தேவியின் திருத்தலங்கள் 65: தேப்பெருமாநல்லூர்  ஸ்ரீ வேதாந்த நாயகி

தேவியின் திருத்தலங்கள் 65: தேப்பெருமாநல்லூர்  ஸ்ரீ வேதாந்த நாயகி
Published on
Updated on
3 min read

நபிம்பம் தத்பிம்ப பிரதிபலந ராகாத் அருணிதம்
துலாம் அத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேதா கலயா
- செளந்தர்யா லஹரி  

உலகாயுத விஷயங்களை விட முக்கியம் வேதாந்தம். அழிந்து போகும் பொருட்கள் மீது பற்று வைக்காமல் அனைத்தையும் தாண்டிய பரம்பொருளைப் பற்றி, மோட்சம், போன்ற விஷயங்களைச் சொல்வது வேதாந்தம். இது பல தத்துவங்களின் தொகுப்பு.

வேதங்களின் உட்பிரிவான உபநிஷத்துகள் கூறும் தத்துவங்கள் வேதாந்தத் தத்துவங்கள் என்று சொல்கிறோம். வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைச் சொல்கிறது. இதற்கு பல ஞானிகள் பலவிதமாகப் பொருள் சொல்கிறார்கள். அதிகம் பூடகமான பொருள் கொண்டவையாக இருக்கும். பல விதமான பொருள்களைக் கொண்டதாக இருப்பதால் பல்வேறு விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.


ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே 
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ண மேவாவசிஷ்யதே 

என்று சொல்கிறது ஒரு வேதக் கருத்து.

ஒரு முழுமை இருக்கிறது. இந்த முழுமையிலிருந்து ஒரு முழுமை தோன்றியுள்ளது. இப்படி ஒரு முழுமையை எடுத்த பிறகும் அங்கு ஒரு முழுமை எஞ்சி நிற்கிறது என்கிறது வேதாந்தம். இது வேதங்களின் இறுதிப் பகுதியாக உள்ள உபநிடதக் கருத்துகள் ஆகும். 

இந்த முழுமையைப் புரிந்து கொண்டவர்கள் தங்கள் வாழ்வை அம்பிகைக்கே அர்பணித்து விடுவார்கள். அவளையே சரண் அடைந்தவர்களுக்கான அனைத்து நலன்களையும் அளித்து, கூடவே வேதாந்த கருத்துகளையும் உபதேசிக்கிறாள்.

தன் தவம், பூமிக்கான வருகை என்று அவளின் அவதாரங்கள் அனைத்தும் உலகம் ஒரு முழுமையை நோக்கி நகர்கிறது, இங்கு எதுவும் நிரந்தரமில்லை என்று உணர்த்தவே. எல்லா லெளகீக ஆசைகள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. அழியாத, பரம்பொருள், முழுமையானவள் அம்பிகை மட்டுமே. அவளைச் சரணடைந்து விட வேண்டும்.

இந்தத் தத்துவத்தையே தேப்பெருமாநல்லூரில் விளக்குகிறாள் அம்பிகை. அவளின் பெயரே வேதாந்த நாயகி.

உதட்டைக் குவித்து, ஒரு காலை முன் வைத்து எதோ கூறுவது போல் நிற்கிறாள் அம்பிகை. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அத் தத்துவத்தை விளக்குகிறாள் என்கிறார்கள் பக்தர்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தலம் தேப்பெருமாநல்லூர். பிறவா நிலையை அருளும் தலமாக விளங்கும் இங்கு மறுபிறவி இல்லாதவர்களே வர முடியும். மகா பிரளய காலத்தில் பூவுலகமே நீரில் மூழ்க, இத்தலம் மட்டும் நீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. இது என்ன என்று அறிந்து கொள்ள, நான்முகன் கணபதியைத் தியானிக்க, விநாயகர் அவர் முன் தோன்றினார்.

இத்தலம் மிகவும் புனிதமானது. இங்கு ஈசனும் அம்பிகையும் எழுந்தருளப் போகிறார்கள். மறுபிறவி இல்லாத புண்ணியர்களே இங்கு வந்து அம்மையப்பனைத் தரிசனம் செய்ய முடியும். அப்போது நான் மனிதனைப் போலவே இருப்பேன்.' என்று கூறுகிறார்.

அதுபோலவே இக்கோயிலில் கன்னி மூலையில் கபால கணபதி என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார் விநாயகர்.

