நபி அவர்களின் பணிவு! 

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு முபாரக் என்ற பெரும் அவ்லியா அவர்கள் ஒருமுறை நடந்துசென்று கொண்டிருந்தபோது
நபி அவர்களின் பணிவு! 

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு முபாரக் என்ற பெரும் அவ்லியா அவர்கள் ஒருமுறை நடந்துசென்று கொண்டிருந்தபோது ஒரு குஷ்டரோகி உணவு அள்ளிச் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அந்த பெருநோயாளி அருகே சென்று அவருக்கு உணவு ஊட்டிவிட்டார்கள்.மேலும் தண்ணீரை எடுத்து வந்து அந்த நோயாளியின் கையை உடல் உறுப்புகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

இக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் அப்துல்லாஹ் இப்னு முபாரக் அவர்களருகே வந்து தங்களைப் போன்ற பெரியார் இத்தகைய வேலைகளில் ஈடுபடலாமா எனக் கேட்டார். அதற்கு அந்த  ஸýபி பெரியார், "உள்ளத்தாலும் செயல்களாலும் அசுத்தமடைந்த என்னை அந்த அல்லாஹ் வெறுத்து ஒதுக்காதபோது  நான் எவ்வாறு இவரை அசுத்தமானவர் என்று நினைப்பேன்' என்று பதில் கூறினார்கள்.

நபி அவர்கள் தங்களின் நாற்பதாவது வயதில் நுபுவ்வத் என்னும் இறைத்தூது வெளிப்படும் முன் ஹிரா மலைக்குகையில் தனிமையில் தங்கிவந்தபோது நபி அவர்களின் மனைவி அன்னை கதீஜா(ரலி) அவர்கள் மக்காவில் உள்ள வீட்டில் உணவைத் தயார் செய்து உயரமான ஹிரா மலையின் மீது ஏறிவந்து நபி(ஸல்) அவர்களுக்குப் பணிவிடை புரிந்தார்கள். அல்லாஹ்வே வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் அவர்கள் மூலமாக அன்னை கதீஜா அவர்களுக்கு ஸலாம் கூறியிருக்கிறான் என்றால் அதற்கும் பணிவிடை புரிந்ததே காரணமாகும்.

அதிகமாக இபாதத் செய்யும்போது மனதில் தற்பெருமையும் பிறர்மீது குறைவான  பார்வையும் உண்டாகிவிடும். பிறருக்கு பணிவிடை செய்வதன் மூலமே அத்தீய எண்ணங்களை நீக்கமுடியும். பிறருக்கு உபகாரமாக இருப்பது என்பது மனதில் இளகிய தன்மையையும் தன்னை சாதாரண நிலையிலும் வைத்துக்கொள்ள உதவும்.

அதிகமாக குர்ஆன் ஓதுவது திக்ரு செய்வது பிறருக்கு நன்மையை போதிப்பது அதிகமான கல்வியறிவு உடையவராக இருப்பது தர்மம் செய்வது இதுபோல் இன்னும் பிற நல்லசெயல்களில் ஈடுபடும் போது முகஸ்துதி ஏற்பட்டுவிடும்.

பிறர் பாராட்டுக்காக செய்யப்படும் நற்செயல்கள் இறைவனுக்கு இணைவைத்தல் என்ற மாபெரும் குற்றதிற்குக் கொண்டு செல்லும்.

இபாதத் செய்வதால் ஏற்படும் தற்பெருமை மிகத்தீய விஷயமாகும். நம்முடைய நீண்ட நேர வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும் செய்யலாம் அல்லது நிராகரித்தும் விடலாம். ஏனெனில் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் குறிவைத்து மனத்தூய்மையோடு செய்யப்படும் இபாதத்கள் மட்டுமே அல்லாஹ்விடம் ஏற்புடையது. எந்த அளவு அதிகமாக அமல்கள் செய்கிறோமோ அதே அளவு பணிவிடை செய்வதிலும் கவனம் செலுத்தவேண்டும். பணிவிடையே நற்குணத்தை உண்டாக்கும்.  

-ஹாஜி.மு.முஹம்மது அன்வர்தீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com