169. பொருநை போற்றுதும்! சாஸ்தா கோயில்கள்

நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கான தென் இந்திய ரயில்வேயின் வழித்தடங்கள், 1876 ஜனவரி 1-ஆம் தேதி பயன்பாட்டுக்குத் தொடங்கப்பட்டன. 
பொருநை போற்றுதும்!
பொருநை போற்றுதும்!


திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் இணைக்கிற "சுலோச்சனமுதலியார் பாலம்' குறித்து அநேகருக்குத் தெரியும். பொருநை மீதான "அம்பாசமுத்திரம் பாலம்', சிற்றாறு மீதான "சங்கரநயினார் கோயில் சாலைப் பாலம்', நம்பியாற்றின் மீதான "தளபதி சமுத்திரப் பாலம்', ஹரிஹரநதி மீதான "தென்காசிப் பாலம்' போன்றவை மக்களின் பங்களிப்புகளால் கட்டப்பட்டன. சிற்றாறு மீதான கங்கைகொண்டான் பாலத்தை எட்டையபுர ஜமீன்தார் 1844-இல் கட்டிக் கொடுத்தார். 

தாமிரவருணி மீதான விக்ரமசிங்கபுர பாலத்தை திருநெல்வேலி மில்ஸ் நிறுவனம், 1891-இல் தங்கள் வசதிக்காகக் கட்டிவிட்டுப் பின்னர் பொதுமக்களுக்குத் திறந்துவிட்டது. 

நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கான தென் இந்திய ரயில்வேயின் வழித்தடங்கள், 1876 ஜனவரி 1-ஆம் தேதி பயன்பாட்டுக்குத் தொடங்கப்பட்டன. 

திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆரம்பக் காலத்தில், "டின்னவேலி ப்ரிட்ஜ் ஸ்டேஷன்' என்றே பெயர். 1902-இல் கல்லிடைக்குறிச்சி வரையிலும், 1903-இல் செங்கோட்டை வரையிலும், 1904-இல் கொல்லம் வரையிலும் வழித்தடம் நீட்டிக்கப்பட்டது. 

திருநெல்வேலி மாவட்ட நிர்வாக போர்ட், சேர்மாதேவி-பணகுடி-திருவாங்கூர் என்றொரு தடத்தைத் தன்னுடைய சொந்த உடைமையில் அமைத்து நிர்வகிக்க முடிவெடுத்தது; ராணுவப் புல நோக்கில் மதராஸ் அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கியது.  ஆனால், 1903 வாக்கில் பணிகளைத் தொடங்கியபோது, திருவாங்கூர் சமஸ்தானத்திடமிருந்து எதிர்ப்பு வரவே, திட்டம் கைவிடப்பட்டது. 

பொருநைக் கரைப் பகுதிகளில், சாஸ்தா என்னும் தெய்வத்திற்குச் சிறப்பிடம் உண்டு. ஹரிஹர புத்திரனான இவர், பேரழகர். பூரணை, புஷ்கலை என்னும் இரு மனைவியரும், இவருக்கு இருபுறமும் நிற்க, கண்கொள்ளா திருக்காட்சி தருவார். உள்ளூர்ப் பகுதிகளில் இவருக்கு வெவ்வேறு பெயர்களும் வழங்கப்படும். 

சாஸ்தாவே பருவகால மழையைக் கொண்டு வருபவர் என்று கருதப்படுவதால், இவருடைய கோயில் என்பது நீர் நிலைகளுக்கு அருகிலோ, கால்வாய்க் கரைகளில் உயரமானதொரு மேட்டிலோ, சில சமயங்களில் ஊர் எல்லையிலோ அமைந்திருக்கும்.  

சாஸ்தா கோயில்கள் சிலவற்றில், சாஸ்தாவின் மகனான செல்லப்பிள்ளைக்கும் சிலாரூபம் இருக்கக்கூடும். சாஸ்தாவின் பரிவாரங்களும் இருப்பார்கள். இவர்களில் முக்கியமானவர் சங்கிலி பூதத்தன் ஆவார். கோயில் வெளிப்புறத்தில், பிரம்மாண்டமான உருவோடு, உக்கிராவேசமாக ஆளி நிற்பார். இவரே சாஸ்தாவின் காவல் தலைவர். 

பல நேரங்களில், ஆளி, நீளமான அங்கி அணிந்திருப்பார். இதனாலேயே, சற்றே தொளதொளக்கும்ஆடையை அணிந்துகொண்டு, ஆக்ரோஷமாக ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தையை, "ஆளி பொம்மை மாதிரி ஆடுகிறது' என்று நெல்லைக்காரர்கள் கடிந்து கொள்வதைக் கேட்கலாம். கருப்பசாமியும் முன்னால் நிற்பார். இவர் சாஸ்தாவின் வேட்டையாளர்; சாஸ்தா திக்விஜயம் போகும்போது, முன்னால் இவர் போவார். 