கண்கள் முகத்தின் நடுவில் இருக்கிறது. அவரின் கை, கால் விரல்கள், நரம்புகள் அனைத்தும் மனிதர்களைப் போலவே அமைந்துள்ளது.

அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடுகளாக மாற்றி இடுப்பில் அணிந்துள்ளார்..சந்தன அபிஷேகத்தின்போது இந்தக் கபால ஒட்டியானத்தைத் தரிசிக்க முடியும். இவரை வணங்கினால் அவர்களின் பாவங்களை நீக்கி, சகல செளபாக்கியங்களை அருள்கிறார்.

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியே,வெளியே வந்தால் நந்தி எம்பெருமான் காட்சி அளிக்கிறார். இவருக்கு வலதுகாது  இல்லை. பிரளயத்தின் போது பிரும்மாவுக்கு இங்கு ஈசன் ஜோதி ரூபமாகக் காட்சி அளித்தார். அப்போது அவரைத் தேடி வந்த நந்தி கால் சறுக்கி விழுந்து விடவே

அவரின் வலது காது உள்பக்கமாக மடங்கி விட்டது.

மனம் வருந்திய நந்தியிடம் 'கவலைப் படாதே. இனி பக்தர்கள் உன் வலது காதில் தங்கள் குறைகளைச் சொன்னால் அதை நான் உடனே நிறைவேற்றுவேன்' என்றார் ஈசன். அதன்படி பக்தர்கள் வலது காதில் தங்கள் கோரிக்கைகளை வைக்கிறார்கள்.

மிகவும் பழமையான இந்த ஆலயம் ஆகம விதிகளுக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்தில் உள்ளன. இங்கு பிரசாதமாக வில்வமும், ஒரு ருத்ராட்சமும் அளிக்கப்படுகிறது.

மகா மண்டபத்திற்குள் தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் காட்சி அளிக்கிறாள் அம்பிகை. அம்பாள் நம்முடன் பேசுவதுபோல் உதடுகளைக் குவித்து, வலது காலை எடுத்து வைத்து முன்னோக்கி வருவது போல் காட்சி தருகிறாள். அன்னையை வணங்கினால் கல்வி, ஞானம் அருள்வாள் என்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத்தடைகள் விலகும்.

அன்னையின் சந்நிதிக்கு அருகில் இரண்டு பைரவர் திருமேனிகள் உள்ளன. சாந்த பைரவர் சிறிய உருவிலும், மகா பைரவர் என்ற பெயரில் ஐந்து அடி உயரத்தில் பெரிய உருவில் இருவரும் ஒரே சந்நிதியில் காட்சி அளிக்கிறார்கள்.
இவருக்கு அருகில் சனி பகவான் காக்கை வாகனத்துடன் இடுப்பில் கை வைத்து, ஒய்யாரமாக மேற்கு நோக்கி, இறைவனைப் பார்த்த வண்ணம் நிற்கிறார். ஒருமுறை, ஈசனை பிடிப்பதற்காக, சனி வருகிறார். அம்பிகையிடம், "தாயே, நான் நாளைக்காலை ஏழேகால் நாழிகை ஈசனை பிடிக்கப் போகிறேன்''- என்கிறார்.

சனியிடமிருந்து, ஈசனைக் காப்பாற்ற, அம்பிகை, அவர் வரும் நேரம், கைலாயத்தில் உள்ள ஒரு அரச மரத்தின் பின் மறைந்து கொள்ளும்படிக் கூறினார். அவர் அங்கிருப்பதை அறிந்து கொண்ட, சனி பகவான், அந்த திசையை நோக்கியபடி நின்றார். ஏழேகால் நாழிகை முடிந்ததும், அங்கிருந்து கிளம்பினார்.

அம்பிகையிடம் சனி பகவான், நான் அவரை ஏழேகால் நாழிகை பிடித்துக் கொண்டதால்தான் அவர் மறைந்திருந்தார்  என்று ஆணவமாகப் பேசினார். அவரின் ஆணவப் பேச்சைக் கேட்டதும், மறைந்திருந்த ஈசன் பைரவராக அவதாரம் எடுத்து, சனியை இரண்டாகக் கிழித்தார். நீஙகள் வகுத்துக் கொடுத்த சட்டத்தின்படியே நான் நடந்து கொண்டேன். இருந்தாலும் அதில் இருந்த ஆணவத்தை மன்னித்து முன்போல் செயல்பட அருளுங்கள் என்று சனி வேண்ட, ஈசன் இருகூரான உடலை சேர்த்து அருள் புரிகிறார்.

