பொருநை போற்றுதும்! - 186

அந்த நாளில், ஸ்ரீதர  ஸ்ரீ வேங்கடேச ஐயாவாள் அவர்கள், செங்கோட்டைக்கு வருகை புரிய இருந்தார்கள். மஹாபுருஷரை வரவேற்க ஊரே கோலாகலமாக
பொருநை போற்றுதும்! -  186
Updated on
2 min read

அந்த நாளில், ஸ்ரீதர  ஸ்ரீ வேங்கடேச ஐயாவாள் அவர்கள், செங்கோட்டைக்கு வருகை புரிய இருந்தார்கள். மஹாபுருஷரை வரவேற்க ஊரே கோலாகலமாக அலங்கரித்துக் கொண்டிருந்தது. எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் மஹான் வந்தார். தோளில் ஒரு சிறு தம்புராவுடனும், சிவப்புக் கயிற்றில் கட்டிய உஞ்சவிருத்திச் செம்புடனும், சலங்கை லயத்திற்கேற்ற நடன அசைவுகளுடனும் நாமசங்கீர்த்தனம் இசைத்துக் கொண்டே வீதியில் நடந்தார்.

ஒவ்வொரு வீட்டு வாயிலிலும், மஹானுக்கு மணைப்பலகை இட்டுப் பாதபூஜை செய்து, உஞ்சவிருத்திச் செம்பில் அரிசியும் தானியமும் பழங்களும் இட்டு வழிபட்டனர்; வழி விட்டனர். ஒவ்வொரு இல்லமாக நின்று நின்று நடந்த மஹான், குறிப்பிட்டதொரு வீட்டு வாயிலைக் கண்டதும் சற்றே தயங்கினார். வாயிலில் கோலமில்லை; மாவிலைத் தோரணமில்லை; அலங்காரமில்லை; யாரும் வாயிலில் நிற்கவும் இல்லை. எந்த வீட்டு வாயிலில் அவர் நிற்கக்கூடாது என்று ஊர்க்காரர்கள் நினைத்தனரோ, அந்த வீட்டு வாயிலில் நின்றார். 

உடனே நகர்ந்துவிடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். மஹானோ, சுற்றுமுற்றும் பார்த்தவர், திடீரென்று ஏக குதூகலத்துடனும் அதிவேகத்துடனும் நாமசங்கீர்த்தனத்தின் நாதத்தைக் கூட்டினார். நாதத்திற்கேற்ப நாட்டியமும் ஆடினார்.

பரமானந்தத்தில் திளைத்து அந்தப் பெருமகனார் ஆடியும் பாடியும் பரம்பொருளை உபாசித்துக் கொண்டிருக்க, ஊர்க்காரர்கள் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்க, உள்ளிருந்து ஏதொவொன்று பாய்ந்து வந்து மஹானின் காலில் விழுந்தது. 

ஏதோவொன்றா? ஆமாம், விட்டுத் தெறித்த வேகத்தில் அஃறிணைப் பொருள் வந்து விழுவதுபோல்தான், அந்த யுவதி வந்து விழுந்தாள். அஃறிணைப் பொருளுக்கு உள்ளமும் உணர்வும் இல்லாததுபோல், இந்த யுவதிக்கும் இருக்கக்கூடாது என்றுதான் உலகம் எண்ணியது. 

பெற்றோருக்குச் செல்ல மகளாகப் பிறந்த பெண்ணுக்கு, "ஆவுடை' என்று பெயர் சூட்டினார்கள். சிவலிங்கத்தின் பீடத்திற்கு ஆவுடை என்று பெயர். தெற்கத்திப் பகுதிகளில், இந்தப் பெயரைக் குழந்தைகளுக்கு நிறையவே சூட்டுவார்கள். ஆண்குழந்தையானால், ஆவுடையப்பன் ஆகும்; பெண் குழந்தையானால், ஆவுடை அம்மாள் ஆகும். 

