சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

பிறவிப் பிணி நீக்கும் புற்றுக் கோயில்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில். "இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும்; அனைத்து தோஷங்களும் நீங்கும்' என்பது ஐதீகம். 

News image
Updated On :4 மார்ச் 2022, 9:35 am

தினமணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில். "இந்தக் கோயிலில் பொங்கலிட்டு வழிபட்டால் திருமணம் கைகூடும்; அனைத்து தோஷங்களும் நீங்கும்' என்பது ஐதீகம். 

இத்திருக்கோயிலில் அருளாட்சி நடத்திவரும் பகவதி அம்மன் புற்றுவடிவில் சுயம்புவாகத் தோன்றிய சிறப்புடையது.  பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்த இடம் வனமாக இருந்ததால் அருகிலுள்ள கிராம மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து வருவர். ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் இங்கு நிறைந்து இருந்ததால், இந்த இடம் "மந்தைக்காடு' என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் "மண்டைக்காடு' என்று மருவியதாகக் கூறப்படுகிறது. 

ஒருசமயம் இப்பகுதியில் காலரா, அம்மை போன்ற கொள்ளை நோய்கள் பரவ, அதனால் மக்கள் கடும் துயருற்றனர். அப்போது அங்கு வந்த ஆதி சங்கரரின் சீடர் ஒருவர், தன் தவ வலிமையால் அவர்களின் துயரை நீக்கினார். அவர் அங்கேயே தங்கியிருந்து தினமும் ஸ்ரீ சக்கரத்தை தரையில் வரைந்து அதற்கு பூஜைகள் செய்து வந்தார். 

ஒருசமயம் அவர் தியானத்தில் ஆழ்ந்து அங்கேயே ஜீவ சமாதி ஆகிவிட, பிற்காலத்தில் அவர் பூஜை செய்த இடத்தைச் சுற்றிப் புற்று வளர்ந்து மூடிவிட்டது.
வெகு காலம் கழித்து, ஒரு நாள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆடு ஒன்று அங்கு வளர்ந்திருந்த புற்றை மிதித்துவிட, உடனே புற்றிலிருந்து ரத்தம் பீறிட்டது. 

அதிர்ச்சியடைந்த சிறுவர்கள், அதை ஊர்ப் பெரியவர்களிடம் தெரிவிக்க, அவர்களும் வந்து பார்த்துவிட்டு அரசனுக்கு அதைத் தெரிவித்தனர். மன்னனும் வந்து பார்த்தான். 

அன்று இரவு அரசன் கனவில் பகவதி அம்மன் தோன்றி, இங்குள்ள மக்களைக் காப்பதற்கு தானே அங்கு குடி கொண்டுள்ளதாகவும், புற்றிலிருந்து ரத்தம் நிற்க வேண்டுமானால் சந்தனத்தை அரைத்து பூச வேண்டுமென்றும் கூறி மறைந்தாள். 

மன்னனும் மறுநாள் அங்கு சென்று அவ்வாறே செய்ய, ரத்தம் வருவது நின்றது. பகவதியின் சாந்நித்யம் குடிகொண்ட அந்த இடத்தில், மன்னன் தினமும் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்தான்.  புற்றைச் சுற்றிலும் ஓலை வேயப்பட்டு நித்தமும் விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. பின்னர் வந்த மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பெற்று இன்று பெரிய திருக் கோயிலாகத் திகழ்கிறது. 

தமிழகத்தில் பல பெயர்களுடன் அம்பிகையின் திருவுருவங்களை காணலாம். ஒவ்வொரு அம்மனுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். வேம்பாக, பாம்பாக, வேராக, புற்றாக எங்கெங்கும் தோன்றி அருள் பொழியும் அம்மன் இங்கு சுமார் 15 அடி உயரம் கொண்ட பெரிய புற்றாக வணங்கப்படுகிறாள். 

