ஒடுக்கப்பட்டோருக்கு துணை நிற்கும் தேவன்! 

"திக்கற்றவர்க்கு தெய்வமே துணை' என்பார்கள். நம்முள் திக்கற்றோர், ஒடுக்கப்படுவோர், அடிமைகள், அனாதைகள், நோயுற்றோர் பலர் உண்டு. இவர்களைப் பாதுகாப்பது இறைவன் விரும்பும் செயலாகும்.
ஒடுக்கப்பட்டோருக்கு துணை நிற்கும் தேவன்! 


"திக்கற்றவர்க்கு தெய்வமே துணை' என்பார்கள். நம்முள் திக்கற்றோர், ஒடுக்கப்படுவோர், அடிமைகள், அனாதைகள், நோயுற்றோர் பலர் உண்டு. 
இவர்களைப் பாதுகாப்பது இறைவன் விரும்பும் செயலாகும். 
வேதாகமத்தில், இவ்வாறு மனிதரால் கைவிடப்பட்ட நிலையில், தெய்வம் உதவி செய்து உயர்த்திய வரலாறு ஒன்றுண்டு. 
கானான் தேசத்தில் பஞ்சம் வந்ததால் ஆபிரகாம் எகிப்துக்கு குடிபெயர்ந்தார். தன் மனைவி சாராவுக்கு உதவி செய்ய ஒரு சிறிய எகிப்து பெண்ணை வேலைக்கு அமர்த்தினார். அப்பெண், எஜமானி பேசிய எபிரேய மொழியைக் கற்றுக் கொண்டு அழகுற உரையாடினாள். எஜமான் வணங்கிய எகோவா தெய்வத்தையே தானும் வணங்கினாள். 
பஞ்சம் முடிந்தபோது ஆபிரகாம் கானான் தேசத்துக்குத் திரும்பினார். அந்த வேலைக்காரப் பெண்ணும் தன் எஜமானி சாராவுடனே வந்து விட்டாள். எல்லோரும் அவளை "ஆஹார்' என்று அழைத்தனர். அதன் பொருள் "வெளியூர்க்காரி' என்பதாகும். 
90 வயதான சாராவுக்கு குழந்தை இல்லை. தனக்கு இனி குழந்தை பிறக்காது என்று, தன் வேலைக்காரி ஆஹாரை தன் கணவன் ஆபிரகாமுக்கு மனைவியாக சேர்த்து வைத்தாள். 
ஆஹார் கர்ப்பம் தரித்து நிறைமாதமாக இருந்தாள். அப்பொழுது அவளைப் பார்த்து சாரா மிகுந்த பொறாமை கொண்டாள். அவளை மிக மிகக் கடுமையாக நடத்தினாள். தன் எஜமானியின் கொடுமை தாங்க முடியாமல், ஒருநாள் அதிகாலையில் எழுந்து எகிப்துக்குப் போய் விட முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியேறினாள் ஆஹார். 
நிறைமாத கர்ப்பிணியான அவள் பாலைவனத்தைக் கடந்து சென்றாள். மதியவேளை, சூரிய வெப்பம் தாங்காமல் மிகவும் களைத்துப் போனாள். குடிக்க தண்ணீர் இல்லை. கடும் பசியால் சாகும் நிலைக்கு ஆளானாள். தெய்வத்தை நினைத்துத் தொழுது அழுதாள். 
அப்போது, ஓர் இனிமையான வார்த்தை அசரீரியாக ஒலித்தது: "ஆஹார்! நீ பயப்பட வேண்டாம். நான் உன்னுடனேயே இருக்கிறேன். நீ திரும்பவும் உன் எஜமானியிடம் சென்று விடு! உன் வயிற்றில் உதிக்கும் பிள்ளைக்கு "இஸ்மவேல்' என்று பெயரிடு. அவனுக்கு இந்த வனாந்தர தேசத்தையே தருவேன்! உன் சந்ததியைப் பெரிதாக்கி, அரேபிய தேசத்தில் உன் வம்சம் தழைக்கச் செய்வேன்!' என்று குரல் ஒலித்தது. 
ஆஹார் மகிழ்ந்தாள். "நான் தனியாக இல்லை; நான் வணங்கும் தெய்வம் என்னைப் பார்க்கிறார். அவருக்கு நான் பெயர் இடுவேன். அவர் பெயர் "என்னைக் காண்கின்ற தெய்வம்' என்றாள். 
தெய்வம் சொன்னபடியே அவள் திரும்பி, தன் எஜமானியிடம் சென்றாள் (ஆதியாகமம் - 16.13). இப்பொழுது ஆஹார் மிகப்பெரிய தைரியம் பெற்றாள். 
இஸ்மவேல் பிறந்து ஐந்து ஆண்டுகள் கழித்து, அவள் எந்தப் பாலைவனத்தில் இறைவனின் குரலை கேட்டாளோ, அதே பாலைவன தேசத்தை இறைவன் அவளது மகன் இஸ்மவேலிடம் கொடுத்தார். இறைவன் அடிமைகள் பக்கம், ஒடுக்கப்பட்டோர் பக்கம் உள்ளார். நாமும் இறைவனைச் சார்ந்து இரக்கம் பெறுவோம். என்றும் இறையருள் நம்மோடு! 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com