தேவியின் திருத்தலங்கள்: 44. பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்

  "பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்' என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் "பராபுரி' என்று அழைக்கப் பட்டது. 
தேவியின் திருத்தலங்கள்: 44. பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்
தேவியின் திருத்தலங்கள்: 44. பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்

"ஸநீடேயச்சாயா-ச்சுரண-ஸபலம் சந்த்ர ஸகலம் 
தநு: ஸெளநாஸீரம் கிமிதிந - நிபத்நாதி திஷணாம்'
 -செளந்தர்ய லஹரி      

  "பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்' என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் "பராபுரி' என்று அழைக்கப் பட்டது. 

பரா என்பதற்குப் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்பதற்கு ஊர், கொட்ட மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட வழிபாட்டுத் தலமே "பாரியூர்' என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. 

கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் "பாரியூர்' என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப்படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன.

கோயில் ராஜகோபுரம் ஐந்து அடுக்குகள் கொண்டது. சுற்றுப் பகுதியில் விநாயகர், ஏழு கன்னிமார், முனியப்ப சுவாமி சந்நிதிகள் உள்ளன. பக்கவாட்டில் வாய்க்கால் ஒன்று கோயிலை வளைத்து ஓடுகிறது.

கருவறையைச் சுற்றி கருப்பு பளிங்குக் கற்களால் வெளி மண்டபம் அமைந்துள்ளது. கோயில் தூண்களில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. ஒரு சிங்கத்தின் வாயில் ஒற்றைக் கல் இருக்கும் சிற்பம் காண்போரைக் கவர்கிறது. ஆஞ்சேநேயர், உமா மகேஸ்வரர் சிற்பம் போன்றவை அற்புதம். பிராமணி, மகேஸ்வரி, கெüமாரி, வைஷ்ணவி, மஹேந்த்ரி மற்றும் சாமுண்டி சிலைகளும் உள்ளன.

"பூ மிதித்தல்' என்னும் குண்டம் இறங்கும் விழா மாரியம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் மிகப் பெரியது பாரியூர் குண்டம். நாற்பத்தி ஐந்து அடி நீளம், ஐந்து அடி அகலம் கொண்டது. மார்கழி மாதத்தில் ஐந்து நாள் நடக்கும் தேர்த்திருவிழாவும், குண்டம் இறங்குதலும் இங்கு மிகச் சிறப்பு. லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள்.

அம்மனுக்குக் காப்பு கட்டிய நாளிலிருந்து மக்கள் வெளியூர் செல்வதில்லை. வீடுகளில் பொடி அரைத்தல், அமங்கலச் சொற்கள் பேசுதல் இராது. மிகுந்த மகிழ்ச்சியுடன், உறவுகளை அழைத்து, புதுத்துணிகள் எடுத்து, விருந்து கொண்டாட்டம் என்று கலகலப்பாக இருக்கும். 

சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்து வண்டி கட்டிக் கொண்டு சாரி சாரியாக மக்கள் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். முதல் நாள் மாலையே பக்தர்கள் குண்டம் இறங்க வந்து காத்திருப்பார்கள். அதிகாலையில் அன்னை உத்தரவு கொடுத்ததும், முதலில் பூசாரி இறங்குவார். அதையடுத்து லட்சக் கணக்கான பக்தர்கள் பூக்குழியில் மடமடவென்று இறங்குவார்கள். அன்னையின் நாம கோஷம் அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தும்.

 ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைமையான இத்தலத்தில் அம்மன் ருத்ர கோலத்தில் காட்சி அளிக்கிறாள். அவள் எழுந்தருளியிருக்கும் பீடம் ஏழு அடுக்குகள் கொண்டது; கருங்கல் மண்டபம். அன்னையின் சிரசில் ருத்ரன் உள்ளதால் சிரசில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதுபோல் காட்சி அளிக்கிறது.

பதிமூன்றாம் நூற்றாண்டில் அந்நியர் படையெடுப்பில் பாரியூர் சிதிலமடைய, அங்கிருந்த மக்கள் புலம் பெயர்ந்தனர். புலம் பெயர்ந்த பகுதிகள் தற்போது, பாரியூர் வெள்ளாளபாளையம், பாரியூர் நஞ்ச கவுண்டன் பாளையம் என்று அழைக்கப்படுகிறது. படையெடுப்பின்போது பகைவர்களால் அம்மன் சிலையை எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால் இக்கோயிலின் வரலாற்றுத் தகவல்கள், கல்வெட்டுக் குறிப்புகள் கால வெள்ளத்தில் அழிந்து விட்டன. தடப்பள்ளி வாய்க்கால் வெட்டப்பட்ட பின், பாரியூர் மீண்டும் வயல்கள் செழிக்கும் பசுமைவெளியாக மாறியது. இப்போதுள்ள கோயில், அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், தங்கமணி முத்துவேலப்ப கவுண்டர் மற்றும் அறநிலையத் துறையின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டது. 

கோபிச்செட்டிப் பிள்ளான் என்ற வள்ளல் அன்னையின் தீவிர பக்தர். ஒருமுறை தன்னை நாடி வந்த புலவருக்கு பரிசுப்பொருள் அளிக்க இயலாத நிலையில், தன்னையே மாய்த்துக் கொள்ள, புலி பதுங்கும் புதருக்குள் சென்றார். ஆனால் அங்கு புலி இல்லை. திருடர்கள் பதுக்கி வைத்த பொன் குவியல் இருந்தது. அது அம்மனின் அருள் என்று உணர்ந்து, அதையெடுத்து அனைவருக்கும் வாரி வழங்கினார் என்று "பாரியூர் ஆற்றுப்படை' குறிப்பிடுகிறது. 

அம்மன் வடக்குப் பார்த்து இருக்கும் கோயில் இது. பாரியூர் கொண்டத்துக் காளியின் அருள் பெற்ற சூரராச் சித்தர் தன் மந்திரச் சக்தியால் அன்னையின் திருக்காட்சி காணப்பெற்றார். திருக்கோயிலின் கீழ்ப்புறத்தில் "பட்டார்' என்னும் கோயில் உள்ளது. அங்கு சித்தர் இன்னும் சமாதி நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. 

அம்மன் வாக்கு: இங்கு அம்மனிடம் வாக்கு கேட்பது மிகச் சிறப்பான விஷயமாகும். அம்பிகையின் வலது கையில் ராம வாக்கும், இடது கையில் உத்திர வாக்கும் உள்ளது. ராம வாக்கு கிடைத்தால் மட்டுமே பக்தர்கள் உத்தேசித்த காரியத்தைச் செய்கிறார்கள். 

அம்மனிடம் வாக்கு கேட்டு, பின் இங்கு அமர்ந்திருக்கும் பிரம்மாண்டமான முனியப்ப சாமிக்கு செவ்வாய்க்கிழமையன்று பன்னிரண்டு குடம் தண்ணீர் ஊற்றி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர்.  பக்தர்களைக் காக்கவே பாரியூரில் குடி கொண்டு அருள்கிறாள் கொண்டத்துக் காளி. அவளை மனதார நம்பி கை தொழுதால், என்றன்றும் நம்மைக் காத்தருவாள் அன்னை!

அமைவிடம்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் திருத்தலம் அமைந்துள்ளது. 

(தொடரும்)

படம்: பொ.ஜெயச்சந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com