இத்திருத்தலத்தில் உள்ள பகவதி அம்மனின் சிறப்பே புற்று தான். இந்த புற்று வடிவம் கொண்ட அம்மன் வளர்ந்து கொண்டே வருவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். 15 அடிக்கு உயர்ந்து நிற்கும் புற்றின் மேல் பகவதி அம்மனின் முகம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக வெள்ளியில் பகவதி அம்மன் சிலையும், அதற்கும் முன்பாக வெண்கலத்தில் நின்ற நிலையிலும் பகவதி அம்மன் அருள் மழை பொழிகிறாள். இங்கு வந்து வழிபட்டால் வேண்டியது நடக்கும் என்பது ஜதீகம்.

பெண்களின் சபரிமலை: சபரிமலைக்குப் பெண்கள் அனுமதியில்லாததால் பலரும் 41 நாள் விரதமிருந்து இருமுடி கட்டி "சரணம்தா தேவி! சரணம் தா தேவி! பொன்னம்மே!' என்னும் கோஷத்துடன் கடலில் நீராடிவிட்டு இங்கு வந்து பகவதியைத் தரிசிக்கின்றனர். அதனால் இத் திருக்கோயில் "பெண்களின் சபரிமலை' என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.

ஒடுக்கு பூஜை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பத்து நாள்கள் கொடைவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, பிப்ரவரி 27}ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் அம்பிகை சிறப்பு அலங்காரங்களுடன், வெள்ளி, தங்க பல்லக்குகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாள். இக்காலங்களில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், புராண இதிகாச சொற்பொழிவுகள், நடன நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. 

இத்திருவிழாவின் 10}ஆம் நாளான 8.3.2022 அன்று சிறப்புமிக்க ஒடுக்கு பூஜை நடைபெறும். பகவதிக்கு உணவு படைப்பதையே ஒடுக்கு பூஜை குறிக்கிறது.
இந்த பூஜையின் சிறப்பம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்து தயார் செய்யப்படுகிறது. 

பின்னர் அருகில் உள்ள சாஸ்தா கோயில் பக்கமிருந்து பூஜைக்கு எடுத்து செல்லப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளைத் துணியால் மூடி, தங்கள் தலையில் சுமந்து வாய்ப்பூட்டு கட்டியபடி, பூசாரிகள்  ஊர்வலமாக எடுத்து வருகின்றனர்.  

அப்போது, இதைக் கண்டு களிக்க ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து இருந்தாலும் ஒரு சிறு சப்தம் கூட கேட்காது என்பது சிறப்பு. அம்மனுக்குப் படையல் போடும்போது எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதே இதன் ஐதீகம். பின்னர் கோயிலை ஒருமுறை வலம் வந்து அம்மன் முன்பு உணவு வகைகள் வைக்கப்பட்டு,  நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது.

கல்யாண வரம், குழந்தை வரம், ஊனம், கண் நோய், தலைவலி நிவாரணம் போன்றவற்றுக்காக இத்தலத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இந்த கோயிலில் வழங்கப்படும் "மண்டையப்பம்' மிகவும் பிரபலமானது. 

அரிசி மாவில் வெல்லம், பாசிப் பருப்பு, ஏலம், சுக்கு ஆகியவை சேர்ந்து நீராவியால் அவித்துத் தயார் செய்யப்படுகிறது இந்த மண்டையப்பம். இது அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.
மாசி கொடை விழாவின் போது, வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் கோயில் வளாகத்தைச் சுற்றி பொங்கல் வைக்கப்படுகிறது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் குணமாகி இங்கு வந்து முத்தாப்பம் எனப்படும் அப்பத்தை நிவேதனம் செய்கின்றனர்.

பகவதியை மனமுருக வேண்டிவந்தால், அம்பிகை நம் பிறவிப் பிணி நீக்கி பேரின்ப வாழ்வருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேப்ப மரம் தல விருட்சமாக உள்ள இத்தலத்தில்  செவ்வாய், வெள்ளிக் கிழமை மற்றும் பெüர்ணமிகளில் அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர்.  இத் திருக்கோயிலுக்கு நாமும் ஒருமுறை சென்று வழிபட்டு நம் பிறவிப் பிணி தீர, பகவதியின் அருள் பெறுவோம்...!

அமைவிடம்: இந்தத் திருத்தலம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும்,  குளச்சலிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.   

-ரஞ்சனா பாலசுப்ரமணியன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.