ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை காட்சி தரும் ஆயிரங்காளியம்மன்!

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்திலிருந்து வெளிவந்து காட்சியருளும் காஞ்சிபுரம் அத்திவரதரை நாம் அறிவோம்.
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை காட்சி தரும் ஆயிரங்காளியம்மன்!


நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்திலிருந்து வெளிவந்து காட்சியருளும் காஞ்சிபுரம் அத்திவரதரை நாம் அறிவோம். ஆனால், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளிப்பெட்டியில் இருந்து வெளிவந்து இரண்டு நாட்கள் மட்டுமே காட்சியருளும் வீரமாகாளியம்மனை சிலர் மட்டுமே அறிவர்.

அந்தவகையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் தருகின்ற அதிசய ஆயிரங்காளி அம்மன் ஆலயம் புதுச்சேரி மாநிலத்தின், திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ளது. இந்த தரிசனம் இவ்வாண்டு வருகின்றது. இந்த அபூர்வ ஆலயம் பற்றி இப்போது அறியலாம்.

ஆயிரங்காளி அம்மன்: இந்த அம்மனின் இயற்பெயர் வீரமாகாளி ஆகும். இதனை இவ்வூரில் வாழ்ந்த மகாவித்வான் சோமசுந்தரக்கவிராயர் இயற்றிய பாடல்கள் வாயிலாக அறிய முடிகின்றது. ஆனால், இந்த அம்மனுக்கு பூ, பழம், இனிப்பு, என எந்தப் பொருளை படைத்தாலும் அது ஆயிரம் எண்ணிக்கை கொண்டு, ஒவ்வொன்றிலும் ஆயிரம் பொருட்கள் படைக்க வேண்டும்.  ஆயிரம் எண்ணிக்கையில் படையல்களை ஏற்றதால், அன்னை ஸ்ரீஆயிரங்காளிஅம்மன்  என அன்போடு அழைக்கப்படுகின்றாள்.

தலவரலாறு: வங்க தேசத்தை ஆண்ட மன்னன் அன்னை காளியின் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்தான். நின்ற கோல அன்னையை ஸ்தாபித்து நாள்தோறும் ஆயிரம் பூக்கள், ஆயிரம் மஞ்சள், ஆயிரம் பிரசாதங்கள் என ஆயிரம் எண்ணிக்கையில் நிவேதனம் செய்து வழிபட்டு வந்தான். மன்னனின் காலத்திற்குப்பின் மற்றவர்களால் ஆயிரம் படையல் வழக்கத்தை மேற்கொள்ள முடியவில்லை. அதனால், அன்னையை ஒரு மரப்பெட்டியில் வைத்து , அதில் வழிபடும் வழக்கத்தை ஓலையில் எழுதி வைத்து கடலில் மிதக்க விட்டனர்.

கடலில் மிதந்துவந்த பெட்டி, காரைக்காலையடுத்த திருமலைராயன்பட்டினத்தில், வங்கக்கடலும், திருமலைராயன் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் நிலை கொண்டது. இதைக்கண்ட அப்பகுதி வாழ் மக்கள் இப்பெட்டியைக் கண்டு அதிசயித்தனர். தங்களுக்கு பெரும் புதையல் கிடைத்ததாக எண்ணி அதை கைப்பற்ற நெருங்கினர். ஆனால், அப்பெட்டியோ அவர்களிடம் இருந்து விலகி, விலகிச் சென்றது. முடிவில்  ஒரே இடத்தில் மீண்டும் நிலைகொண்டு நின்றது. "இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. மக்கள் பெருமளவில் கூடினர். ஆனால் எவராலும் அப்பெட்டியை நெருங்க முடியவில்லை. இது ஏதோ தெய்வசக்தியாக உள்ளதென மக்கள் உணர்ந்தனர்.

இறையருள் பெற்றவராலேயே பெட்டியை மீட்க முடியும் என புரிந்து கொண்டனர். இந்நிலையில், ஒருநாள் இரவு திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த ஒரு வயது முதிர்ந்த சிவனடியாரின் கனவில் தோன்றிய அன்னை தான் குடியிருக்கும் பெட்டியை கடலில் இருந்து மீட்டு வந்து வழிபடுமாறு கட்டளை இட்டாள். ஊரார் மீண்டும் திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு சென்றனர். சிவனடியார் அப்பெட்டியை நோக்கி மனமுருகி வேண்டி வணங்கினார். அப்போது அங்கு அதிசயம் நிகழ்ந்தது. அப்பெட்டி அவரின் அருகில் வந்து நின்றது.

ஆயிரங்காளி குடியமர்தல்: அப்பெட்டியை அவ்வூரில் உள்ள தேவார வைப்புத்தலமான, அபிராமி உடனுறை இராஜசோளீஸ்வரர் திருக்கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அவ்வூரில் உள்ள புதுவை ஸ்ரீபாத பூஜை அம்பலத்தாடும் சுவாமிகள் மடத்தில் வைத்தனர். பெட்டியைத் திறந்தபோது  ஒளிவீசும் வடிவமாக ஆயிரங்காளி காட்சியருளினாள். அவளின் திருவடியில் ஓர் ஓலைச்சுவடியும் தென்பட்டது. அதில் அன்னைக்கு படைக்கும் பொருள் எதுவாகினும் அது ஆயிரம் எண்ணிக்கையில் இருத்தல் வேண்டும், என எழுதியிருந்தது.
பொருளாதார வசதி அதிகம் இல்லாத அப்பகுதி மக்களுக்கு தினமும் ஆயிரம் ஆயிரம் பொருட்களாக படையல் செய்வது இயலாத காரியமாக இருந்தது. முடிந்தவரை ஆயிரத்தில் நிவேதனம் செய்து வந்தாலும் அவர்களால் அதைத்தொடர முடியவில்லை.  அதனால் அன்னையிடம்" அன்னையே, தினந்தோறும் ஆயிரம் பொருட்கள் படையல் என்பது எங்களுக்கு இயலாத நிலையுள்ளது. இதற்கு நீங்களே வழிகூற வேண்டும்", என வேண்டி நின்றனர்.

