வளமான வாழ்வளிக்கும் வரலட்சுமி விரதம்

ஆடி மாத விழாக்களில் முக்கியமானது வரலட்சுமி விரதம்.  வளர்பிறையில் பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.  
வளமான வாழ்வளிக்கும் வரலட்சுமி விரதம்

ஆடி மாத விழாக்களில் முக்கியமானது வரலட்சுமி விரதம்.  வளர்பிறையில் பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.  இந்தப் பூஜை செய்யப்படும் வீடுகளில் துக்கங்களையும்,  கஷ்டங்களையும் போக்கியருள்வாள் தேவி என்கிறது புராணம்.  ஐஸ்வர்ய யோகங்களும் கிடைக்கும். இந்த ஆண்டு ஆக. 5-இல் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.

தேவர்களும்  அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது,  தோன்றிய மகாலட்சுமி,  நாராயணரையே திருமணம் செய்ய வேண்டும் என்று திருக்கண்ணமங்கையில் வந்து தவமியற்றி, அவரை அடைந்தாள்.  ஜனகர் யாகத்துக்காக நிலத்தை உழும்போது,  நிலத்தில் கிடைத்தவள் சீதாதேவி. பிருகு மகரிஷி பிரார்த்தித்ததால் குடந்தையில் பொற்றாமரை குளத்தில் அம்பிகை அவதரித்தார். 

அதேபோல,  பிருகு மகரிஷி பிரார்த்தனைக்கு இணங்க காஞ்சியில் பொற்றாமரை குளத்தில் பெருந்தேவி தாயாராக அவதரித்தார். பிருகு மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று அமிர்தவல்லி என்ற பெயரில் மகாலட்சுமி புஷ்கரணியில் மாசி மகத்தன்று சென்னை மயிலாப்பூரில் அவதரித்தார். திருத்தங்கலில் லட்சுமி, நாராயணனைக் குறித்து தவம் செய்து அவரை அடைந்ததாகக் கூறப்படுகிறது.  

அன்னை மகாலட்சுமி ஒருமுறை மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும்,  பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மாவதி என்றும், அக்னிக் குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னி கர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள். 

மகாவிஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு திரு என்கிற மகாலட்சுமி வந்து நின்ற தலம் திருநின்றவூர் என்றானது.  சமுத்திர ராஜனே சமாதானமாக "என்னைப் பெற்ற தாயே' என்று இறைஞ்சி வேண்டிக் கொண்டதாலேயே இவளுக்கு இத்தலத்தில் "என்னைப் பெற்ற தாயார்'  எனும் திருப்பெயர். 

லட்சுமிதேவி, வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகின்றாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.

பெருமாளின் திருமார்பில் உறையும் லட்சுமிக்கு யோக லட்சுமி என்று பெயர். இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி,  வீரலட்சுமி என்று பெயர். நிர்குண பிரம்ம ஸ்ருஷ்டி செய்ய இச்சை கொண்டு முதன் முதலில் எடுத்த சகுண பிரம்மம் ரூபம் இந்த மகாலட்சுமி சொரூபமாகும். கையில் மாதுளம்பழம் "அக்ஷய பாத்திரம்' கதை கேடயம் கொண்டும் சிரசில் சிவலிங்கமும் நாகாபரணம் தரித்தும் சிம்ம வாகனம் கொண்டும் சர்வாலங்கார பூஷிதையாக தங்க நிறத்தவளாக மஞ்சள் வஸ்திரம் தரித்தவளாக தோன்றிய தேவி ஸ்ருஷ்டியை தொடங்கினாள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமான சத்யபாமாவால் நரகாசுரனை வதைக்க, அவன் வேண்டுதலால் உருவானதுதான் தீபாவளித் திருநாள். ஓர் ஏழைத்தாயின் ஏழ்மையைப் போக்க, ஆதிசங்கரர் அருளிச் செய்த கனகதாரா ஸ்தோத்திரம் மிகவும் பெருமை வாய்ந்தது. 

பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்களப் பொருள்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்களும் அவளுக்கு உண்டு.

மகாலட்சுமிக்கு உலூகம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம். 

இதையும் படிக்க: அரங்கேற்ற ஐயனார்!

மகாலட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பௌர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.

மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்துக்குள் பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும். எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலி பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com