பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
By DIN | Published On : 08th October 2021 12:48 PM | Last Updated : 08th October 2021 12:48 PM | அ+அ அ- |

சுவாமி கமலாத்மானந்தர்
இந்தப் பிறவி நோய், மூப்பு, இறப்பு ஆகிய துன்பங்களுக்கு இருப்பிடமாக இருக்கிறது. இந்தப் பிறவியை ஒழிக்க வேண்டும்.
-பகவான் புத்தர்
"தாய் தடை செய்கிறாள், தாரம் தடை செய்கிறாள், தனயன் தடை செய்கிறான்' என்பது எல்லாம் உண்மைத் துறவறத்துக்குச் சிறிய தடைகளாகும்.
-வடலூர் வள்ளலார்
ஹே! ஹனுமானே! நீங்கள் அறிவாளி, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவர், மிகவும் கூரிய புத்தியை உடையவர், ஸ்ரீ ராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவர்.
-ஹனுமான் சாலீஸா - 7
மனதைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான்; இங்கேயே இறைநிலையை அடைகிறான்.
-கட உபநிஷதம் - 2.3.14
"என்னை நெருங்காது' என்று புண்ணியத்தை இலேசாக நினைக்க வேண்டாம். துளித்துளியாக விழும் தண்ணீராலேயே குடம் நிரம்பிவிடும். ஞானி கொஞ்சம் கொஞ்சமாகப் புண்ணியத்தைச் சேர்த்தாலும், அவன் புண்ணியத்தால் நிரம்பி விடுகிறான்.
-தம்மபதம்
ஞானிகளுக்கும் துஷ்டர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே துன்பம் தருபவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம்: ஞானிகளின் பிரிவு பெருந்துன்பம்; துஷ்டர்களின் உறவு பெருந்துன்பம்.
-மகான் துளசிதாசர்
உலகத்தின் மீதுள்ள பற்றை நீக்கி, ஸ்ரீ ராமரிடம் மட்டுமே பற்றுக்கொள்ள வேண்டும்.
-மகான் துளசிதாசர் இயற்றிய "வினய பத்ரிகா'
தன்னுடைய விதி தனக்குச் சாதகமாக இல்லாத காலத்தில், பராக்கிரமமும் முயற்சியும் வீணாகின்றன.
-பஞ்சதந்திரம்
வாணிபத்தில் பணம் வரும்; விவசாயத்தால் தானியம் வரும்; தான தர்மத்தால் புகழ் வரும்; கல்வியால் அறிவு வரும்; உணவு நியதியால் ஆரோக்கியமும் வரும்; தவத்தால் சிவம் வரும்.
-இந்து மதம்
ஞானசித்தி எய்துவதற்கு முன்னால் எவரும் கர்மத்தை முற்றும் துறக்க இயலாது. காய் காய்த்தவுடன் பூ உதிர்ந்துவிடுகிறது. அதுபோல் ஞானசித்தி ஏற்பட்டதும் கர்மம் நழுவிப்போகும்.
-வேதாந்தம்
தேச நலனுக்காக சுயநலத்தை விடுவதுதான் தியாகமாகும். "நமது இந்தியா முன்பு எப்படி இருந்தது?' என்று இப்போது நினைத்துப் பயனில்லை. "இனி இந்தியா எப்படி இருக்க வேண்டும்?' என்பதையே நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
-சுவாமி ராமதீர்த்தர்
ஆறுகள் உப்பு நீர் உடைய கடலில் முடிவு பெறுகின்றன. இரகசியம் வம்பு அளப்பவர்களால் முடிவடைகிறது; கெட்ட பிள்ளைகளால் நற்குணங்களுக்கு முடிவு ஏற்படுகிறது.
-பஞ்சதந்திரம்