திருச்சிறுகுடி ஸ்ரீ மங்களநாயகி - 70

தெய்வம் நாம் கேட்டதை எல்லாம் தருகிறதா? நிச்சயமாக.
திருச்சிறுகுடி ஸ்ரீ மங்களநாயகி - 70

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா
கிரீசேன உதஸ்தம் முஹூ அதரபாநாகுலதயா

- செளந்தர்யலஹரி 

தெய்வம் நாம் கேட்டதை எல்லாம் தருகிறதா? நிச்சயமாக. நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நாம் விரும்பிய அனைத்தையும் அடைந்து வந்திருக்கிறோம். நாம் எதிர்பார்த்த வழிகளில் அவை வரவில்லை என்றாலும், நமக்கு வசதியான அமைப்பில் ஒவ்வொன்றும் நடந்து வந்திருக்கிறது.

கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தோமானால் அந்தச் சக்தியின் அருளால் நம் ஒட்டு மொத்த வாழ்க்கையும் நலமாக இருப்பதை கவனிக்கலாம்.
"அன்னையே நீயே என் பாதையானாய், 
     பாதையின் ஒளியானாய்
பதியும் காலடித் தடங்களே உன்னுடையதாய், 
     கரம் பற்றிச் செல்கிறாய்'
என்கிறார் ஓர் அம்பிகை உபாசகர்.
" கார்ய காரண நிர்முக்தா' என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். எல்லா உயிர்களிலும் ஒன்றியும், அனைத்திலிருந்து விடுபட்டும், அனைத்திற்கும் மேலான பரப்பிரம்மமாக விளங்குகிறாள் அம்பிகை. காமனின் எதிரியான காமேஸ்வரரின் காதல் நாயகி, அவளின் பெருமையைக் கூற யாருக்குத் திறமையுண்டு?

இறைவன் நினைவிலேயே ஆழ்ந்திருப்பவள் அம்பிகை. அம்பிகையின் ஆசைகளை, விருப்பங்களை நிறைவேற்றும் அன்புடன் ஈசன் என்று தம்பதிகள் எண்ணமும், செயலுமாக இருக்கிறார்கள். உடல் ஈசன் எனில், உள்ளிருந்து இயக்கும் சக்தி அம்பிகை.

அவர்களின் நாடகம் கூட தங்கள் பக்தர்களின் நலனுக்காகவே இருக்கும். ஒவ்வொரு தலங்களும் அவர்களின் நாடகத்தினாலேயே சிறப்பு பெற்று, அடியவர்களின் வினை தீர்க்கும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. அந்த வகையில் "திருச்சிறுகுடி' என்று வழங்கப்படும் "சிறுகுடி' தம்பதிகளின் இடையே விட்டுக் கொடுத்தாலும், புரிதலும் வேண்டும் என்று விளக்கும் தலமாக விளங்குகிறது.

ஒருமுறை கயிலையில் அம்மையும், அப்பனும் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தபோது, தேவியின் பக்கம் வெற்றி திரும்பியது. அப்போது திடீரென ஈசன் அங்கிருந்து காணாமல் போனார். ஐயனைக் காணாமல் திகைத்துப் போன அம்பிகை அவரைத் தேடி அலைகிறாள்.

இதுவும் அவள் விளையாட்டே. அகில லோகத்தையும் ஆட்டுவிக்கும் அன்னைக்குத் தெரியாதா, இது ஈசன் நடத்தும் லீலை என்று. பூமியில் அடியவர்களுக்கு நலம் தரும் தலம் ஒன்று ஏற்படுத்தவே இந்த விளையாட்டு. தேடிக் களைத்த அம்பிகை, காவிரியின் தென்கரையில், வில்வ மரங்கள் அடர்ந்த , அமைதியான ஒரு குளக்கரையில் மண்ணில் லிங்கம் பிடித்து, வழிபடுகிறார்.

