அன்னக் கூடம் அமைத்த அம்பிகை!

கயிலையில் ஒரு நாள் உமாதேவியார் சிவபெருமான் திருக்கண்களை விளையாட்டாக தம் கைகளால் மறைக்க உலகமெலாம்
அன்னக் கூடம் அமைத்த அம்பிகை!

கயிலையில் ஒரு நாள் உமாதேவியார் சிவபெருமான் திருக்கண்களை விளையாட்டாக தம் கைகளால் மறைக்க உலகமெலாம் இருண்டது, ஸ்தம்பித்தது. நித்திய கன்ம அனுட்டானங்கள் தவறியது. அதனால் அம்மையை பாவம் பிணித்தது. தன்னை கடிந்த இறைவனிடம், பிழை பொறுத்தருளமாறு அம்மை வேண்டிட, இறைவனின் ஆணையின்படி பூலோகத்திற்கு வந்து இறைவன் தந்த இரு நாழி நெல்லைக்கொண்டு முப்பத்திரண்டு வகை அறங்களை வளர்த்தாள். "அறம் வளர்த்த நாயகி' (தர்மசம்வர்த்தனி) என்ற திரு நாமத்துடன் திருவையாறு தலத்து இறைவியானாள், என்கின்றன புராணங்கள்.
இதே திருநாமத்துடன் அம்பிகை "ஆற்றூர்' (தற்போது ஆத்தூர் எனப்படுகிறது) என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு அருளுகின்றாள். தல வரலாற்றின்படி, அம்பாள் தர்மசம்வர்த்தனி பூலோகவாசிகளின் பசியைப் போக்க இங்கு அன்னைக்கூடம் அமைத்து அன்னமிட்டாளாம். அக்காரணம் பொருட்டே, அறம் சிறந்து விளங்கி, முன்பு முக்தீஸ்வரம் என்ற பெயருடன் திகழ்ந்த இந்த தலம் பெயர் மாற்றமடைந்து பசி ஆற்றூர் என விளங்கலாயிற்று. இத்திருத்தலம் வந்து வழிபடும் அன்பர்களுக்கு பசிப்பிணி என்பதே ஏற்படாது என்று கூறப்படுகிறது. காஞ்சியிலிருந்து கடல் மல்லைக்கு செல்லும் வழியில் அக்காலத்திலே இருந்த ஆற்றுர் எனப்படும் ஆத்தூர் செங்கல்பட்டிலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் காஞ்சி செல்லும் வழியில் உள்ளது.
இத்திருத்தலத்தில் உள்ளது தான் அருள்மிகு தர்மசம்வர்தனி அம்பிகா சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் தேவஸ்தானம். தன்னை வழிபடுவோருக்கு ஞானத்தையும், மோட்சத்தையும் அருளுபவர் என்ற நோக்கில் மூலவர் முக்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சுமார் 4  அடி உயரத்தில் நெடிதுயர்ந்த திருமேனி கொண்டு லிங்கம் காட்சியளிக்கின்றது. இவரை கருடனும், நாகராஜனும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.  
அம்பிகை நின்ற கோலத்தில் கரங்களில் அங்குசமும், பாசமும் ஏந்தி அபயவரத முத்திரையுடன் அதிரூப சௌந்தர்யத்துடன் காட்சியளிக்கின்றாள். நிறைவான தரிசனம்.
சுமார் 3000 ஆண்டுகள் பழமையானது. இவ்வாலயம் பல மன்னர்கள் காலத்து திருப்பணிகள் கண்டது. இக்கோயிலில் உள்ள 13-ஆம் நூற்றாண்டு, 15-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் பல அரிய தகவல்களை தருகின்றன.
நீண்ட மதிற்சுவர்கள், தோரண வாயில் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், விமானங்களுடன் கூடிய கருவறைகள் என அனைத்து அம்சங்களும் இவ்வாலயத்தில் நேர்த்தியாக காணப்படுகிறது. சுவாமி, அம்பாளுடன், விநாயப் பெருமான், பன்னிருகரங்களுடன் மயில் மீது தனது தேவிமார்களுடன் ஆறுமுகப் பெருமான், ஜேஷ்டாதேவி, வாராஹி அம்மன், கோஷ்ட தெய்வங்கள், பைரவர், சுதை வடிவில் கம்பீரமான ஆடல்வல்லான், நவக்கிரகங்கள், நால்வர், நந்தியெம் பெருமான் ஆகிய தெய்வமூர்த்தங்களும் சன்னதி கொண்டு இங்கு வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்கள். இங்குள்ள 16கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டு திகழ்கிறது. ஆலயம் அருகில் நன்கு பராமரிக்கப்படும் பசு மடம் உள்ளது. கருட தீர்த்தம், நாகதீர்த்தம் (ஏரி) உள்ளது.
நித்தமும் ஆறுகால பூஜைகள், சித்திரை முதல் பங்குனி வரை உள்ள அனைத்து விசேஷ நாள்களும் கொண்டாடப்படுகின்றன. பௌர்ணமிதோறும் பிரகார தேர்வலம் பக்தர்கள் வேண்டுதலின் பலனாக நடைபெறுவது சிறப்பு. நித்திய அன்னதான வைபவம் மாகேஸ்வர பூஜை வழிபாட்டுடன் நடைபெறுகின்றது. பிரதி மாசி மாதம் கடைசியிலும், பங்குனி முதல் நாளிலும் ஈசனின் மேல் கதிரவன் தன் கதிர்களை பரவவிட்டு சூரிய பூஜை நடுத்துவதை தரிசிக்கலாம்.
பரிகாரத்தலம்: இங்கு சுவாமி சந்தானபரமேஸ்வரராக அருள்புரிகின்றார். பள்ளியறை பூஜையில் செவ்வாழை வைத்து படைத்து குழந்தையில்லாதவர்களுக்கு கொடுத்து உண்ணச் சொல்லுகிறார்கள். அதன் பலனாக மழலைப்பேறு கிட்டுவதாக அசாத்திய நம்பிக்கை நிலவுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த குடமுழுக்கு விழா நடத்த வேண்டி திருப்பணி வேலைகள் மேற்கொள்ளும் பொருட்டு சமீபத்தில் பாலாலய பிரதிஷ்டை வைபவம் நடந்துள்ளது. சேவார்த்திகள் பங்களிப்புடன் விரைவாக திருப்பணி வேலைகள் இனிது நடைபெற முக்தீஸ்வரர் அருளை வோண்டுவோமாக!
செங்கல்பட்டிலிருந்து ஆத்தூர் செல்ல பேருந்து வசதி மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

தகவல்களுக்கு: முத்துக்குமார் 9443880932, கமலக்கண்ணன் சிவாச்சாரியார்: 7305016153.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com