சிறுமி ஆவுடைக்கு பால்யத்தில் விவாகம். கூந்தலில் சூட்டிய மலர் வாடுவதற்கு முன்பாகவே, அந்தக் கணவக் குழந்தை இறந்துபோனது. உற்றாரும் உறவினரும் கதறினார்கள். எல்லோரும் அழுதுகொண்டிருக்க, தன்னுடைய அம்மாவை நோக்கி ஆவுடை கேட்டாளாம்: அந்தப் பிள்ளை செத்ததற்கு ஏன் எல்லோரும் அழுகிறீர்கள்? 

பால்ய பிராயமென்பதால் இப்படிக் கேட்டாளா? இல்லை, இளமையிலேயே வேதாந்தம் வேரோடியிருந்ததா? 

தாயாருக்கு ஏதோ பொறி தட்டியது. குழந்தைக்குச் சிங்காரித்து அழகூட்டிக் கல்வியும் பயிற்றுவித்தாள். எல்லாம் சில காலம்! குழந்தைப் பெண் பருவமடைந்தவுடன், உறவுக் கட்டுப்பாடு, "கைம்பெண்ணுக்கு என்ன அலங்காரமும் ஆர்ப்பாட்டமும்?' என்று வினாவெழுப்பி, கூந்தலை மழித்து, நார்மடி உடுத்துவித்தது. கல்விக்கும் தடை.. மகள் அழ.. மகளைக் கண்டு தாய் அழ.. சிறைப்பறவையாகச் சிக்கித் தவித்த வேளையில்தாம், ஸ்ரீதர ஐயாவாள் வந்தார். பெருமகனாரின் வருகையின்போது, ஆவுடை வெளியில் வரக்கூடாது என்றும், அவர்கள் வீட்டு வாயிலில் எந்த அலங்காரமும் மங்கலமும் இருந்துவிடக்கூடாது என்றும் ஊரார் தடை விதித்திருந்தார்கள். 

மங்கலம் இல்லை, தோரணம் இல்லை, மஞ்சள் இல்லை, மாக்கோலம் இல்லை - ஆனாலும், ஐயாவாள் நின்றுவிட்டார். நாதத்தின் அலைகள் காற்றில் பரவப் பரவ... அலையடித்த படகாக ஆவுடை வந்து காலில் விழுந்தாள்; கட்டையாக விழுந்தாள்; கண்ணீர் பெருகக் கதறினாள். யுவதி வந்து விழுந்தவுடன், மந்திரம் போட்டாற்போல் நாட்டியத்தையும் நாதத்தையும் நிறுத்திய ஐயாவாள், மெல்லக் குனிந்தார்; ஆவுடையின் கூந்தலைக் கோதினார்; தேறுதல் கூறினார் - "அழாதே அம்மா, எழுந்திரு. கவலைப்படாதே, இன்று மாலை ஆற்றங்கரை மண்டபத்திற்கு வா' என்று உரைத்துவிட்டு நடையைத் தொடர்ந்தார். 

ஆவுடை விக்கித்தாள்; அம்மாவும் விக்கித்தாள். 

அடுத்த சில கணங்களில், ஆவுடையின் சொந்தக்காரர்கள் வந்து, அவளை அப்படியே அள்ளித் தூக்கி வீட்டிற்குள் சென்றனர். வீதியிலிருந்தவர்கள், கல்லெறிக்குப் பறந்த காக்கைக் கூட்டமெனச் சிதறினர். மீதமிருந்த ஓரிருவர் உதடுகளில் கேலிப் புன்னகை. "மஹானாமே மஹான், இவ்வளவுதானா! அந்தி நேரத்தில் ஆற்றங்கரைக்கு வரச் சொல்கிறார். இவளும் ஓடிவந்து காலைப் பிடிக்கிறாள். விதவைப் பெண்ணுக்குக் கட்டுப்பாடு வேண்டாமோ?' என்றே குரல்கள் நீட்டி முழங்கத் தொடங்கின.
 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com