ஆறு பெண்களுக்கும் சுய ரூபம் அளித்தார். கார்த்திகை பெண்கள் பட்டமங்கைகளாக, கிடந்த இடம், "மங்கைகள் பட்ட இடம்' என்ற பொருளில் "பட்டமங்கை' எனப்பட்டது.பின்னர் "பட்டமங்கலம்' என மருவியது. சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் முப்பத்து மூன்றாவது திருவிளையாடல் நடந்த திருத்தலம்தான் இது. 

பட்டமங்கலத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஒரு சக்திமிகு "குரு ஸ்தலம்' ஆகும். இக்கோயிலின் மூலவராக சிவலிங்கமும், தட்சிணாமூர்த்தியும் தனித்தனியாக இருவேறு சந்நிதிகளில் உள்ளனர். அன்னை மீனாட்சி தெற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள்.

ஐந்து முக முருகன் சந்நிதி உள்ளது. முருகன், சண்முகநாதராக வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார். தலவிருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரைக்குளமும் உள்ளது.

சுந்தரேஸ்வரர் சந்நிதியின் இடப்புறம் தனிச் சந்நிதியில், கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமாசித்தியை உபதேசித்த, "தட்சிணாமூர்த்தி சுவாமி' ஆலமரத்தடியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 

எல்லா கோயில்களிலும் தெற்கு நோக்கியே தட்சிணாமூர்த்தி சுவாமி இருப்பார். ஆனால், இங்கு விசேஷமாக கிழக்கு நோக்கி அருள்கிறார். கல்லால் ஆன ஆலமரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி இருப்பார். ஆனால், இங்கு சந்நிதியின் பின்புறம் அபூர்வமான ஆலமரம் இருக்கிறது. அதனடியில், ஆறு கார்த்திகை பெண்களும் சிலாரூபமாக தொழுதவாறு உள்ளனர்.

யோகத்திற்கும், ஞானத்திற்கும் உரிய கடவுளான இவருக்கு அந்தணன், அரசன், அமைச்சன், ஆசான் போன்ற 16 பெயர்கள் உண்டு. இவரின் கருவறையில் திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் இருக்கின்றனர்.  

வியாழக்கிழமைகளில், தட்சிணாமூர்த்தியையும், சந்நிதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து 12 முறை வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும், குழந்தைப்பேறும் அமையும். 

இன்னும் விரும்பிய காரியம் கைகூட, வாழ்க்கையில் அமைதி கிடைக்க, குழந்தைப் பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக, கல்வி கேள்வி, வாக்கு வன்மைகளில் மேம்பட இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளைப் பெறலாம் என்பது ஐதீகம்.

குரு பெயர்ச்சி: ஒவ்வொரு குரு பெயர்ச்சி விழாவும் இங்கு வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு, வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நவ.13-ஆம் தேதி மாலை 7.15 மணிக்கு குரு பெயர்ச்சி விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

அமைவிடம்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து செல்லும் பேருந்துகள் மூலம் பட்டமங்கலம் திருத்தலத்தை அடையலாம்.

தொடர்புக்கு: 9488262198. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com