

ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்று திருக்குறுங்குடி. (திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீ. தூரம்) புராண வரலாற்றுப் பெருமைகளும், விழாச் சிறப்புகளும் கொண்டது.
இங்குள்ள நின்ற நம்பி பெருமாள் கோயிலில் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது பிரம்மாண்ட உருவில் சிவ அம்சமான கால பைரவர் சந்நிதி கொண்டுள்ளதை தரிசிக்கலாம். பொதுவாகவே சிவன் ஆலயங்களில் காவல் தெய்வமாக வழிபடப்படுபவர் இங்கு ஏன் சந்நிதி கொண்டுள்ளார் என அறிவோம்.
பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்ததால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை சிவபெருமான் இத்தலத்தில் போக்கிக் கொண்டாராம். அந்த நற்செயலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பைரவர் இப்பெருமாள் கோயிலுக்கும் காவல் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இத்தலத்தில் பெருமாள் சந்நிதியில் தீபாரதனை செய்யப்படும் போது, அவ்வொளியில் பெருமாளின் நேத்ரவிழிகள் அசைவது போல் தென்படுவது காணும் பக்தர்களின் கண்களுக்கு ஒரு தெய்வீக உணர்வுடன் கூடிய விருந்து. பெருமாளை அப்படியே உயிரோட்டமாக உணர்வு பூர்வமாக சந்திப்பதாகவே இருக்கும். அதே போல் இங்குள்ள பைரவர் சந்நிதியிலும் ஓர் அதிசயத்தை நோக்கலாம்.
இந்த பைரவர் கல் மற்றும் சுதையின் கலவையால் ஆன சிற்பமாகத் திகழ்கின்றார். (75 சதவீதம் கல், 25 சதவீதம் சுதை). மூலிகை வண்ணத்தால் அழகு தீட்டியிருக்கிறார்கள். 300 வருடங்கள் ஆகியும் அந்த வண்ணங்கள் மெருகு குலையாமல் மிளிர்கின்றன.
பைரவர் சந்நிதியில் கருவறையில் மேல் பகுதியில் ஒரு விளக்கு, கீழ்ப்பகுதியில் ஒரு விளக்கு என இரண்டு விளக்குகள் ஏற்றப் பட்டிருக்கும். அவை எப்பொழுதும் ஒளி பரப்பிக்கொண்டு பைரவரின் முழு ரூபத்தையும் தெளிவாகக் காட்டிக் கொண்டிருக்கும் இதில் அதிசயம் என்னவென்றால் மேலே உள்ள விளக்கின் ஜ்வாலை (தீப ஒளி) மட்டும் காற்றுப்பட்டால் அசையும் தீபம் போல் அலைந்து கொண்டே இருக்கும். கீழே உள்ள விளக்கின் தீப ஒளி எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கும்.
மேலே உள்ள தீப ஒளியின் சலனம் பைரவரின் மூச்சுக் காற்று ஏற்படுத்தும் அசைவு என நம்பப்படுகிறது. மூச்சு இழுக்கும்போது தீப ஒளி அவரை நோக்கித் திரும்பியும், விடும்போது எதிர்த்திசையில் விலகியும் அசையும் சலனத்தை பக்தர்கள் கண்கூடாக தரிசிக்கலாம்.
இந்த பைரவர் சந்நிதியில் வடைமாலையும் (ஒரே பெரிய வடை) பூச்சட்டையும் சாத்துவது பிரதான பரிகார வழிபாடாக மேற்கொள்ளப்படுகிறது. தயிரன்னம் நிவேதிக்கப்படுகிறது. திருமண வரம் வேண்டியும், மழலைப் பேறு கோரியும் இத்தலத்திற்கு பெருமாளை சேவிக்கவரும் பக்தர்கள் பிரத்யேகமாக இந்த பைரவர் சந்நிதிக்கு வந்து பிரார்த்தனை செய்து பலன் பெறுகிறார்கள்.
- களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.