நதிக் குளியல் தரும் நற்பேறு!

"தீபாவளி என்றாலே கங்கை நதியில் குளிக்க வேண்டும்' என்று கூறுவார்கள். கங்கை நதியில் மூழ்கி எழுந்தால் எவ்வளவு புண்ணியமோ, அவ்வளவு புண்ணியம் நமக்கு தாமிரபரணி நதியில் குளித்தாலே கிடைக்கும். 
நதிக் குளியல் தரும் நற்பேறு!


"தீபாவளி என்றாலே கங்கை நதியில் குளிக்க வேண்டும்' என்று கூறுவார்கள். கங்கை நதியில் மூழ்கி எழுந்தால் எவ்வளவு புண்ணியமோ, அவ்வளவு புண்ணியம் நமக்கு தாமிரபரணி நதியில் குளித்தாலே கிடைக்கும். 

தாமிரபரணி என்ற பெயர் இந்த நதிக்கு நிலவி வந்தது குறித்து வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதால், இது பழம் பெருமை வாய்ந்த நதி என்பதும், தமிழ்நாட்டுக்குக் கிடைத்த அரிய செல்வம் இது என்பதும் தெளிவாகிறது.

அந்நாளில் தாமிரபரணி தேவி, தாமிரபரணி மாதா என்றும் போற்றப்பட்டு வழிபாட்டுக்குரிய ஓர் அற்புத நதியாக, இந்த நதிமாதா திகழ்ந்துள்ளாள் என்றும், அகத்திய முனிவர் இந்த நதிக்கரையில் தவம் இயற்றியுள்ளார் என்றும், தாமிரபரணி மாதா விசாக நட்சத்திரத்தில் தோன்றியவள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்த நதியில் 12 மாதங்களும் மந்திரப் பூர்வமாக ஸ்நானம் செய்யவேண்டிய தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. 

நீராடும்போது "இனி நான் புது மனிதன். நான் செய்த பாவமெல்லாம் தொலைந்து போய்விட்டது; இனிநான் பாவம் செய்யமாட்டேன்!' என்று மனதில் நினைத்து குளித்தெழ வேண்டும். இதனால் புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் இந்த நதி ஏற்படுத்துகிறது. 

நதிமூலம்: ஆங்கிரஸ முனிவர் தனக்கு குழந்தை இல்லாததால் தன் மனைவியுடன் தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி மும்மூர்த்திகளையும் நோக்கித் தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய மும்மூர்த்திகளும் ஆங்கிரஸ முனிவருக்கு ஒரு பெண்குழந்தை பிறக்க வரம் அருளினர். அதன்படியே ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. 

அக்குழந்தைக்கு "ரிஷிகுல்யா' என்று பெயர் வைத்துப் போற்றி வளர்த்தனர். ரிஷிகுல்யா பருவ மங்கையானதும், அவளுக்கு கங்கையின் புனிதத்தைக் கண்டு, தானும் அப்படி ஒரு புனிதமான நதியாக வேண்டும். என்ற ஆசை தோன்றியது. 

அதைத் தனது தந்தையிடம் கூற, அவரும் அதை ஏற்று, மும்மூர்த்திகளை நோக்கித் தவம் இருக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படியே ரிஷிகுல்யா மும்மூர்த்திகளையும் நோக்கி, நீண்ட நாள்கள் தவமிருந்தாள். மும்மூர்த்திகளும் ரிஷிகுல்யாவின் தவத்தை ஏற்று, அவள் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு நிபந்தனை விதித்தனர்.  

அதாவது "நதியாக விரும்பும் ரிஷிகுல்யாவை அகத்திய முனிவர் அழைத்துச் சென்று மலைய பர்வதராஜனிடம் ஒப்படைக்கவேண்டும். பிறகு அவள் சமுத்திர ராஜனைத் திருமணம் செய்து கொண்டால், ஆசை நிறைவேறும்' என்று வரம் அளித்தனர். 

அதன்படியே ஆங்கிரஸ முனியவர், தன் மகளான ரிஷிகுல்யாவை அகத்திய முனிவரிடம் ஒப்படைத்தார். அகத்திய முனிவரும் ரிஷிகுல்யாவை மலைய பர்வதராஜனிடம் ஒப்படைத்து, அவளை சமுத்தி ராஜனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டினார். மலைய பர்வதராஜனும் குறிப்பிட்ட நாளில், ரிஷிகுல்யாவை சமுத்திர ராஜனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். 

திருமணம் முடிந்த சில நாள்களில், ரிஷிகுல்யா "கங்கையைப் போல் தானும் ஒரு நதியாக வேண்டும்' என்ற ஆசையை சமுத்திர ராஜனிடம் தெரிவித்தாள். 

சமுத்திர ராஜனும் மறுப்பேதும் சொல்லாமல் அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றினார். அதன்படி, விஸ்கர்மா உருவாக்கியிருந்த "சக்ரஸரஸ்' என்ற குகைக்குள் ரிஷிகுல்யா ஜல ரூபத்தில் (அதாவது தண்ணீராக மாறி) பிரவேகித்தாள். 

ஏற்கெனவே தாமிரபரணி நதிக்குத் தனது புண்ணியத்தில் பாதியை வழங்குவதாக கங்கை நதி முடிவு செய்தபடி, கங்கையும் பாதி புண்ணியத்தை வழங்கி அருள் பாலித்தாள். கங்கையுடன் சேர்ந்து வேறு சில புண்ணிய நதிகளும் தாமிரபரணி நதியுடன் கலந்து கொண்டன. குகைக்குள் சென்று பிரவேகித்த நதிக்கு "தாமிரபரணி' என்ற பெயரை சமுத்திர ராஜன் சூட்டினார் என்பது ஐதீகம்.

கடல் மட்டத்திலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தோன்றும் இந்த நதி, நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பெண் தெய்வமாக விளங்குகிறாள். இந்த நதியில், இந்திர தீர்த்தம், பாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், பாபநாச தீர்த்தம் என்று மொத்தம் 249 தீர்த்த கட்டங்கள் உள்ளன. இப்படியாக ஓடி வரும் இந்த நதி, கடைசியில் ஆத்தூர் என்ற ஊருக்குள் புகுந்து சமுத்திர ராஜனுடன் ஐக்கியம் ஆகிறாள்.

தீபாவளியன்று பக்தர்கள் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கட்டங்களில் அதிகாலையிலேயே ஒன்றுகூடி உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து, குதூகலமாக எண்ணெய் ஸ்நானம் செய்வார்கள். 

நதிக்கரையில் அமைந்துள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவார்கள். பின்னர், அவரவர்கள் வீட்டுக்குச் சென்று, தீபாவளியைக் கொண்டாடுவார்கள். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தாமிரபரணி தேவிக்கு தனிச் சந்நிதி உள்ளது.

தீபாவளியன்று தாமிரபரணி நதியில் நீராடினால், பதினெட்டு சித்தர்களின் ஆசியும் நமக்குக் கிடைக்கும். செல்வம் சேரும்; அமைதி நிலவும். எனவே நாமும் வாழ்வில் ஒருமுறை தாமிரபரணி ஆற்றில் தீபாவளியில் நீராடி நற்பேறு பெறுவோம்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com