தேவியின் திருத்தலங்கள் 40:  கூடலையாற்றூர்

"தவ ஸ்யாமம் மேகம் கமபி மணிபூரைக - ஸரணம் நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர - தப்தம் த்ரிபுவநம்...' 
தேவியின் திருத்தலங்கள் 40:  கூடலையாற்றூர்

"தவ ஸ்யாமம் மேகம் கமபி மணிபூரைக - ஸரணம் 
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர - தப்தம் த்ரிபுவநம்...' 

-செளந்தர்ய லஹரி

மனிதன் இன்பம், துன்பம் என்று மாறி மாறி உழன்றாலும், என்றும் இன்பமாக இருப்பதையே விரும்புகிறான். அளவற்ற செல்வமே அத்தகைய இன்பத்தை அளிக்கும் என்று நம்புகிறான். தன் அறிவு, திறமை, கல்வி என்று அனைத்தையும் அந்த இன்பத்தை அடைவதிலேயே செலவழிக்கிறான்.

அந்தக் கல்வி அறிவு, திறமையை மறக்காமல், அதை அதிகரித்துக் கொள்ளவுமே வாழ்நாளைக் கழிக்கிறான். அன்னையின் கருணையே கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க உதவுகிறது. பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில் மூன்றாவது தலமாக விளங்கும் கூடலையாற்றூர் அன்னை ஸ்ரீ புரிகுழல் நாயகி, கல்வித் தடைகள் நீங்கவும், கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்கவும் உதவுகிறாள்.

மிகப் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியாக நுழைந்தால் நந்திதேவர் மட்டுமே இருக்கிறார். பலிபீடம் இல்லை. வெளிச் சுற்றில் பக்க வாயில் உள்ளது. அங்கு விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகளுடன் ஞானசக்தி அம்பாள் சந்நிதியும் உள்ளது.

அம்பிகை நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறாள்.  மூலவர் விமானம் இருதள அமைப்பில் உள்ளது. மேலே சென்றால் ஓர் அழகிய மண்டபம். சுவாமிக்கு அருகில் பராசக்தி அம்பாள் சந்நிதி உள்ளது. நடராஜர் சபையில் சிவகாமி மூர்த்தமும் உள்ளது.

தமிழகத்தில் ஒருசில கோயில்களில் மட்டுமே சித்திரகுப்தருக்கு சந்நிதி உள்ளது. அந்தச் சிறப்பு இந்தக் கோயிலுக்கு உண்டு. இங்கு சித்திரகுப்தர் எழுத்தாணியும், ஏடும் கைகளில் வைத்திருக்கிறார். இங்கு நவகிரக சந்நிதி இல்லை.

இங்கு ஞானசக்தி, பராசக்தி என்று இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளது. ஞானசக்தி சந்நிதியில் குங்குமமும், பராசக்தி சந்நிதியில் விபூதியும் அளிக்கப் படுகிறது. இந்த அம்பிகையை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு பெருகும்; ஆற்றல் வளரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தலத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார். அன்னையுடன் முருகன் பன்னிரு கரங்களுடன், வள்ளி - தெய்வானை சமேதராய் மயில் மீது கிழக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார்.

சிதம்பரத்தில் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தன் நடனக் காட்சியைக் காட்டி அருளினார் ஈசன். நடராஜரின் ஆடலைக் காண விரும்பி, பிரம்மாவும், சரஸ்வதியும் இங்கு  வந்து இறைவனை வேண்டி நின்றனர். அவர்களின் பிரார்த்தனையை ஏற்று தன் ஆடல் காட்சியைக் காட்டினார். எனவே ஈசன் "நர்த்தன வல்லபேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

கல்லால மரம் தல விருட்சமாக இருக்கிறது. அமுத விநாயகர், விசுவநாத லிங்கம் ஆகிய சந்நிதிகளும், கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அஷ்டபுஜ துர்க்கை முதலிய சந்நிதிகளும் உள்ளன. மூலவரின் வலதுபுறம் சனி பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது.

பிரம்மாவும், சரஸ்வதியும் வழிபட்ட தலம் என்பதால் இங்கு கல்வி சம்பந்தமான பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படுகின்றன.