காணாமல் போன ஈசன் அங்கு தோன்றுகிறார். மனைவியின் மகிழ்ச்சிக்காக விளையாட்டில் தான் விட்டுக் கொடுக்கவே மறைந்து சென்றதாகவும், ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக, மங்களகரமாக இருக்க, மனைவி மட்டுமல்ல, கணவனும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஈசன் கூறுகிறார். இதை உணர்த்தும் விதமாக இங்கு தான் குடி கொள்ளவே இந்த விளையாடல் என்று அருள் பாலிக்கிறார்.

அம்பிகை சிறுபிடி அளவு மண் எடுத்து லிங்கம் உண்டாக்கி, மங்கள தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்ட தலம் என்பதால் சிறுபிடி என்று அழைக்கப்பட்டு, மருவி "சிறுகுடி' என்று தற்போது அழைக்கப்படுகிறது.

மங்களங்களை அள்ளி வழங்குவதால் அம்பிகை மங்களநாயகி என்றும், ஈசன் மங்களநாதர் என்றும் அழைக்கப் படுகிறார். அம்பிகை தவமிருந்த தீர்த்தம் மங்கள தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த தீர்த்தத்தில் காலை, மாலை நீராடி, அம்பிகையை வழிபட்டால் அங்காரக தோஷம் நீங்குகிறது. வேற்று மதத்தினரும் இங்கு வந்து நீராடி வழிபட்டுச் செல்கிறார்கள்.

மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது. இந்த ஆலயத்தில் கொடிமரம் இல்லை.வெளிப் பிரகாரத்தில் மங்கள விநாயகர், வள்ளி, தெய்வானை சகிதம் சுப்ரமணியர், சந்நிதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் நவக்கிரக சந்நிதியும், இவர்களுடன் கோளறு பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் மூலத் திருமேனியும் அழகுடன் காட்சி அளிக்கிறது.
முன் மண்டபத்தில் தெற்கு நோக்கி அம்பாளின் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலத்தில் அபய வரதத்துடன் காட்சி அளிக்கும் அம்பிகைக்குத்தான் இங்கு அபிஷேகம். மூலவர் அம்பிகை பிடித்து வைத்த ஒருபிடி அளவே உள்ள மண் லிங்கம் என்பதால் இதற்கு அபிஷேகம் கிடையாது.

அம்பிகை இறைவனை ஆலிங்கனம் செய்து கொண்டதால் லிங்கத்தின் நெற்றியில் பள்ளமும், இருபுறமும் கை பிடித்த அடையாளமும் உள்ளன. இக்கோயிலில் சூரியனும், சனீஸ்வரனும் அருகருகே இருப்பது மிகச் சிறப்பான அம்சம். மாசி மாதம் செவ்வாய்க் கிழமை இங்கு வந்து அங்காரகனை தரிசனம் செய்வதும், விசேஷ பூஜைகள் செய்வதும் பக்தர்களின் வழக்கம்.
நவக்கிரக மண்டபத்தில் உள்ள இவரைத் தரிசித்தால் எந்தக் கிரக தோஷம் இருந்தாலும் விலகும் என்கிறார்கள். மிகச் சிறப்பாக விநாயகரும், பைரவரும் இருப்பது, இத்தலத்தின் சிறப்பு. சனீஸ்வரனுக்குக் கிழே சனைச்சரன் என்று எழுதியுள்ளது. இதுவே மிகச் சரியான பெயர். மெதுவாக ஊர்ந்து செல்பவன் என்று இதன் பொருள்.

லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாற்றியே வைக்கப்பட்டுள்ளது.வழக்கமாக துர்க்கை இருக்கும் இடத்தில் அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார். உற்சவ மூர்த்தி சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பு. அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து, அன்னையை ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அம்பிகையின் தோள் மீது கை போட்டு ஈசன் காட்சி தரும் அழகு கண் கொள்ளாதது.
இங்கு வந்து இருவரையும் தரிசனம் செய்தால், குடும்பத்தில் மங்களம் என்றும் நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு அங்காரகனுக்கு தனிச் சந்நிதி உள்ளது. இவரை வழிபட்டால் திருமணத் தடைகள் விலகும் என்கிறார்கள்.