பக்தர்களின் சிரமங்களை உணர்ந்த அன்னை அதற்கு வழிகாட்டினாள். "பக்தனே,உங்கள் நிலையை நான் அறிவேன். ஆனாலும் இங்கேயே நிரந்தரமாக குடியமர விரும்புகிறேன். எனவே, எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஆயிரம், ஆயிரம் பொருட்களால் நிவேதனம் செய்து வழிபடுங்கள். அதன்பின், என் வடிவை மீண்டும் பெட்டியில் வைத்து பூட்டி அதை தினந் தோறும் வழிபடுங்கள்", என வழிகாட்டினாள். அதன்படியே சுமார் பல்லாண்டு காலமாக அன்னை ஆயிரங்காளி ஐந்தாண்டுக்கு ஒருமுறை காட்சி அருளுகின்றாள்.

தென்திசை நோக்கிய காளி: பொதுவாக காளியம்மன் வடதிசை நோக்கியே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இத்தலத்து அம்மன் தென்திசை நோக்கியபடி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக மரணபயம் நீக்கும் சக்தி பெற்றவளாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.

ஆலய அமைப்பு: மேற்கு நோக்கிய வாயிலில், ஆலயம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பில் உள்ள நுழைவுவாயிலில் வலதுபுறம் மகாலஷ்மி, இடதுபுறம் சரஸ்வதியும், நடுநாயகமாக, ராஜராஜேஸ்வரியும் சுதைவடிவில் அமைந்துள்ளனர். ஆலயத்தில் இரண்டு சந்நிதிகளைக் காண்கின்றோம். இடதுபுற, சந்நிதியில், முக்கால் அடி உயர நடராஜர், அரையடி உயர சிவகாமசுந்தரி வீற்றிருக்க, அருகில் சின்னஞ்சிறு வடிவிலான விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் என தெய்வ வடிவங்கள் நிறைந்துள்ளன.

வலதுபுற சந்நிதியில் ஆயிரங்காளியம்மன் எனும் வீரமாகாளியம்மன் சந்நிதி அமைந்துள்ளது. அன்னைகாளி எண்கரங்கள் கொண்டவள். முன்னுள்ள வலது கரத்தில் சூலம், இடது கரத்தில் கபாலம் தாங்கியும் , பின்னுள்ள ஆறு கரங்களில் வாள், கேடயம், மணி, கொடி, உடுக்கை, வேதாளம் ராங்கியும் தென்திசை நோக்கி காட்சி அருளுகின்றாள். இக்கோலத்தை ஐந்தாண்டுகளுக்கொரு முறை இரண்டு நாட்கள் மட்டுமே காண முடியும்.

திருவிழா: அன்னை அருள் பெற்ற வயது முதிர்ந்த சிவனடியார்  திருமலைராயன்பட்டினத்தில் வாழ்ந்த செங்குந்த மரபினராவார். அதனால், இன்றும் இதே மரபினைச்சேர்ந்த குடும்பத்தினரே இக்கோயிலையும், கருவறையில் வைக்கப்பட்டுள்ள பெட்டியையும் பராமரித்து வருகின்றனர்.  அன்னை நின்ற கோலத்தில் காட்சி தருவாள். அன்று காலையில்  இருந்து இரண்டு நாட்கள் மட்டும் அதாவது புதன், வியாழன் ஆகிய இருநாட்களில் பக்தர்களுக்கு அன்னை அருள்காட்சி வழங்குவாள். வெள்ளியன்று அதிகாலை அன்னை மீண்டும் பெட்டிக்குள் வைத்து பூட்டி விடுவார்கள்.  அதன்பிறகு ஐந்தாண்டுகள் மூடிய பெட்டிக்கே பூஜைகள் நடத்தப்படும்.

திருவிழா நாட்கள்: இந்த அற்புத தரிசனம் காணும் நன்னாள் வரும் ஜுன் மாதம் 08 மற்றும்  09 ஆகிய இரண்டு நாள்கள் (புதன் மற்றும் வியாழன்) பகல் இரவு என தொடர்ந்து 48 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்யலாம். இத்தலத்து அன்னை ஆயிரங்காளியம்மன், வேண்டிய வரமருளும் அன்னையாக விளங்குகின்றாள். வேண்டுதல் நிறைவேறியவர் கள் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு காணிக்கை செலுத்துகின்றனர்.

நிர்வாகம்: இவ்வாலயம் திருமலைராயன்பட்டினம் வாழ் செங்குந்தர் மரபினரின்  ஸ்ரீஆயிரங்காளியம்மன் அறக்கட்டளையால் நிர்வகிக்கப் பட்டு வருகின்றது. 

அமைவிடம்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில், நாகூர்} காரைக்கால் வழித்தடத்தில், காரைக்காலில் இருந்து ஐந்து கி.மீ.தொலைவில் திருமலைராயன் ஆறு மற்றும் பிராவடையான் ஆறுகளுக்கு நடுவே திருமலைராயன்பட்டினம் அமைந்துள்ளது.

வரும் ஜுன் 8 மற்றும் 9 தேதிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தவறவிடாதீர்கள், தவறினால் ஐந்தாண்டுகள் கழித்துதான் உங்களால் அன்னையை தரிசிக்க முடியும்.
தொடர்புக்கு: 04368}233888 
கட்டுரை,படங்கள் : 
பனையபுரம் அதியமான்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com