அகத்திய மகரிஷி இத்தலத்திற்கு வந்து அம்பிகையை வழிபட்டு, தான் கற்ற வித்தைகள் மறந்து போகாதிருக்க பிரார்த்தனை செய்தார். எனவே, பக்தர்கள் இங்கு குழந்தைகளை அழைத்து வந்து, கற்ற கல்வி மறக்காமல் இருக்கவும், கலைகளில் தேர்ச்சி பெறவும் வேண்டிக் கொள்கிறார்கள்.

சுந்தரர் திருமுதுகுன்றம் திருத்தலத்தைத் தரிசிக்க இவ்வழியாகச் சென்றபோது, இறைவன் அந்தணர் ரூபமாக வந்து ""இது கூடலையாற்றூருக்குச் செல்லும் வழி...!'' என்று பாதையை காண்பிக்கிறார். இவரது பாடல் ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப் 
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங் 
கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில் 
அடிகளில் வழிபோந்த அதிசயம் அறியேனே...
- என்று சுந்தரர் குறிப்பிடுகிறார்.

சுதர்மா என்ற அந்தணன் ஒருவன் வேதங்கள் அனைத்தையும் கற்று வித்தையில் சிறந்தவனாக விளங்கினான். அரசன் அவனின் அறிவைப் போற்றி, தன் ராஜ்ஜியத்தில் உயரிய பதவியை அளித்து, மதிப்புடன் நடத்தினான். அரசாங்க விஷயங்களில் அவனிடம் ஆலோசனை கேட்டு நடந்தான். அவனை அனைவரும் புகழ்ந்து, போற்றித் துதிக்க, அவனுக்குள் "வித்யா கர்வம்' புகுந்து கொண்டது. 

தன் அறிவுக்கு மிஞ்சி யாரும் இல்லை என்ற ஆணவத்துடன் பிறரை மதிக்காமல் நடக்க ஆரம்பித்தான். அப்போது அவன் கற்ற கல்வி அனைத்தும் மறந்து போனது. 

பித்தனாய், புத்தி பேதலித்தவனாய், எல்லோராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு, காட்டில் திரிந்தான். அவனை ஒருநாள் நாரத மகரிஷி காண்கிறார். அவன் நிலை கண்டு வருந்தி, அன்னையை நினைத்து அவளின் பீஜாக்ஷர மந்திரத்தை தியானிக்கும்படி உபதேசம் செய்கிறார்.

அம்பிகையை மனதில் நிறுத்தி, அவளின் "ஸ்ரீம்' என்ற பீஜாக்ஷரத்தைச் சொல்லச் சொல்ல அவனின் ஆணவம் விலகுகிறது. சூழ்ந்திருந்த இருள் விலகி, புத்தி தெளிவாகிறது. கற்ற கல்வி, வித்தைகள் அனைத்தும் அவனுக்கு ஞாபகம் வருகிறது. கர்வம் விலகி, அன்னை அருளிய ஆற்றலை மற்றவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படி நடந்தான் என்பது வரலாறு.

புரிகுழல் நாயகி பக்தர்களின் கல்வி, கேள்வி, கலைகளை மறந்து போகாமல் காப்பதுடன், மறந்த வித்தைகளை நினைவூட்டுகிறாள். இங்கு தம் குழந்தைகளின் கல்விக்காக, புதிய வித்தைகளைக் கற்பதற்காக  வந்து பிரார்த்தனை செய்பவர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றி ஞானம் அருள்கிறாள் அம்பிகை. 

அமைவிடம்: விருத்தாசலத்திலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் வழியில் 31 கி.மீ. தொலைவில் கூடலையாற்றூர் திருத்தலம் உள்ளது.

வெள்ளாறு, மணிமுத்தாறு என்னும் இரண்டு நதிகள் மற்றும் கண்ணுக்குப் புலப்படாத ஆகாய கங்கை ஆகிய 3 நதிகள்  கூடும் இடம் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இதை "தட்சிணப் பிரயாகை' என்றும் கூறுகின்றனர்!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com