நீதியும் சாட்சி கூறுதலும்..!

அல்லாஹ்  குர்ஆனில்,  விசுவாசிகளே!நீங்கள் நீதியின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள்.
நீதியும் சாட்சி கூறுதலும்..!

அல்லாஹ்  குர்ஆனில்,  விசுவாசிகளே!நீங்கள் நீதியின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள்.  நீங்கள் சாட்சி கூறினால், அது உங்களுக்கோ, அல்லது உங்கள் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்தபோதிலும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுங்கள்.  நீங்கள் யாருக்காகச் சாட்சி கூறுகிறீர்களோ, அவர்கள் பணக்காரராக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, உண்மையையே கூறுங்கள்.
ஏனென்றால் அல்லாஹுதஆலா அவ்விருவருக்குமே மிக்க நெருங்கியவனாக இருக்கிறான்.  ஆகவே நீங்கள் (உங்கள்) இச்சைகளைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்!தாட்சண்யத்தையோ அல்லது குரோதத்தையோ முன்னிட்டு நீங்கள் தவறாக சாட்சி கூறினாலும், அல்லது சாட்சி கூற மறுத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கிறான்.
ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை, ""நான் உங்களிடம் பெரிய பாவங்கள் எவை எவை எனச் சொல்லலாமா?''  என்று மூன்று முறை கேட்டார்கள். அதற்கு நாங்கள், ""ஏன் சொல்லக்கூடாது... இறைவனின் தூதர் அவர்களே! கூறுங்கள்!'' என முறையிட்டோம்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், ""அல்லாஹ்வுக்கு யாரையாவது இணையாக்குவது; பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிய மறுப்பது;  நியாயமின்றி ஒருவரைக் கொலை செய்வது...'' என்றார்கள்.  
பின்னர் சற்று நேரம் மௌனமாக சாய்ந்து நின்றார்கள்.  மீண்டும் நிமிர்ந்து ""பொய் சொல்வதும், பொய் சாட்சியம் கூறுவதும் பாவம்...'' என்றார்கள்.  இதைப் பெருமானார் (ஸல்) அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.  
பெருமானார் (ஸல்) அவர்கள் நிறுத்திவிட்டால் போதும் என நாங்கள் எங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் வரை, இதைச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
அதுபோல, நீதித் துறைகளில் பணம் செலவு செய்து அநீதியை நீதியாக்குவது பெரும் பாவமாகும்.
சாட்சி என்பது கோர்ட்டுகளில் சொல்வது மட்டுமல்ல; நம் குடும்ப உறவுகளில், உறவினர்களிலும் இன்னும் நமது சமூகப் பிரச்னையிலும் ஒருவருக்காக சொல்லப்படும் சாட்சிகளில், நமக்கு வேண்டியவர் என்பதற்காக உண்மையை மறைப்பதும் குற்றமே அல்லது பொய் சாட்சி கூறுவதும் குற்றமே!
அல்லாஹ்வின்மேல் அச்சம் உடையவர்கள் வாயில் பொய் சாட்சி வராது; நீதியைக் கொல்வது மனிதனைக் கொல்வதை விடப் பெரிய பாவமாகும்; அதுபோல் பொய் சத்தியம் செய்வதும் பெரும்பாவமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com