அஷ்டமியில் அவதரித்த அரியும் அம்பிகையும்

நட்சத்திரங்களையும் திதியையும் வைத்தே விரதங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் எல்லாம் கொண்டாடப்படுகின்றன.
அஷ்டமியில் அவதரித்த அரியும் அம்பிகையும்
Published on
Updated on
2 min read

நட்சத்திரங்களையும் திதியையும் வைத்தே விரதங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் எல்லாம் கொண்டாடப்படுகின்றன. ஆனாலும் அஷ்டமி,  நவமி திதிகளுக்கு  அறிவியல் பூர்வமான கருத்து உண்டு.

அஷ்டமி என்பது அமாவாசைக்கும் பெüர்ணமிக்கும் நடுவில் உள்ளது. அன்று புவியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது. அதனால் சூரியனின் ஈர்ப்பு சக்தியும், சந்திரனின் ஈர்ப்பு சக்தியும் புவியை தங்கள் பக்கம் இழுப்பதால் அனைத்து ஜீவராசிகளிடமும் ஒரு சலனம் ஏற்படுவதால், நிலையான முடிவை எடுக்க இயலாது. 

அதனால் அஷ்டமி, நவமிகளில் முடிவுகள் எடுப்பதை முன்னோர்கள் தவிர்த்தனர். அன்றைய தினத்தை இறைவனை ஆராதனை செய்வதிலேயே கழித்தனர்.

ஒருமுறை அஷ்டமியும்,  நவமியும் திருமாலிடம் சென்று, "எங்களையும் கொண்டாடுவதற்கு தாங்கள்தான் கருணை புரியவேண்டும்' என்று வேண்ட, அவரும் "அவ்வாறே செய்கிறேன்' என்று அருள்பாலித்தாராம். அதன் காரணமாகவே அஷ்டமியில் கிருஷ்ணரும் நவமியில் ராமரும் அவதரித்தனர் என்று கதை சொல்லப்படுகிறது. 

நவராத்திரியின் கடைசி மூன்று நாள்களான அஷ்டமி, நவமி, தசமி மிகவும் முக்கிய நாள்களாகக் கருதப்படுகிறது.  

கம்சன் தன் தங்கையின் மணவிழாவின்போது கேட்ட அசரீரியை நினைத்து பயந்து தங்கை தேவகியையும் அவள் கணவன் வசுதேவரையும் சிறையில் அடைத்து அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொன்று வந்தான்.  எட்டாவது குழந்தையாக, பாலகிருஷ்ணனாக அவதரித்தார் மகா விஷ்ணு. அதே சமயம் மதுராபுரியில் கிருஷ்ணன் பிறந்த வேளையில், ஆயர்பாடியில் வசித்த நந்தகோபரின் மனைவி யசோதைக்கு ஒரு பெண் குழந்தையாக அவதரித்தாள் மாயா தேவியான துர்கா தேவி.

கிருஷ்ணர் பிறந்தவுடன் தன் பெற்றோருக்குத் தன் விஸ்வரூப தரிசனம் தந்து, பின்னர் அவர்கள் நினைவிலிருந்து அதை மறைத்துவிட்டார். 

பின்னர் தந்தை வசுதேவரிடம், தன்னை ஆயர்பாடிக்கு கொண்டு சென்று, அங்கு நந்தகோபர் வீட்டிலிருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள் என்று கூற, மாயாசக்தியால் காவலிலிருந்த காவலர்கள் உறங்க, சிறைக்கதவுகள் தானே திறந்து வழிவிட, செல்லும் வழியில் யமுனை ஆற்று வெள்ளம் வழிவிட, நாகராஜன் குடைபிடிக்க,  வசுதேவரும் கண்ணன் சொன்னவாறே எல்லாவற்றையும், தன் நிலையிழந்து கண்ணனின் மாயைக்கு உட்பட்டிருந்து, செய்தார் எனலாம்.

பெண் குழந்தை மதுராபுரி சிறைக்கு வந்ததும் அழத் தொடங்க, அந்த சப்தம் கேட்டு அங்கு வந்த கம்சன் பெண் குழந்தையைக் கண்டான். தேவகியின் எட்டாவது ஆண் குழந்தையால் தானே தனக்கு மரணம் என்று அசரீரி சொன்னது, ஆனால் இது பெண் குழந்தையாக இருக்கிறதே என்று சிறிது குழம்பினாலும், பயம் காரணமாக அந்தப் பெண் குழந்தையையும் கொல்ல முயன்றான்.

அந்தக் குழந்தையின் கால்களைப் பிடித்து வானத்தில் வீசி, அது விழும் திசையில் தன் கத்தியை வைத்துக் கொண்டு நின்றான். ஆனால் அந்தக் குழந்தை எட்டு கைகள் நிறைய ஆயுதங்களுடன் துர்க்கையாகக் காட்சியளித்து, "கம்சனே! உன்னைக் கொல்லப் பிறந்த குழந்தை வேறு இடத்தில் வளர்கிறது. உன்னால் என்னைக் கொல்ல முடியாது. ஆனால் என்னால் உன்னை இப்பொழுதே கொல்ல முடியும். இருந்தும் நீ தெரிந்தோ தெரியாமலோ என் பாதங்களைப் பற்றிவிட்டாய். என் பாதங்களை பற்றுபவர் யாராக இருந்தாலும், எனக்கு எதிரியாகவே இருந்தாலும் கூட, அவர்களுக்கு அருள்புரிவேன். அதனால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன்' என்று கூறி விண்ணில் மறைந்தாள்.

கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணர் கம்சனைக் கொன்று, வசுதேவரிடம் ஆட்சியை ஒப்புவித்தார். பின்னர் பல லீலைகள் புரிந்து பூபாரத்தைக் குறைத்தார். இறுதியில் பாண்டவர்களுக்கு உதவி அவர்களுக்கு நாட்டை மீட்டுத் தந்தார். கிருஷ்ண அவதாரம் முழுவதும் அவரின் லீலைகள் அனைவரும் ரசித்துப் போற்றும்படி இருந்தன. அதே சமயம் அதிகம் வெளியில் தெரியாமல், அரக்கர்களை அழித்தல், சமுதாயத்தைக் காத்தல் என அவர் புரிந்த பல லீலைகளை ஸ்ரீமத் பாகவதம் விவரிக்கிறது.  

கிருஷ்ணா என்றாலே மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். பகவான் கிருஷ்ணர் அவதரித்த புண்ணிய தினத்தை (ஆகஸ்ட் 19,  20) ஜென்மாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி தினத்தை, எல்லோரும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். 

அவருக்குப் பிடித்த உப்பு சீடை, வெல்ல சீடை, தேன்குழல், தட்டை, அதிரசம், முறுக்கு, அப்பம், வெண்ணெய், அவல், பால், கற்கண்டு முதலான பல பட்சணங்களுடன் பழவர்க்கங்களையும் நிவேதனம் செய்து கொண்டாடி மகிழ்வோம்.

- அபிராமி மைந்தன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com