சுகமே தரும் சுந்தரன்

ஆஞ்சனேயர் கோயில் நாமக்கல் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது.
சுகமே தரும் சுந்தரன்

வைகுண்டத்தில் ஏற்பட்ட பிரணயத் தோஷத்தால் மகாலட்சுமி,  பெருமாளைப் பிரிந்து பூரணமான ஒரு நீர்நிலை அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நரசிம்ம உருவில் தரிசிக்க வேண்டும் என கடும்தவம் செய்து வந்தாள்.  திரேதா யுகத்தில் ராமாயண யுத்தத்தின்போது ராவணனால் வானர சேனைகளும், ராமரும்  மயங்கினர் . 

ஜாம்பவான் அறிவுறுத்தியபடி ,  இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சனேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலே வைத்துவிட்டு திரும்பினார். அப்போது, நேபாள கண்டகி நதியில் நீராடும்போது இரு துளையுள்ள சாளக்கிராமம் ஒன்று தவழ்ந்து வந்து அனுமன் கையில் நின்றது. சாளக்கிராமமேனி திருமாலின்  அம்சமாக இருந்ததால் அதனை ஏந்தி எடுத்துக் கொண்டு வான்வழியாகப் பறந்து வந்து கொண்டிருந்தார் ஆஞ்சனேயர்.

அந்தப் பகுதியில் வந்தபோது கீழே மஹாலட்சுமி தாயார் தவம் செய்து கொண்டிருந்த பர்ணசாலை அருகில் நீர் நிலையைக் கண்டார். மகாலட்சுமியை வணங்கியபோது,  தான் நரசிம்ம ரூபத்தைக் காணவே தவம் இருப்பதாகவும் தெரிவித்தார். சூரியன் உதயமாகும் நேரமானதால்  தமது கையில் இருந்த சாளக்கிராமக்கல்லை  கீழே சுத்தப்படுத்தி  வைத்து விட்டு நீராடி  நித்ய கர்மாவான பூஜைகளைச் செய்து முடித்தார்.

மீண்டும் வந்து சாளக்கிராமத்தை தூக்க முயலும்போது, "ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்து விட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்' என்றொரு அசரீரி கேட்க, ஆஞ்சனேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார். உரிய காலம் வந்ததால்,  மகாலட்சுமிக்கு காட்சி தந்து,   மணம் செய்து கொண்டு  லட்சுமி நரசிம்மராக  மாறினார்.

ராமன் போரில் வென்று சீதையை மீட்டபிறகு ஆஞ்சனேயர் மீண்டும் சாளக்கிராம இடத்துக்கு வந்தார். அப்போது, அது பெரியதாக வளர்ந்து ஒரு துளையில் லட்சுமி நரசிம்ம மூர்த்தியாக காட்சி தந்தார்.  நரசிம்மர் தோன்றி அனுமனிடம்  "இனி இந்த மலையிலேயே  தான் லட்சுமி நரசிம்மராக சேவை சாதிக்கப் போவதாகக்கூறி,  தன் எதிரிலேயே நிலை  கொண்டு பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டும்' என்று  உத்தரவிட்டார். அதுமுதல் கூப்பிய கரத்தோடும் இடுப்பில் வாளுடனும், சாளகிராமத்தால் ஆன மாலையும் அணிந்து காட்சி தருகிறார்.  

சனி தோஷங்கள் நீங்க,  ஆஞ்சனேயருக்கு நேர்த்திக்கடனாக வடை மாலை சாற்றுவது வழக்கம்.  துளசி மாலை, சந்தன காப்பு, வெண்ணெய் காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி அலங்காரங்கள் இங்கு சிறப்பு. தங்க தேர் உலா ஆஞ்சனேயர் கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.  

இந்த ஆஞ்சனேயர் கோயில் நாமக்கல் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது.  திராவிடக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும். ஆஞ்சனேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஏகசிலாவாலான  ஆஞ்சனேயருக்கு விமானம் கிடையாது. திறந்த கூரையுடன் உள்ள அவரை, பக்தர்கள் நிழலில் நின்று தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளது . மேல் விமானம் அமைக்க ஆஞ்சனேயரிடம் உத்தரவு கேட்க, " நரசிம்மருக்கு கோபுரம் இல்லை. அவர் அமர்ந்திருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அவருக்கு கோபுரம் இல்லாததால், அவரது தாசனான தனக்கும் கோபுரம் தேவையில்லை' என்று ஆஞ்சனேயர் கூறி மறுத்துவிட்டதாக ஐதீகம்.

பல்லவர் காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டது. "அதியேந்திர விஷ்ணுக்ரகம்'  என்பது கோயிலின் பெயர் என்பது கல்வெட்டுகளின் மூலம் தெரிய வருகிறது.  மலையின் கிழக்கு புறம் ரங்கநாதருக்கான குடைவரைக்கோயில் உள்ளது. இங்கு 5 தலையுடைய  கார்கோடகன் என்னும் பாம்பின்மீது படுத்தவாறு திருமால் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பங்குனி ஹஸ்தம் திருவிழா 15 நாள்கள் விமரிசையாக நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் நடைபெறும் அனுமன் ஜயந்தி விழா மிக சிறப்பானதாகும்.  
இந்த ஆண்டு டிசம்பர் 23-இல் ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சார்த்தி வழிபாடும், சிறப்புப் பூஜைகளும் நடைபெறுகின்றன.

தொடர்புக்கு: 04286233999; 9789747385.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com