இங்கு ஆணவம் நீங்கிய சனியை வணங்கினால் தோஷங்கள் விலகும். உக்கிர பைரவராக காட்சி தந்த ஈசனுக்கு அம்பிகை நான்கு வேதங்களைச் சொல்லி சாந்தப் படுத்தினார். எனவே அன்னைக்கு வேதாந்த நாயகி என்று பெயர். தினமும் காலையில் சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின்மீது விழுகிறது. அதன் பின்னரே கோவில் திறக்கப்படுகிறது.

ஒவ்வொரு சூரிய கிரகணத்தின் போதும் எங்கிருந்தோ ஒரு நாகம் வந்து வில்வமரத்தில் ஏறி வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு வந்து, கிழக்கு வாசல் வழியாக கருவறைக்குள் நுழைந்து சிவலிங்கத்தின் மீது, ஏறி வில்வதளத்தை வைத்தபின், ஈசன் முன் நின்று படம் எடுத்து வழிபட்ட பின் வந்த வழியே திரும்பிச் சென்று விடும். அது சிவபூஜை செய்வது அதிசயமான நிகழ்வு.

அதன்பிறகு இக்கோயில் தல புராணத்தை ஆராய்ந்தபோது, ராகு, கேது, வாசுகி, கார்க்கோடகன், தக்கன் உள்ளிட்ட ஏழு பாம்புகள் இங்கு ஈசனை பூஜித்திருப்பது தெரிய வந்தது. அடிக்கடி இங்கு ஆறு அடி நீளமுள்ள நாகம் வந்து பூஜை செய்வதும், தன் சட்டையைக் கழற்றுவதும் நடை பெறுகிறது.

இங்கு ஆதிசக்தியின் அனைத்து அம்சங்களும் நிரம்பியவளாய் அம்பிகை காட்சி அளிக்கிறாள். இவளை வணங்குவதால் அறியாமை நீங்குகிறது. வேதப் பொருளாய் விளங்குகிறாள் அம்பிகை. நாம் பேசுவதும், எண்ணுவதும் அவள் அருளாலே. எனவேதான் வள்ளலார்,

கற்பதுங், கேட்பதும், மேல்லானின் அற்புதக் கஞ்சமலர்ப் 
பொற்பாதங் காணும் பொருட்டென வேன்னுவர் புண்ணியரே

- என்கிறார்.

அம்பிகையின் பாதார விந்தங்களைச் சரணடைவதை விட பெரிய பாக்கியம் எதுவுமில்லை. அவளே முழுமையானவள். முழுமுதற் பொருள். எண்ணிய எண்ணங்களை எல்லாம் பலிக்கச் செய்பவள் அவளே. நம் உள்ளும், புறமும் நிறைந்து நிற்கும் பூரணம் அவளே.

வேதாந்த நாயகி, ஐயனை வணங்கி தங்கள் கோரிக்கைகள் நிறைவேறியவர்கள் அபிஷேகம், செய்து, வஸ்திரம் சாற்றி வழிபடுகிறார்கள். பல அற்புதமான புராண நிகழ்வுகளின் இருப்பிடமாக இருக்கிறது தேப்ருமாநல்லூர். மகாவிஷ்ணு, அகத்திய மகரிஷி, நவக்கிரகங்கள் அனைத்தும் வழிபட்ட தலம்.

ஆதிசக்தி மாயா சக்தியாக மாறி அனைத்து கலைகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்ட தலம். தன் கடுமையான தவத்தின் மூலமனைத்து தெய்வங்களின் வலிமையையும், தனக்குள் அடக்கி உலகை ஆட்சி புரிகிறார்.


இது முதலில் தேவராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது. சக்தியின் அம்சம் முழுமையாக நிரம்பிய இடம் தேப்பெருமாநல்லூர். அவளை வணங்குவதன் மூலம் அனைத்து செளபாக்கியங்களும் கிடைக்கும்.

வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள் 
வாழிநின் றண்மலர் போற்றிநின் றண்ணளி வாழிநின் சீர்.

அவளை வணங்குவோம். வாழ்வின் முழுப்பொருள் அவளே என்று உணர்ந்தால் நடப்பது எல்லாம் நலமாகும். நாளும் நன்மையே நம்மைத் தேடி வரும் என்பது நிச்சயம்.
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com