சாஸ்தாவை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்கள், தங்களை "அடிமைக்காரர்' என்று அழைத்துக் கொள்வது வழக்கம். 

அந்தந்த ஊர்களில் எழுந்தருளியுள்ள சாஸ்தா தெய்வத் திருமேனிகள் தவிர, பொருநைக் கரை சாஸ்தாக்களில் சிலர், பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்களைஈர்ப்பவர்கள். பாபனாசம் சொரிமுத்து ஐயனார், சீவலப்பேரி பூ உடையார் சாஸ்தா, கண்ணநல்லூர்சித்தூர்தென்கரை மகாராஜா ஆகியோரை இவ்வாறு கூறலாம். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இவர்களின் திருக்கோயில்களுக்குபக்தர்கள் வந்தனர்; வருகின்றனர். 

பொருநைப் பகுதிகளில் சாஸ்தாவுக்கு இருக்கும் சிறப்பிடம் காரணமாகவே, பங்குனி உத்திர சாஸ்தா ப்ரீதிகளும் வெகு பிரபலமாயின. 

16-ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டகாலத்திலேயே, நெல்லைப் பகுதி கிராமங்களில், "குடிக்காவல்'அல்லது "ஸ்தலகாவல்'என்னும் முறை இருந்திருக்கிறது. இதன்படி, கிராமத்தின் காவலுக்கும் பாதுகாப்புக்கும், குறிப்பிட்ட குடும்பம் ஒன்று பொறுப்பு வகித்திருக்கிறது. 

இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள், ஒருவரோ, பலரோ, ஊர்க்காவலை கவனித்திருக்கிறார்கள். திருட்டு என்பது மட்டுமே பெரிய குற்றம். அதைக் காட்டிலும் பெரியதாக எந்தக் குற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. திருட்டும்கூட வெகு அரிது. ஒருவேளை கிராமத்தில் திருட்டு நடந்துவிட்டால், பொருளை இழந்தவர்க்கு அந்தப் பொருளை மீட்டுத் தருவது குடிகாவல்காரரின் பொறுப்பு. பொருளை மீட்க முடியவில்லையாயின், தன்னுடைய சொந்த செலவில் குடிக்காவல்காரர் அதற்கு ஈடு செய்யவேண்டும். 

பரம்பரை முறையில் நியமிக்கப்பட்ட குடிக்காவல்காரருக்கு, ஊர்க்காரர்கள் அனைவருமாகச் சேர்ந்து நெல், தானியம், பிறபொருட்கள் என்று வேண்டியவற்றைக் கொடுத்து விடுவார்கள். 

அந்தந்த கிராமத்துக்காரர்கள், குடிக்காவல்காரர்களின் வாழ்க்கைக்கு வேண்டியவற்றைக் கொடுத்து விடுவது வழக்கமென்றாலும், சில சமயங்களில், அரசர்கள்கூட அவர்களுக்கு நிலபுலங்களை நிவந்தம் செய்வதுண்டு. 

ஊர்கள் பெருகி விரிவடைந்தபோது, பாதைகளும் அதிகமாகின. போக்குவரத்தும் பெருகியது. இதனால், வழிப்பறிகள், காட்டுப் பகுதிகளிலிருந்து நாட்டிற்குள் பாய்வது போன்ற தொல்லைகள் தோன்றலாயின. 

இத்தகைய சிக்கல்களை சமாளிக்க, 1600-களின் பிற்பகுதியில், தேச காவல் முறை தொடங்கப்பட்டது. பாளையக்காரர்களின்ஆட்சியில் தேச காவல் முறை விரிவாக்கப்பட்டு செம்மையடைந்தது. 

ஊர் எல்லைகள், பெரும் பாதைகள், காட்டு விளிம்புகள்போன்ற இடங்களில் தேசகாவல்காரர்கள் நியமிக்கப்பட்டனர். கிராமம் முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்ட பணமும் பொருளும் இவர்களுக்கான ஊதியமாக வழங்கப்பட்டது. 

பாளையக்காரர்கள், தேசகாவலர்களை நியமித்து, ஊரெல்லைகளைக் காவல் காத்ததையே பெருந்தவறாக பிரிட்டிஷார் சுட்டிக்காட்டினர். இதனைக் கொண்டே பாளையக்காரர்கள் நாடு பிடித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். பாளையங்கள் மீது பிரிட்டிஷார் கொண்ட வெறுப்புக்கு தேச காவல் முறையும்  காரணமானது.
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com