மறைமலைக் கொழுந்து!

சிவாலயங்களில், செங்கல்பட்டு வேதகிரீஸ்வரர் கோயிலுக்குத் தனிச்சிறப்பு  உண்டு.
மறைமலைக் கொழுந்து!
Published on
Updated on
2 min read

சிவாலயங்களில், செங்கல்பட்டு வேதகிரீஸ்வரர் கோயிலுக்குத் தனிச்சிறப்பு  உண்டு.

தேவார மூவர், மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், அருணகிரிநாதர் ஆகியோரால்  பாடல் பெற்ற திருத்தலம் இது.  தட்சிணகைலாயம், பக்ஷிதீர்த்தம், வேதகிரி, ருத்திரகோடீசம், மலைக்கொழுந்தீசம், நந்தி தவ பீடம், மங்களவார கிரிவலத்தலம் போன்ற பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப் பெறுகிறது.  இதன் வரலாற்றை திருநந்தி தேவருக்கு சிவ பெருமான் உரைத்தார்.

மிருகண்டு முனிவருக்கு மார்க்கண்டேயன் பிறந்து,   சிவ பக்தியோடு வாழ்ந்தார். பதினாறு வயது மார்க்கண்டேயர் சிவ பூஜையில் இருந்தபோது உயிரை எடுக்க வந்த எம தூதர்கள் உயிரை கவர முடியாமல் நின்றனர்.  மார்க்கண்டேயன் சிவ லிங்கத் திருமேனியை இறுகக் கட்டிக் கொள்ள எமன் பாசக் கயிற்றை வீசினார்.  அதனை லிங்கத்துடன் சேர்த்து இழுக்க உக்கிரமூர்த்தியாய் சிவன் தோன்றி எமனை எட்டி உதைத்தார்.  எமன் மூர்ச்சையடைந்தான்.  பின்னர், பூமாதேவி நேரில் வந்து உலகை சமநிலைப்படுத்த எமனுக்கு மூர்ச்சை தெளிவிக்கக் கேட்க,  சிவனும் தெளியவைத்தார். 

பின்னர், மார்க்கண்டேயன் பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டார். வழியில் திருக்கழுக்குன்றத்துக்கு வந்து வேதகிரீஸ்வரரை வணங்கினார். குளத்தில் நீராடியபோது,  
அபிஷேகம் செய்ய பாத்திரம் ஏதும் இல்லாததால் ஈசனை வணங்கினார். அப்போது, சாதாரணமாக உவர் நீரில் பிறக்கும் சங்கு குளத்தில் வெளிவந்தது. இறைவனால் தரப்பட்ட அந்தச் சங்கை ஏற்று,  மார்க்கண்டேயன் சிவனுக்கு முதன்முதலாக சங்காபிஷேகம் செய்தார்.  மாலையில் எண்ணெய்யால் தீபமிட்டு வணங்கினார்.  

இறைவனுக்காக சங்கு உருவானதால், அக்குளத்துக்கு "சங்கு தீர்த்தம்' என்று பெயர் உண்டானது. அதுமுதல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அத்தீர்த்தத்தில் சங்கு உருவாவது இயல்பாயிற்று.

கி.பி.  ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தைத் தலைநகராகக் கொண்டு சுரகுரு  என்ற மன்னன் ஆண்டு வந்தான்.  வேதகிரிமலைப் பகுதியில் வேட்டையாட வந்தான்.  அங்கு மாயீகம் என்னும் பன்றி அவனது படைகளைக் கொன்று குவித்தது.  அவன் கையிலிருந்த அம்பை அதன் மேல்விட அதனையும் துளைத்து அருகில் இருந்த பசுவையும் தாக்கிக் கொன்றது.  அரசன் பசு ஒன்று அம்பு பாய்ந்து இறந்ததைக் கண்டு மனம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்போதே மாயீசனும் திலோத்திமையும் சாப விமோசனம் பெற்று சுய உருவை அடைந்து திரும்பினர்.

திருக்கழுக்குன்றம் காட்டினை அழித்து சீர்திருத்தி விதிப்படி சங்கு தீர்த்தத்தில் நீராடி கிரிவலம் வந்து மலை ஏறி வேதகிரீசனை வணங்கினான். உடனே அவனது தீவினைகளும் ஆணவமும் கருங்காக்கை வடிவில் அவன்தலையிலிருந்து வெளிப்பட்டு மேலெழுந்து பறந்து திருமலை தென் பகுதியில் சென்று மலை வடிவாய் நின்றது.  அந்த இடம் இன்று "காக்கைக்குன்று' என்றுஅழைக்கப்படுகிறது. மலைக்கொழுந்தாய் தரிசனம் தந்த சிவனுக்கு கவசமாக ஒரு சிவலிங்கம்நிறுவினான். கீழே தாழக் கோயில் ஒன்று கட்டினான். பக்தர்களுக்கு அருளுபவன் என்பதால், "பக்தவத்சலேஸ்வரர்' என அழைக்கப்பட்டார்.  பார்வதி தேவியை "திரிபுரசுந்தரி' என்ற பெயரோடு அழைத்து அனைத்துத் தெய்வங்களுக்கும் கருவறை, அர்த்தமண்டபம், மஹாமண்டபம் ஆகியவற்றைக் கட்டி உத்ஸவங்கள் போன்றவை நடத்த பல கிராமங்களை இறையிலியாகவும் தேவதானமாகவும் சர்வமானியமாகவும் கொடுத்தான்.

மலை மேல் ஒரு கோயில் சொக்கநாயகி உடனுறை வேதகிரீஸ்வரர் எனவும்,  ஊருக்குள் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை பக்தவசலேஸ்வரர் கோயிலும் உள்ளது. இவை முறையே மலைக்கோயில், தாழக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி,  இம்மலையை வலம் வந்து இறைவனை வழிபட்டால் உடற்பிணி நீங்கும்.
இந்தத் தலத்தைச்சுற்றி 12 தீர்த்தங்கள் உள்ளன.  மலைக்கு கீழே உள்ள ஆலயம் தாழக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சமான வாழைமரம் இங்கு சிறிய தோட்டமாகவே அமையப்பெற்றுள்ளது.

மலைக் கோயிலுக்குச் செல்ல 565 படிகள் உள்ளன. மிகவும் பழைமையான இவ்வாலயத்தில் இறைவன் சுயம்புத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார். இவர் மீது அபிஷேகம் செய்யும்படியாக கவசம் லிங்கம் போன்று பொருத்தப்பட்டுள்ளது. கருவறை, கருங்கற்பாறைகளால்  ஆனது.

கார்த்திகை 4-ஆம் சோமவாரத்தையொட்டி, டிச.12 இல்  1,008 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடைபெறுகிறது. 

செங்கல்பட்டிலிருந்து 14 கி. மீ. தொலைவில் இந்தக் கோயில் உள்ளது.
தொடர்புக்கு: 04427447139,  9444710979.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com