காளி திருத்தலத்தில் கலியுகக் கண்ணன்

ஸ்ரீமந்நாராயணன் கலியுகத்தில் மக்களிடையே தர்ம நெறியைப் புகட்டுவதற்கும், துன்பப்படும்...
காளி திருத்தலத்தில் கலியுகக் கண்ணன்
Updated on
2 min read

ஸ்ரீமந்நாராயணன் கலியுகத்தில் மக்களிடையே தர்ம நெறியைப் புகட்டுவதற்கும், துன்பப்படும் மக்களுக்குத் துணை நிற்பதற்காகவும், அர்ச்சாவதாரத் திருமேனியனாய்  பல திருத்தலங்களில் அருள்பாலிக்கிறார்.  அவ்வாறாக,  வேங்கடத்து நாயகனே அதே சாந்நித்யத்துடன் நிவாஸன் என்ற திருநாமம் கொண்டு தேவி,  பூதேவி சகிதமாக கோயில்கொண்டு "காளி' கிராமத்தில் அருளும் மேன்மையை அறிவோம்.     

தலத்தின் பெயரே காளி:  மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ.தொலைவில் மணல்மேடு செல்லும் வழியில் உள்ளது காளி கிராமம். திருமணஞ்சேரியிலிருந்து 6 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும்.

பெயர் காரணம்:  சோழர், நாயக்கர் காலத்தில் பெருமாள் பெயரிலேயே இக்கிராமம் நிவாஸபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. 

ஒருசமயம் இங்கே பெருவெள்ளமும் தீராத நோய்களும் மக்களைப் பெரிதும் வாட்டியது. பயந்த மக்கள் நிவாஸப்பெருமாளை பிரார்த்தித்து காரணம் கேட்டு வேண்டினர். பக்தர்களின் கனவில் தோன்றி காட்சி தந்த பெருமாள் அத்தலத்தில் பாயும் விக்கிரமன் ஆற்றிலிருந்து கிடைத்த காளிகாம்பாளை வழிபடக் கூறியதோடு இனி இவ்வூர் நிவாஸபுரம் என்று அழைப்பதற்கு பதிலாக  "காளி  என்றே அழைக்கப்படட்டும்' என்று திருவாய் மலர்ந்தருளினார். மந்தகரை காளியம்மன் என்ற பெயரில் காளிக்கு கோயில் அமைக்கப்பட்டது. ஊர்மக்கள் உபாதைகளும் நீங்கியது. 

தலத்தின் தொன்மை: இவ்வூருக்கு அருகிலுள்ள திருவேள்விக்குடி ஸ்ரீமணவாளேச்வரர் கோயிலிலுள்ள கல்வெட்டு சாஸனத்திலிருந்து கி.பி.11 ஆம் நூற்றாண்டிலிருந்தே காளித் திருத்தலம் தொன்மைவாய்ந்ததாக அறியப்படுகிறது. 

காளி கிராமத்திலுள்ள அபிராமியம்மன் உடனுறை ஸ்ரீகாமேச்வரர்  அருள்பாலிக்கும் சிவன் கோயிலிலுள்ள சோழர்கள் கால கல்வெட்டும், செல்லப் பிள்ளையார் கோயிலிலுள்ள நாயக்கர் கால கல்வெட்டும், ஆலயமேம்பாட்டிற்காக  மன்னர்கள் செய்த தொண்டினைத் தெரிவிக்கின்றது. புதுக்கோட்டை  அரச சமஸ்தானமாக இருந்தபோது, அரண்மனையில் தானாதிகாரியாக இருந்தவர் இவ்வூரைச் சேர்ந்த ஸ்ரீ.உ.வே. ரங்காச்சாரியார் என்பவர். பல அறிஞர்களின் பிறப்பிடமாக இவ்வூர் திகழ்கின்றது.  ஊரின் வடக்குபாகத்தில்  மாரியம்மன் ஆலயம் உள்ளது.      

பெருமாள் கோயில் அமைப்பு:  தேவி,  பூமிதேவி நாச்சியார்களுடன் வேங்கடேசப்பெருமாள் ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்துடன் சங்கு சக்கரதாரியாய் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை ததும்பும் வதனத்துடன் காட்சிதருகிறார்.

உற்சவருக்கும் அதே திருநாமம். கிருஷ்ணர்,  சக்கரத்தாழ்வார்,  கருடாழ்வார், ஆஞ்சநேயர்,  விஷ்வக் சேனாங்கபூத விநாயகர் ஆகியோர் தனிச்சன்னதிகளைக் கொண்டுள்ளனர். நம்மாழ்வார்,  திருமங்கையழ்வார், இராமானுசர், நிகமாந்த மகாதேசிகன் ஆகிய ஆழ்வார்களும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். துவாரபாலகர்கள் ஆராதனம் செய்யும்படி சிலா விக்கிரகமாக அமைந்துள்ளது சிறப்பு. விண்ணகரம் என்னும் சீர்காழி தாடாளப்பெருமாளின் வைப்புசேத்திரமான நிவாஸபுரம் எனப்பெயர் கொண்டது இந்த  காளி கிராமம்.

விழாக்கள்:  வைகாசி மாதத்தில் கருட சேவை உத்ஸவமும்,  திருக்கல்யாண உத்ஸவமும், தை மாதத்தில் பரிவேட்டை உத்ஸவமும் நடைபெறுகின்றன. 

வழிபாட்டு பலன்: பலகுடும்பங்களுக்கு இத்தலப்பெருமாள் குலதெய்வமாக வழிபடப்படுகிறார்.  அங்கப்பிரதட்சிணம் செய்து, திருமஞ்சனம் செய்தால்  எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகள் விலகி, சகல செளபாக்கியம் கிட்டும்.  ஆஞ்சநேயருக்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்து வழிபட நற்பயன்கள் கிடைக்கும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில்  வழிபட மனநிம்மதியும், ஆனந்தமும் ஏற்படும்.

கும்பாபிஷேகம்: இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்தக் கோயிலின் சம்ப்ரோக்ஷணம் கடந்த ஜூன் 10}இல் நடந்தேறியது. 
திருப்பதி ஏழுமலை வேங்கடேசனே சாந்நித்யம் அருள்வதால் ஆண்டின்  கடைசி சனிக்கிழமையான  அக்டோபர் 15}இல்  காளித் திருத்தலத்தில் கலியுகக்கண்ணனாம் நிவாஸனை போற்றிப் பயன் பெறுவோம்.  

தொடர்புக்கு} 9489259060.
 }ஆ.வீரராகவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com