
பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், முதன்மையாய் இருப்பதும் காரடையான் நோன்புதான்.
இதனை "காமாட்சி நோன்பு' என்றும் "சாவித்ரி விரதம்' என்றும் கூறுவதுண்டு. இந்தாண்டுக்கான காரடையான் நோன்பு 14.03.2022 திங்கட்கிழமை இரவு மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த விரதம் இருப்பவர்கள் நைவேத்தியம் செய்ய, காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து அதனை நைவேத்யம் செய்வர். அதனால் இதைக் காரடையான் நோன்பு என்கிறார்கள். இந்த நோன்பிற்கு காரணமான புராண வரலாற்றைக் காண்போமா!
சாளுவ தேசத்து மன்னனான துயமத்சேனனின் மகன் சத்தியவான். இம் மன்னனுடைய எதிரிகள் இவருடைய நாட்டைப் பிடுங்கிக் கொள்ள, அவர்கள் எதிரி அரசனுக்கு பயந்து குழந்தை சத்யவானுடன் நாட்டை விட்டு வெளியேறி, காட்டில் தஞ்சம் புகுந்தனர். வயதுக்கு வந்தபின் சத்தியவானுக்கு இழந்த நாட்டை மீட்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், உரிய காலம் வரும்வரை காத்திருக்க முடிவுசெய்து, பெற்றோருக்குப் பணிவிடை செய்து கொண்டு காட்டிலேயே வசித்து வந்தான். இந்நிலையில் மந்திரதேசத்தை ஆட்சி செய்துவந்த மன்னர் அசுவபதியின் மகள் சாவித்திரி ஒருமுறை வனப்பகுதிக்குச் சென்றபோது, சத்தியவானைக் கண்டாள்.
சத்தியவானின் தோற்றத்தில் மயங்கிய சாவித்ரி, அவனை மணக்க விரும்பி, தனது ஆசையை தந்தையிடம் தெரிவித்தாள். திருமணம் நடந்தது.
திருமணத்தின் போதே சத்யவானுக்கு ஆயுள் குறைவென்பதை ஜோதிடர்கள் மூலம் தெரிந்து கொண்ட சாவித்ரி, அவர்களுடைய ஆலோசனைப்படி, கணவனின் ஆயுள் விருத்திக்காக, காமாக்ஷி விரதத்தை மேற்கொண்டாள். ஆயுள் பிரியும் என்று ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்த நாளன்று, சத்யவானுடன் விறகுகள் சேகரிக்க, கானகம் சென்றாள். விறகுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கும் போது, சத்யவான் தனக்கு களைப்பாக இருப்பதாகக் கூற, சாவித்ரி தன் மடியில் அவனைக் கிடத்திக் கொண்டு, அம்பிகையைத் துதித்துக் கொண்டிருந்தாள். அங்கு வந்த எமதர்மன் சத்தியவானின் உயிரைக் கவர்ந்து சென்றார்.
எமதர்மனைப் பின் தொடர்ந்தாள் சாவித்ரி. தன்னைப் பின் தொடர்ந்து வரும் சாவித்ரியைப் பார்த்து திரும்பிப் போய்விடு என்று எமதர்மன் எச்சரிக்க, அதைச் சற்றும் பொருட்படுத்தாத சாவித்ரி, எமதர்மன் காலில் விழுந்து ஆசீர்வதிக்க வேண்டினாள். எமதர்மனும் தன் காலில் ஒரு பெண் விழுந்தாள் என்றதும், "தீர்க்க சுமங்கலி பவ' என வாழ்த்திவிட்டார். வாழ்த்திய பிறகு தான் தர்மராஜனுக்குப் புரிந்தது, தான் பறித்துக் கொண்ட உயிர், இவளின் கணவனின் உயிரென்று.
உடனே சாவித்திரி நீங்கள் வாழ்த்தியது உண்மையானால் அதன் படி வாழ எனக்கு அருள் புரியுங்கள். தான் பதிவிரதை என்பது உண்மையானால் என் கணவனின் உயிரைத் திருப்பித் தாருங்கள் என்றார். சாவித்திரியின் அறிவின் திறத்தை வியந்த எமதர்மன் இறந்தவனின் உயிரைத் தவிர வேறு என்ன வரம் கேட்டாலும் தருவதாக வாக்களித்தான்.
உடனே சாவித்ரி, சமயோசிதமாக, தன் மாமனார், மாமியாருக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்க வேண்டும், அவர்கள் இழந்த நாட்டை திரும்பப் பெற வேண்டும், மேலும் தன் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால் அவருக்கு ஆண் பிள்ளை பிறக்க வேண்டும். தனக்கு 100 குழந்தைகள் வேண்டும் என வேண்ட, சற்றும் யோசிக்காத எமன், சாவித்ரி எப்படியாவது திரும்பிச் சென்றால் போதும் என்று நினைத்து, அவள் வேண்டிய வரங்களைத் தந்தோம் என்றார்.
உடனே சாவித்திரி எமதர்மனிடம் தனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்றால் தன் கணவன் உயிருடன் இருக்க வேண்டும் அல்லவா என்று சொல்ல, தான் யோசிக்காமல் கொடுத்த வாக்கை உணர்ந்த எமதர்மன் அவளிடம், உன் பதிவிரதா தர்மத்தின் மகிமையால் என்னை கண்டது மட்டுமின்றி, என்னுடன் வாதம் செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டாய். அதனால் நீ வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கட்டும். உன் கணவன் உயிர் பெற்றெழுவான், என்று ஆசி கூறி மறைந்தார்.
அவ்வாறு சாவித்ரி சத்யவானின் உயிரை மீட்டெழுத்த நாள்தான் மாசி மற்றும் பங்குனி மாதம் சேரும் நன்னாள் என்று புராணங்கள் கூறுகின்றன. காலனை தன் வாதத்திறமையால் வென்ற சாவித்ரியின் பதிவிரதத்தைப் போற்றும் விதமாக, இந்நாளை ஒவ்வோர் ஆண்டும் பாரதம் முழுவதும் முக்கிய விரதமாக அனுஷ்டித்து வருகின்றனர்.
காமாட்சி அம்மனை வேண்டி, தங்கள் குல வழக்கப்படி சங்கல்பம் செய்து கொண்டு, "மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா' என்று அம்பிகையத் தியானித்து "உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன். ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டு மஞ்சள் சரடைக் கட்டிக் கொண்டு பூஜையை முடிக்க வேண்டும்.
-ரஞ்ஜனா பாலசுப்ரமணியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.