தல விருட்சமாக வில்வம் இருக்கிறது. மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, நவராத்திரி போன்ற உற்சவங்கள் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், ஈசனுக்கும், அன்னைக்கும் அபிஷேகங்கள் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும், தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

சம்பந்தர், சேக்கிழார், செவ்வாய் போன்றோர் இங்கு வந்து அய்யனையும், அம்பிகையையும் வழிபட்டு பலன் அடைந்திருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் புகழப்படும் பண்ணன் என்னும் கொடை வள்ளல் வாழ்ந்த ஊர் சிறுகுடி. "தேன்மலர் பொழிலணி சிறுகுடி' என்று புகழ்கிறார் சம்பந்தர்.

அவரின் வாக்குக்கு ஏற்ப, சுவாமிக்கு முன்னால் முன் மண்டபத்தில், வலப்புறத்தில் சுவர் ஓரத்தில் தேனடை உள்ளது. சாளரம் அமைத்து அதன் வழியே, வெளியிலிருந்து, தேனீக்கள் வந்து போகுமாறு ஏற்பாடு செய்துள்ளார்கள். மண்டபத்தின் உட்புறம் இரும்பு வலை போட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார்கள். 

கணவனைத் தேடிக் கண்டு பிடித்த பெருமிதம் முகத்தில் ஜொலிக்க, கம்பீரமாக நிற்கிறாள் அன்னை. கணவனின் அன்பை முழுமையாகப் பெற்ற ஆனந்தம், தனக்காக அவர் விட்டுக் கொடுத்த பெருமை, வாழும் முறைக்கு அடையாளமாக தன்னுடன் இணைந்து, தன்னை அனைத்து காட்சி தரும் அவரின் மீதான பிரேமையும், அன்பும், லேசான வெட்கமும் முகத்தில் துலங்க, கம்பீரமாக நிற்கிறாள்.

அவளை தரிசித்தாலே அனைவரின் வாழ்விலும் மங்களம் பொங்கும். கயிலையில் இருக்கும் ஈசன் சூட்சுமமாக மறைந்து இங்கு தோன்றியதால் இதற்கு சூட்சுமபுரி என்றும் ஒரு பெயர் உண்டு. 

"சிற்றிடையுடன்  மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடை முடியீரே' என்று சம்பந்தர் இத்தலம் பற்றிப் புகழ்ந்து பாடுகிறார். மிகப் பழமையான கோயில்.  பண்ணன் என்னும் வள்ளல் சோழ வேந்தனால் பாராட்டப் பட்டவன். தனக்கென வாழாப் பிறர்க்குரியன் என்று அவனைப் புலவர் கொற்றங் கொற்றனார் பாராட்டுகிறார்.

அவன் வாழ்ந்து, வணங்கிய தெய்வம் சிறுகுடி சூக்ஷ்ம புரீஸ்வரரும் அம்பிகையும். அம்பிகையின் அருளாலேயே மும்மூர்த்திகளும், பதினான்கு உலகங்களையும் படைத்து, காத்து, அழித்து, தங்கள் வேலையைத் திறம்படச் செய்கிறார்கள். இவர்களால் வணங்கப் படும், எல்லையற்ற பரம் பொருள் அம்பிகையே.

எழிலான தெய்வமாகி நின்று, வணங்கும் அனைவருக்கும் அருளை வழங்குபவள் அன்னை. அவளை வணங்கினாலே, அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன் வந்து சேரும்.
திருவுடை நாயகியாய், மங்களம் அருளும் மங்கள நாயகியை நினைத்தாலே வாழ்வில் அனைத்து செüபாக்கியங்களும் கிடைக்கும். கை கூப்பி நின்றாலே கருணை மழை பொழிபவள் அன்னை ஸ்ரீ மங்கள நாயகி.  

 பேரளத்தை அடுத்துள்ள பூந்தோட்டம் தாண்டி கடகம்பாடி என்னும் ஊரிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் சிறுகுடி உள்ளது.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com