நலங்களை அள்ளித் தரும் நவகிரக விநாயகர்

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள படாளம் கூட்டுச்சாலையில் (வேடந்தாங்கல் செல்லும் வழி) 4 கி.மீ. தொலைவில் திருமலைவையாவூர் கிராமத்தில் ஸ்ரீ ராமாநுஜ யோகவனம் உள்ளது.
நலங்களை அள்ளித் தரும் நவகிரக விநாயகர்


சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள படாளம் கூட்டுச்சாலையில் (வேடந்தாங்கல் செல்லும் வழி) 4 கி.மீ. தொலைவில் திருமலைவையாவூர் கிராமத்தில் ஸ்ரீ ராமாநுஜ யோகவனம் உள்ளது.

இத்திருத்தலத்தில் அம்ருதபுரி வாசன் என அழைக்கப்படுகிற சீனிவாசப் பெருமாள், மதுரவல்லித் தாயார் என அழைக்கப்படுகிற அலமேலு தாயார் ஆகிய இருவரும் பக்தர்களைக் காத்து அருள்பாலித்து வருகின்றனர். 18 சித்தர்கள் சந்நிதியும் உள்ளது. 

நவகிரகங்களின் தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் விநாயகப் பெருமானையோ, ஆஞ்சநேயரையோ வழிபடவேண்டும். அப்போதுதான் துன்பங்களில் இருந்து சற்று விடுபட முடியும்.  

நவகிரக விநாயகர்

இக்கோயிலில் சுமார் 8 அடி உயரமுள்ள விநாயகப் பெருமான் திருவுருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகப் பெருமானின் உடலமைப்பில் நவகிரகங்களும் இடம் பெற்றுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

விநாயகப் பெருமானின் நெற்றிப் பகுதியில் சூரிய பகவான், தலைப்பகுதியில் குரு பகவான், வயிற்றுப்பகுதியில் சந்திர பகவான், வலதுமேல் கரத்தில் சனி பகவான், கீழ் கரத்தில் புத பகவான், இடது மேல் கரத்தில் ராகு பகவான், கீழ் கரத்தில் சுக்கிர பகவான், வலது காலில் செவ்வாய் பகவான், இடது காலில் கேது பகவான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். 

இந்த விநாயகரை வழிபட்டால், நவகிரகத் தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 

நவகிரக விநாயகருக்குப் பின்புறம் ஸ்ரீயோக நரசிம்மர் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான சந்நிதிகள் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை எனலாம். 

ஸ்ரீ யோக நரசிம்மர் சோளிங்கரில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். நீண்ட தூரம் செல்லவியலாத இப்பகுதி மக்களும் யோக நரசிம்மரின் அருளைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில், சென்னை சீனிவாச நிகேதன் பீடாதிபதிகள் சீத்தா ராமசுவாமி, தாரா மாதாஜி ஆகியோரின் ஆசிப்படி இச்சந்நிதிஅமைக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ யோக நரசிம்மரை தரிசிக்க விரதம் இருக்கும் பக்தர்கள், பிரதோஷ நாள்களில் 5 முறையாவது அல்லது சுவாதி நட்சத்திர நாளில் 3 முறையாவது, தேன் கலந்த பாலை வைத்து பூஜை செய்யவேண்டும்.  

அவ்வாறு செய்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை, ஏவல், பில்லி சூனியம், கோர்ட் வழக்குத் தொல்லை போன்ற இன்னல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். கோரிக்கைகள் யாவும் நிறைவேறும்.

சங்கடஹர சதுர்த்தி அன்று சந்தனக் காப்பு அலங்காரத்தை விநாயகப் பெருமானுக்கு செய்து, அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் குழந்தைப் பேறு வேண்டியவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

இங்கு தை மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமையில் 108 சுமங்கலிப் பெண்கள் மூலம் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்று வருகிறது. 

நேரம்: தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

வாழ்வில் ஒருமுறையேனும் ஸ்ரீராமாநுஜ யோக வனத்துக்கு சென்று வருவோம். நவகிரக விநாயகரின் அருளைப் பெற்றுய்வோம்..! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com