ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: கன்னி
Published on
Updated on
2 min read

கன்னி ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

17.03.2022 முதல் 11.07.2022 வரை உள்ள காலகட்டத்தில் புதிய பொறுப்புகளைத் திறம்பட ஏற்று நடத்தி வெற்றிகளைப் பெறுவீர்கள். நண்பர்கள், கூட்டாளிகளுக்கும் நல் ஆதரவு தருவீர்கள். புதிய வருமானத்திற்கு வாய்ப்புகள் தென்படும். பொருளாதார நிலையும் படிப்படியாக உயரும். 

குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். அர்ப்பணிப்பு மனநிலையுடன் பணியாற்றுவீர்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று, செய்தொழிலைப் பெருக்கி, பழைய இழப்புகளை சரி செய்து கொள்வீர்கள். அதேநேரம் பயணங்கள் செய்ய நேரிடும் பொழுது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படவும். மற்றபடி மூத்தோரின் ஆசிகளைத் தேடிப் பெறுவீர்கள். குழந்தைகள் செய்யும் சிறு தவறுகளைப் பெரிது படுத்த வேண்டாம். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுடன் நல்லுறவைப் பராமரிப்பீர்கள். 

12.07.2022 முதல் 06.02.2023 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உங்களை இகழ்ந்தவர்கள் மனம் மாறி நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானத்துடன் பணியாற்றுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை கூடத் தொடங்கும். உங்கள் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். புதிய முதலீடுகள் செய்வதற்கு ஆழ்ந்த சிந்தனைகளை செய்வீர்கள்; அதில் ஓரளவு வெற்றியும் காண்பீர்கள். 

குடும்பத்தில் உங்கள் பெயர், புகழ் உயரத் தொடங்கும். உடலாரோக்கியம் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். சமயோஜித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சிகளால் வெற்றி உறுதியாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

07.02.2023 முதல் 28.11.2023 வரை உள்ள காலகட்டத்தில் பாதுகாப்பான வகைகளில் முதலீடு செய்வீர்கள். பழைய அனுபவங்களைப் பயன்படுத்தி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடலாரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள், குறிப்பாக வயிறு, தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் மறையத் தொடங்கும். மற்றபடி உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்று பூர்த்தியாகும். 

தொலைதூரச் செய்தி ஒன்று உங்களை வந்தடைந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். வழக்குகளில் இருந்து வந்த தடைகள், தாமதங்கள் மறைந்து சாதகமான திருப்பங்கள் உண்டாகும். உடன்பிறந்தோரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அவர்களால் உங்களுக்கும், உங்களால் அவர்களுக்கும் நன்மைகள் உண்டாகும். நெடுநாளாக விற்காமல் இருந்த சொத்து ஒன்று நல்ல விலைக்கு விற்று, அந்த முதலீட்டின் மூலம் வருமானம் வரத் தொடங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைப் பளு சற்று கூடுதலாகவே இருக்கும். பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.  

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். கூட்டாளிகளால் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். 

விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி எதிர்கால வளத்திற்கு வித்திடுவீர்கள். கால்நடைகளால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் முதலுக்கு மோசம் போகாது.  

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் முக்கியமான பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய உத்வேகத்துடன் உங்கள் வேலைகளைச் செய்து செய்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். முனைப்பான செயல்பாடுகளால் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். 

பெண்மணிகள் பெரியோர்களை மதித்து தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வார்கள். திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும்.

மாணவமணிகள் சக மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பாடங்களை மனதில் நிறுத்திக்கொள்ளும் முறையை செம்மைப் படுத்திக் கொள்ளுங்கள்.  

பரிகாரம்: திருவேங்கடநாதரை வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com